ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கு; தமிழக முதல்வர் உரிய படிப்பினைகளைப் பெற்றுக் கொள்வாரா?-மார்க்சிஸ்ட் கேள்வி

By செய்திப்பிரிவு

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பின்படி, ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூலை 1) வெளியிட்ட அறிக்கை:

"சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டு மரணமடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சுயமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அவ்விசாரணையின் இறுதிக்கட்ட உத்தரவு நேற்று (ஜூன் 30) வெளியிடப்பட்டது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடைபெற்றுள்ள அக்கிரமங்கள், அநியாயங்களும் அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும் மிகத் துல்லியமாக குறிப்பிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த உத்தரவு பிறப்பித்த நீதிபதிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் அடிப்படையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கோவில்பட்டி, முதலாவது நீதிமன்ற நடுவர் பாரதிதாசனைக் காவல்துறையினர் அவமானப்படுத்தும் வகையில் நடந்துள்ள விவரங்களை அவர் அறிக்கையாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில், காவல் நிலையத்திலிருந்த காவல்துறையினர் தனது விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனவும், உரிய மரியாதை கொடுக்கவில்லை எனவும், தன்னை அவமானப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். காவலர் மிக கீழ்த்தரமான முறையில் நீதிபதியை திட்டியதையும் தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். காவலர்கள் பயன்படுத்திய தடிகளையும் கொடுக்க மறுத்ததோடு, அங்குள்ள ரத்தக் கறைகளையும் அழிப்பதற்கு முயற்சித்துள்ளனர்.

காவல் நிலையத்திலிருந்த வீடியோ காட்சிகளும் அழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அனைத்திற்கும் மேலாக நீதிபதியின் விசாரணைக்கு ஒத்துழைக்க வந்த தலைமைக் காவலர் ரேவதி மிரட்டப்பட்டதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றிலிருந்தே சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியிலிருந்த காவல்துறையினர் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. விசாரணைக்கு வந்த நீதிபதியையே இவ்வளவு கேவலப்படுத்திய காவல்துறையினர், காவல் நிலையத்திற்கு வந்த அப்பாவிப் பொதுமக்களை எப்படி நடத்தியிருப்பார்கள் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. இந்தக் கொலைகாரர்கள் கையில்தான் பென்னிக்ஸும், ஜெயராஜும் கொடுமையான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இவையெல்லாவற்றையும் அழுத்தமாக குறிப்பிட்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளது.

சாத்தான்குளம் காவல்துறையினரின் அராஜகமான இந்தப் போக்குகள் குறித்து நீதிபதி அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் இதுபற்றி காவல்துறைக்குப் பொறுப்பான தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாய்திறக்க மறுத்து வருகிறார். முன்னர், பென்னிக்ஸும், ஜெயராஜும் மூச்சுத் திணறலில் இறந்துள்ளதாக குற்றமிழைத்த காவல்துறையினரின் குரலாகப் பேட்டியளித்த முதல்வர், இதுவரையில் மேற்கண்ட காவல்துறையினர் மீது குறைந்தபட்ச நடவடிக்கை கூட எடுக்காமல் இருப்பது ஏன்?. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒருபக்கம் இருந்தாலும் மேற்கண்ட சம்பவங்கள் அடிப்படையில் இக்காவலர்கள் மீது இப்போதாவது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனது தீர்ப்பில் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் காணப்படும் காயங்களைப் பார்க்கும்போது, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றுவதற்கான முகாந்திரம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. சிபிஐ பல கட்ட அனுமதிகளைப் பெற்று விசாரணையைத் தொடங்குவதற்கு கால தாமதமாகும். இச்சம்பவத்தில் ஒரு நிமிடம் கூட தாமதிப்பது கூடாது என்ற நோக்கில் உடனடியாக சிபிசிஐடி அதிகாரி அனில்குமார் விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த விசாரணையை உயர் நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் எனவும் கூறியுள்ளது. கணவனையும், மகனையும் பறிகொடுத்துத் தவிக்கும் செல்வராணியின் குடும்பத்தினருடைய கண்ணீரைத் துடைக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்பதையும் நீதிபதிகள் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, குற்றமிழைத்த காவல்துறையினர் உட்பட அனைவரையும் கைது செய்ய வேண்டுமென ஒத்தகுரலில் தமிழகம் ஒலித்தபோது, அதற்கு தமிழக அரசு செவி கொடுக்க மறுத்துவிட்டது. ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் இவ்வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கொலை வழக்காகப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என உத்தரவிட்டுள்ளது.

வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு காவல் நிலையத்தை வருவாய்த்துறையினர் கையகப்படுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டு, தற்போது வருவாய்த்துறையினர் காவல் நிலையத்தைக் கையகப்படுத்தியுள்ளனர். இதிலிருந்தாவது தமிழக முதல்வர் உரிய படிப்பினைகளைப் பெற்றுக் கொள்வாரா என்பதே கேள்வி.

சிபிசிஐடி போலீஸார் உடனடியாக இந்த வழக்கை கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். சாத்தான்குளம் காவல்நிலையம் தொடங்கி, அரசு மருத்துவமனை, சாத்தான்குளம் நடுவர் நீதிபதி, கோவில்பட்டி சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். மூன்று மாத காலத்திற்குள் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, ஆறுமாத காலத்திற்குள் இவ்வழக்கை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் வகையில் சிபிசிஐடி காவல்துறை துரிதமாக செயல்பட வேண்டுமென வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இதே கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவும் நிலுவையில் உள்ளது. அடுத்தடுத்து நடைபெறும் வழக்கு விசாரணையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிடுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாதிக்கப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை அரசியல் கட்சிகளும், பல்வேறு ஜனநாயக சக்திகளும், தொண்டு அமைப்புகளும், வழக்கறிஞர்களும் இணைந்து செயலாற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்".

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்