புதுச்சேரியில் மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி; பாதிப்பு எண்ணிக்கை 739 ஆக அதிகரிப்பு

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் இன்று புதிதாக 30 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 739 ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் (ஜூலை 1) புதிதாக 30 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 739 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 426 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 301 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (ஜூலை 1) கூறும்போது, "புதுச்சேரியில் அதிகபட்சமாக நேற்று (ஜூன் 30) 634 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் இன்று அவர்களுள் 30 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 19 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 6 பேர் ஜிப்மரிலும், 5 பேர் மாஹே பிராந்தியத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 8 பேர், ஜிப்மரில் 5 பேர், 'கோவிட் கேர் சென்டரில்' 5 பேர், காரைக்காலில் 10 பேர், மாஹேவில் ஒருவர் என 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 301 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 17 ஆயிரத்து 281 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 16 ஆயிரத்து 180 பரிசோதனைகள் ‘நெகட்டிவ்’ என்று வந்துள்ளது. 329 பரிசோதனைகள் முடிவுக்காகக் காத்திருப்பில் உள்ளன. புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக சராசரியாக 30 முதல் 35 வரை கரோனா தொற்று பாதிப்பு வருகிறது.

நேற்று மத்திய அரசு காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக நாளை (ஜூலை 2) முதல்வர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் எதைச் செய்தால் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று கூற உள்ளேன்.

அதன் பிறகு, மத்திய அரசு சொன்னது நடைமுறைக்கு வருமா? அல்லது புதுச்சேரிக்கு சில மாற்றங்கள் வருமா? என்பது தெரியவரும். தளர்வு அளிப்பதில் தவறு இல்லை. தளர்வுக்குப் பிறகு, பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கடைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.

புதுச்சேரியில் 10 பேரைப் பார்த்தால் அதில் 7, 8 பேர் முகக்கவசம் அணிகிறார்கள். 60, 70 சதவீதம் பேர் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கிறார்கள். இன்று கோயில்களுக்குச் சென்று பார்த்தேன். கோயில்களில் அனைவரையும் சோதனை செய்வது, கைகழுவ வைப்பது, தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வைப்பது எனத் தேவையான ஏற்பாடுகளைச் சிறப்பான முறையில் செய்துள்ளனர்.

அதேபோல், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் கடைகளிலும் விதிமுறைகளைக் கடைப்பிடித்தால் அரசு எடுத்த நடவடிக்கைகள் மூலம் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். நானும், சுகாதாரத்துறை இயக்குநரும் நாளை காரைக்கால் சென்று, அங்கு என்ன தேவை உள்ளது என்று கேட்டறிய உள்ளோம். அதன்பிறகு மாஹே செல்ல உள்ளோம்.

கரோனா தொற்று வந்த பிறகு புதுச்சேரி மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கடந்த 100 நாட்களாக குடும்பத்தைக் கூடப் பார்க்காமல் மக்களுக்குச் சேவை புரிந்து வருகின்றனர். அனைவருக்கும் தேசிய மருத்துவர் தினத்தையொட்டி வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

மோகன்குமார்: கோப்புப்படம்

சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறும்போது, "வெளியே அதிகமாகச் செல்லும் ஆண்களால் வீட்டில் உள்ள பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 15 பேர் ஏற்கெனவே தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். மற்றவர்களுக்கு எப்படித் தொற்று வந்தது, அவர்கள் யாருடன் தொடர்பில் இருந்தனர் என்று விசாரித்து வருகிறோம்.

இதுவரை 308 பகுதிகளைக் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவித்துள்ளோம். அதில் 125 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. தற்போது 183 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. குறிப்பாக, இன்று 13 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 20 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்