எல்லா காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி, சென்னையில் கட்டுப்பாட்டு மையத்தை அமைக்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அன்புமணி இன்று (ஜூலை 2) வெளியிட்ட அறிக்கை:
"சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் சித்திரவதைக் கொலைகள் நாடு முழுவதும் உள்ளவர்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளன. அவர்களின் உயிரிழப்புக்குக் காரணமான காவலர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்ற எண்ணம் அனைத்துத் தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ள நிலையில், இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதும், அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் ஆணைப்படி இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் முழுமையாகப் பதிவாகியிருந்தால், அதைக் கொண்டே தவறு இழைத்தவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும். தேவையற்ற சர்ச்சைகள் எதுவும் ஏற்பட்டு இருந்திருக்காது. ஆனால், அக்காவல் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் அனைத்துக் காட்சிகளும் அடுத்த நாளே அழிந்துவிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் சாட்சியங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
'காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் பொது ஆவணங்கள். அவை அனைத்தும் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும். ஏதேனும் சாட்சிக்காக பொதுமக்கள் தரப்பிலிருந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் கோரப்பட்டால், அவற்றை காவல் நிலைய நிர்வாகம் வழங்க வேண்டும்' என்று தமிழ்நாடு தகவல் ஆணையம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.
ஆனால், அத்தீர்ப்புக்கு மாறாக காவல் நிலையக் கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஒரே நாளில் அழிந்து விடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால், அந்தக் காவல் நிலையத்தில் தொடர்ந்து தவறுகள் நடப்பதாகவும், அதை மறைக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் எண்ணத் தோன்றுகிறது.
அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் குற்றப்புலனாய்வில் கண்காணிப்பு கேமராக்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குற்றங்களைத் தடுப்பதற்காகவும், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்வதற்காகவும்தான் சென்னை போன்ற நகரங்களின் சாலைகளில் 50 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா வீதம் அமைக்கப்பட்டிருக்கிறது.
சாலைகளில் எதற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவோ, அதற்கான காரணங்கள் அனைத்தும் காவல் நிலையங்களுக்கும் பொருந்தும். இனி வரும் காலங்களிலாவது காவல் நிலையங்களில் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதை உறுதி செய்வதற்கு கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
காவல் நிலையங்களில் குற்றங்கள் நடப்பதைத் தடுக்க, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டு பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின்போது, 'காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டன. தமிழகம் முழுவதும் உள்ள 1,567 காவல் நிலையங்கள் மற்றும் புதிதாகத் தொடங்கப்படும் காவல் நிலையங்களில் வரவேற்பரை, நுழைவாயில், லாக்கப் ஆகிய இடங்களில் தலா ஒரு கேமரா வீதம் மொத்தம் 3 கேமராக்கள் அடுத்த 5 ஆண்டுகளில், அதாவது 2020-ம் ஆண்டுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்" என்று தமிழக அரசு உறுதி அளித்திருந்தது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள 80 விழுக்காட்டுக்கும் கூடுதலான காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது வரவேற்கத்தக்க ஒன்று என்றாலும், காவல் நிலைய கண்காணிப்பு கேமராக்களின் இயக்கம், பதிவு ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்தால், சாத்தான்குளத்தில் செய்யப்பட்டது போன்று கேமராக்களில் பதிவான காட்சிகள் அழிக்கப்படும் ஆபத்து உள்ளது. அதைக் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
காவல் நிலையங்களில் கேமராக்களை நிறுவும் பொறுப்பும், அவற்றை இயக்கும் பொறுப்பும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சைபர் கிரைம் பிரிவு, தொழில்நுட்பப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த காவலர்களைக் கொண்டு அமைக்கப்படும் தனிக்குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் சென்னையில் புதிதாக அமைக்கப்படும் கட்டுப்பாட்டு அறையில் பதிவாகும்படி ஏற்பாடு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு கேமராவிலும் பதிவாகும் காட்சிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆவணப்படுத்தப்பட்டு சேமித்து வைக்கப்பட வேண்டும். அவ்வாறு ஆவணப்படுத்தப்பட்ட காட்சிகள் குறைந்தது 5 ஆண்டுகளுக்குப் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும். இது கடினமானதோ, சாத்தியமற்றதோ இல்லை. சென்னை மாநகர சாலைகளில் மட்டும் சுமார் 4 லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவற்றில் பதிவாகும் காட்சிகள் சேகரிக்கப்படும்போது, தமிழகக் காவல்நிலையங்களில் அதிகபட்சமாக உள்ள 5 ஆயிரம் கேமராக்களின் பதிவுகளைச் சேகரித்து வைப்பது கடினமானது அல்ல; மிக எளிமையானது.
எனவே, தமிழகத்தின் அனைத்துக் காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளைப் பதிவு செய்வதற்காக சென்னையில் தனிக் கட்டுப்பாட்டு அறையை தமிழக அரசு அமைக்க வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டு காவல் நிலையங்கள் குற்றம் நடக்காத பகுதிகளாக, மனித உரிமைகள் மதிக்கப்படும் இடமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்".
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago