என்எல்சி தொடர் விபத்துகள்: மத்திய அரசு உயர்மட்டக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும்; மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

நெய்வேலி நிறுவனத்தில் நடைபெறும் தொடர் விபத்துகள் தொடர்பாக மத்திய அரசு உயர்மட்டக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூலை 1) வெளியிட்ட அறிக்கை:

"இந்தியாவின் நவரத்தின நிறுவனங்களில் ஒன்றான என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இன்று காலை 2-வது அனல் மின்நிலையத்தில், 5-வது அலகில் கொதிகலன் வெடித்து ஆறு தொழிலாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், 16-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கோர விபத்தில் இன்னும் பலர் பாதிக்கப்பட்டிக்கக்கூடும் எனக் கிடைக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.

இதே இரண்டாவது அனல்மின் நிலையத்தில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 6-வது அலகில் கொதிகலன் வெடித்து, 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர், ஆறு பேர் படுகாயமடைந்தனர். இந்தக் காயம் ஆறுவதற்கு முன்பே, மீண்டும் இந்தக் கொடூரமான விபத்து நடைபெற்றுள்ளது. நெய்வேலி நிறுவனத்தில் நடைபெறும் தொடர் விபத்துகள் பல தொழிலாளர்களின் உயிரிழப்புக்கு நெய்வேலி நிறுவனத்தின் நிர்வாகமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

குறிப்பாக, அனல் மின் நிலையத்தில் பாய்லர்கள் பராமரிப்புப் பணியை பொதுத்துறை நிறுவனமான திருச்சி பெல் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு மாறாக, தனிப்பட்ட ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்துள்ளனர். தனிப்பட்ட ஒப்பந்ததாரர்கள் இந்தக் கொதிகலன்களை முறையாகப் பராமரிக்காத காரணத்தினாலேயே இந்தக் கோர விபத்துகள் தொடர்ந்து நடைபெறுகின்றன எனத் தெரியவருகிறது. இந்த ஒப்பந்த ஏற்பாடுகளில் ஊழல் - முறைகேடுகளும் இருப்பதற்கு வாய்ப்புள்ளதாகக் கருத வேண்டியுள்ளது.

துயரத்தில் வாடுகிற உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். நெய்வேலி நிறுவனம் இறந்துபோன தொழிலாளர்களுக்கு தலா ரூ.50 லட்சம் நஷ்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரப் பணியும், படுகாயமடைந்தவர்களுக்கு பூரண குணமடையும் வரை உயர் சிகிச்சையளிப்பதோடு தலா ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு அளிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், மத்திய அரசு நெய்வேலி நிறுவனத்தில் நடைபெறும் தொடர் விபத்துகள் தொடர்பாக உயர்மட்டக்குழு அமைத்து விசாரிக்க வேண்டுமெனவும், அதில் சம்பந்தப்பட்ட உயர்மட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

இத்தகைய விபத்துகள் தொடர்ந்து நடைபெறா வண்ணம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அக்குழு விசாரித்து அளிக்கும் பரிந்துரைகள் மீது, நெய்வேலி நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்"

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்