உலகையே உலுக்கியுள்ள சாத்தான்குளம் விவகாரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருப்பது கருத்து அல்ல; கலப்படமற்ற விஷம் என, திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏ விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, பொன்முடி இன்று (ஜூலை 2) வெளியிட்ட அறிக்கை:
"வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஜெயராஜும், பென்னிக்ஸும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்' என்று ஒரு இதயமற்ற அறிக்கையை வெளியிட்டு, திமுக தலைவர் ஏதோ அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் என்று மரணத்திலும் மனித நேயமின்றி குற்றம்சாட்டியுள்ள அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயர் நீதிமன்றம் தெளிவான உத்தரவு பிறப்பித்த பிறகும் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிக்கை வெளியிட்டிருப்பது வேதனைக்குரியது. உயர் நீதிமன்ற உத்தரவில் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் கைது செய்யப்பட்ட பிறகும் கூட 'இது வழக்கமான லாக் அப் மரணங்கள் போல் அல்ல' என்று சட்ட அமைச்சரே கூறுவது நிதானமாக மனசாட்சியுடன் கூறும் கருத்தா அல்லது முதல்வர் பழனிசாமியின் கூலியாட்கள் எழுதிக் கொடுத்த அறிக்கையில் வெறும் கையெழுத்து மட்டும் போட்டாரா சண்முகம்?
» லாக் அப் மரணம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே காவல்துறையின் நிலைப்பாடு: தென்மண்டல ஐஜி முருகன் பேட்டி
'இவ்வழக்கை மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான சிபிஐ வசம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்திருந்தது' என்று 14 நாட்களுக்குப் பிறகு உலகத்தையே உலுக்கிய ஒரு இரட்டைக் கொலை விவகாரத்தில் சி.வி.சண்முகம் தெரிவித்திருப்பது கருத்து அல்ல; கலப்படமற்ற விஷம்!
உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு கூறியிருப்பது போல் 'கொலை வழக்கே பதிவு செய்யாமல் அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விட்டோம்' என்று அமைச்சர் கூறுவது யாரை ஏமாற்ற? கொலையிலும் கண்துடைப்பு நாடகம் போடுவது கொடிய குற்றமல்லவா?
சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைத்துள்ள அதிமுக ஆட்சியில், தற்போது இருக்கும் முதல்வர் முதல், அமைச்சர்கள் வரை, ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலையை மறைக்க இவ்வளவு கீழ்த்தரமான அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்.
உயர் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளும் வரை சி.வி.சண்முகம் எங்கே போனார்? குற்றவியல் நீதிமன்ற நடுவர் அந்த இருவரையும் ரிமாண்ட் செய்தது சட்டப்படி தவறு என்று எங்கும் குரல் ஒலித்தபோது சட்ட அமைச்சர் எங்கே தூங்கிக் கொண்டிருந்தார்? குற்றுயிரும் குலையுயிருமாகக் கொண்டு வரப்பட்ட இருவரையும் கிளைச்சிறையில் அடைத்த சிறை அதிகாரி குறித்து மக்கள் எல்லாம் கொதித்து எழுந்தபோது சிறைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எங்கே முடங்கிக் கிடந்தார்?
'அப்பாவி இருவரது இறப்பை வைத்து, அரசியல் ஆதாயம் தேடும் திமுகவும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் திட்டமிட்டு சூழ்ச்சிகள் செய்வதாகத் தோன்றுகிறது' என்று திமுக தலைவரை விமர்சனம் செய்துள்ள சி.வி.சண்முகம், 'அரசின் மீது பழி போடும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதை உணர முடிகிறது' என்கிறார்.
சாத்தான்குளத்தில் நடந்த ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணங்களுக்கு 'கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறது' என்று உயர் நீதிமன்றம் சொன்னதை மறைப்பது ஏன்? காவல் நிலையத்திற்குப் போன அமைச்சரின் துறையைச் சேர்ந்த நீதிமன்ற நடுவரையே மிரட்டிய காவல்துறை அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரானதை மறைப்பது ஏன்? உயர் நீதிமன்றத்தின் முன்பு சட்டத்துறை நியமனம் செய்த அரசு வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தில் நீதிபதியிடம் நடந்து கொண்டதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது சண்முகத்தின் நினைவுக்கு இன்னுமா வரவில்லை?
ஆகவே, இரட்டைக் கொலையை மறைக்கச் சூழ்ச்சி செய்யும் யுக்திதான் அமைச்சர் சண்முகத்தின் அறிக்கை!
'Justice for Jayaraj and Benicks' என்னும் பதாகைகளைத் தூக்கிப் பிடிப்பதும் வழக்கின் போக்கைக் குலைப்பதற்கும் அரசியலாக்குவதற்கும் திமுக சதிசெய்து வருகிறது என்று குறை சொல்லும் சி.வி.சண்முகம், அந்த இருவரின் கொடூரமான மரணத்தை ஈவு இரக்கமின்றி கொச்சைப்படுத்தியுள்ளார்.
அவர்களைக் காவல் நிலையத்தில் அடித்துக் கொன்று விட்டு, அதை மறைக்க லாக் அப் மரணம் இல்லை என்று மறைத்து, உடல் நலக்குறைவு என்று சப்பைக் கட்டு கட்டி, உயர் நீதிமன்றம் தலையிடும்வரை கைது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து, நீதிபதியை மிரட்டியவர்களை காத்திருப்போர் பட்டியலில் கொண்டு வந்து விட்டு, பிறகு சில மணி நேரங்களிலேயே அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தி மிகப்பெரிய சதித் திட்டத்தில்- சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது காவல்துறைக்கு பொறுப்பான முதல்வரும், சட்டத்துறை மற்றும் நீதித்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் சி.வி.சண்முகமும்தான்!
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 120-க்குத் தேவையான அனைத்தையும் செய்திருப்பது இந்த அரசும், ஆதரித்து அறிக்கை விடும் அமைச்சர்களும்தான்!
ஏழை அழுத கண்ணீர் உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் முதற்கட்ட நீதியைப் பெற்றுத் தந்திருக்கிறது. அதை இதுபோன்ற அறிக்கைகள் மூலம் அமைச்சர் சி.வி.சண்முகம் போன்றவர்கள் தடுக்காமல் இருந்தாலே நீதி நிலைநாட்டப்படும்!
நெறி சார்ந்த அரசியலுக்குத் துளியும் இலக்கணம் இல்லாத அமைச்சர் சி.வி.சண்முகம் திமுக தலைவரின் நெறி சார்ந்த அரசியலைக் கேள்வி கேட்கத் தகுதியும் இல்லை; தார்மீக உரிமையும் இல்லை என்றும், உயர் நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின்படி, ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலையில் தொடர்புடையவர்கள், உதவியவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு பொன்முடி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago