காரைக்காலில் ஆண்டுதோறும் மிகவும் விமரிசையான வகையில் நடத்தப்படும் காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி மாப்பிள்ளை அழைப்புடன் எளிமையான வகையில் இன்று (ஜூலை 1) மாலை தொடங்கியது.
63 நாயன்மார்களில் அமர்ந்த கோலத்தில் சிறப்பிடம் பெற்றவரும், பெண் நாயன்மாரும், ஐந்தாம் நூற்றாண்டில் அவதரித்தவருமான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார், சிவபெருமான் இருக்கும் கைலாய மலைக்கு காலால் நடந்து செல்லல் ஆகாது என்று தலையால் நடந்து சென்றதால் தாயும் தந்தையுமற்ற இறைவனால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பட்டதாகப் புராண வரலாறு கூறுகிறது.
இவரின் திருப்பதிகங்கள் மூவர் தேவாரத்துக்கு முன் மாதிரியானவை. தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்து வைத்தவர். தமிழில் முதன் முதலாகப் பதிகம் பாடும் முறையை அறிமுகப்படுத்தியவர். இவருடைய பதிக முறையை பின்பற்றியே தேவார திருப்பதிகங்கள் பாடப்பெற்றன. அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்தத் திருப்பதிகம், திருஇரட்டை மணிமாலை போன்ற நூல்களைப் படைத்து சைவைத் தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியுள்ளார். இந்தளம், நட்டப்பாடை என்ற இரு ராகங்களை உருவாக்கி பக்திப் பாடல்களைப் படைத்தவர்.
இப்படிப் பல்வேறு சிறப்புகள் பெற்ற காரைக்கால் அம்மையாருக்கு காரைக்கால் நகரப்பகுதியில் பாரதியார் சாலையில் தனிக் கோயில் உள்ளது. இக்கோயிலில் அம்மையாரின் வரலாற்றை விளக்கும் விதமாக ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படும் மாங்கனித் திருவிழா மிகவும் சிறப்பு பெற்றதாகும்.
அம்மையார் திருக்கல்யாணம், பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து வழிபடும் வகையில் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் அம்மையார் இல்லத்துக்கு அமுதுண்ணச் செல்வது, அம்மையாரின் கணவர் பரமதத்தர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள பாண்டிய நாட்டுக்குச் செல்லும் நிகழ்வு, முதல் மனைவியைக் கண்டதும் இரண்டாவது மனைவி குழந்தையுடன் காலில் விழுந்து வணங்குவது, அம்மையார் பேய் உருவம் பூண்டு கைலாயம் செல்வது உள்ளிட்ட பல நிகழ்வுகளுடன், மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக அனைத்து மதத்தவரும் கலந்து கொள்ளும் வகையில் இவ்விழா நடந்து வருகிறது. காரைக்காலின் தனி அடையாளமாக இந்த விழா அமைந்திருக்கிறது.
புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கனோர் பக்திப் பரவசத்துடன் வந்து இவ்விழாவில் குறிப்பாக மாங்கனிகளை வாரி இறைத்து வழிபடும் வைபவத்தில் கலந்து கொள்வார்கள். விழாவையொட்டி ஒரு மாத காலத்துக்கு அம்மையார் மணி மண்டபத்தில் நாள்தோறும் மாலை பரத நாட்டியம், இசைக் கச்சேரிகள், இலக்கியச் சொற்பொழிவுகள், நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். காரைக்கால் அம்மையார் அமைந்துள்ள பாரதியார் சாலையில் ஒரு மாத காலத்துக்கு திருவிழாக் கடைகள் அமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், நிகழாண்டு வழக்கமான வகையில் இல்லாமல் விழா நடத்தப்படுகிறது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பொது முடக்கம் அமலில் உள்ளதால் காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் சார்பில் நடத்தப்படும் மாங்கனித் திருவிழாவை பக்தர்கள் பங்கேற்பின்றி எளிய முறையில் கோயிலுக்குளேயே நடத்த கைலாசநாதர் கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் புதுச்சேரி அரசிடம் அனுமதி கோரப்பட்டு, ஒப்புதல் கிடைத்த நிலையில், விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் கைலாசநாதர் கோயிலுக்குள் நடத்தத் திட்டமிடப்பட்டது. வழக்கமாக அம்மையார் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாணம், அமுதுபடையல் போன்ற நிகழ்வுகள் நிகழாண்டு கைலாசநாதர் கோயிலுக்குள்ளேயே நடத்தப்படுகிறது.
அதனடிப்படையில் மாங்கனித் திருவிழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் இன்று காலை நடைபெற்றது. தொடர்ந்து அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவின் முதல் நிகழ்வான மாப்பிள்ளை (பரமதத்தர்) அழைப்பு இன்று மாலை 7.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. வழக்கமாக ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோயிலிலிருந்து மாப்பிள்ளை அழைப்பு நடைபெறும். இன்று கைலாசநாதர் கோயிலுக்குள்ளேயே ஒரு பகுதியிலிருந்து மாப்பிள்ளை அழைப்பு தொடங்கி நடைபெற்றது. மங்கள வாத்தியம் முழங்க பரமதத்தர் மாப்பிள்ளை அலங்காரத்தில் கோயிலின் உள், வெளி பிரகாரங்களைச் சுற்றி சுவாமி சன்னதிக்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது.
நாளை (ஜூலை 2) காலை 9 முதல் 10.30 மணிக்குள் காரைக்கால் அம்மையார்- பரமதத்தர் திருக்கல்யாணம், மாலை 6 மணிக்கு பிச்சாண்டவர் வெள்ளைச் சாற்றி புறப்பாடு, நாளை(ஜூலை 3) மாலை 3.30 மணிக்கு பிச்சாண்டவருக்கு மகா அபிஷேகம், 4-ம் தேதி காலை 11.30 மணிக்கு பிச்சாண்டவர் கோயில் உள் பிராகாரத்தில் புறப்பாடு (மாங்கனி இறைத்தல் வைபவம்), மதியம் 12.15 மணிக்கு காரைக்கால் அம்மையார் மாங்கனியுடன் சிவபெருமானுக்கு அமுது படைத்தல் நிகழ்வு, இரவு 8 மணிக்கு பரமதத்தருக்கு இரண்டாவது திருமண நிகழ்வு உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் கோயில் இணையதளம் (www.karaikaltemples.com), யூ டியூப் சேனல் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago