தேசிய மருத்துவர்கள் தினத்தை ஒட்டி பணியிடமாற்றம் எனும் தண்டனையை முழுமையாக ரத்து செய்வதோடு, அரசு மருத்துவர்களுக்கு நாட்டிலேயே சிறந்த ஊதியத்தை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமிக்கு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் கடந்த ஆண்டில் ஆர்ப்பாட்டம், தர்ணா, மனிதசங்கிலி உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், தமிழக அரசு இக்கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.
இதையடுத்து, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் விடுத்த வேண்டுகோளை ஏற்று அனைவரும் பணிக்குத் திரும்பினர். இதன் தொடர்ச்சியாக, போராட்டத்தில் ஈடுபட்ட 35 பெண் டாக்டர்கள் உட்பட 118 பேர் கிராமப்புறம் மற்றும் மலைப் பிரதேச பகுதி உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜி) மாநிலத் தலைவராகவும் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த டாக்டர் லட்சுமி நரசிம்மனும் ஒருவர். இவர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து ராமநாதபுரத்துக்கு மாற்றப்பட்டார். இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் கடந்த பிபரவரி மாதம் இவர் மாரடைப்பால் காலமானார்.
இந்நிலையில், பணியிடமாற்றம் எனும் தண்டனையை ரத்து செய்து, மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தேசிய மருத்துவர்கள் தினமான இன்றும் இதே கோரிக்கையை இச்சங்கம் முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக இன்று அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை
1) டாக்டர்கள் தினத்தை ஒட்டி அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜூலை முதல் தேதியை ஆண்டுதோறும் தேசிய டாக்டர்கள் தினமாகக் கொண்டாடுகிறோம். வருடம் முழுவதும் டாக்டர்கள் செய்யும் சேவைக்காக, மரியாதை தரும் விதமாக, நாடெங்கும் இது கொண்டாடப்படுகிறது.
2) மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதல்வராக இருந்த டாக்டர் பிதான் சந்திர ராய் டாக்டராகவும், முதல்வராகவும் இருந்து ஆற்றிய பணிகளுக்காக, அவரைக் கவுரவிக்கும் விதமாக அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளான ஜூலை 1-ம் தேதியை டாக்டர்கள் தினமாகக் கொண்டாடுகிறோம்.
3) தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு நீண்ட காலமாக அரசு உரிய ஊதியம் தராததால், நம்முடைய ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி, கடந்த ஆண்டு நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும் டாக்டர்கள் தினத்தை கருப்பு தினமாகக் கொண்டாடினோம். அதன் பிறகு தொடர்ந்து மருத்துவர் எல்.என். (லட்சுமி நரசிம்மன்) தலைமையில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தினோம்.
4) போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தற்போது வரை தண்டனையை அனுபவித்து வருகிறோம். கோரிக்கைக்காக மருத்துவர் எல்.என். உயிரையே கொடுத்தார். இருப்பினும் இதுவரை நம்முடைய கோரிக்கையை மட்டும் அரசு நிறைவேற்றவில்லை.
5) செத்து பிழைச்சேன் நான். நீஙக தான் அன்னைக்கி என் உயிரைக் காப்பாற்றி வாழ வச்சீங்க டாக்டர் என்று அவ்வப்போது நம்மிடம் யாராவது சொல்வதைப் பார்க்கிறோம். அதுவும் தற்போது கரோனாவிடமிருந்து மக்களைக் காப்பாற்ற, அரசு மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பணி செய்வதாக மக்களும், சமூக ஆர்வலர்களும் மட்டுமல்ல நம் அமைச்சருமே பாராட்டுகிறார்கள்.
6) இருப்பினும் ஒரு புறம் மருத்துவர்கள் உயிரோடு இருக்கும்போது, நம்முடைய உழைப்பை மட்டும் நன்றாகவே பயன்படுத்திக் கொள்ளும் அரசு, உரிய சம்பளத்தை மட்டும் தர மறுத்து வருகிறது. இன்னொரு புறம் மருத்துவர் உயிரிழந்தால் அந்த மருத்துவரின் குடும்பத்திற்கு அரசு எதுவுமே செய்வதில்லை. உதாரணம் சமீபத்தில் உயிரிழந்த நீலகிரி மருத்துவர் ஜெயமோகன் மற்றும் கோவில்பட்டி மருத்துவர் ராஜேஸ் குமார்.
7) பொதுவாக 'யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள்'. ஆனால் இங்கே அரசு மருத்துவர்கள் உயிரோடு இருக்கும்போதும் அரசிடம் நமக்கு மரியாதை இல்லை. மக்களுக்காகப் பணி செய்து உயிரையே விட்டாலும் மரியாதை கிடையாது என்பதை டாக்டர்கள் தினத்தன்று வேதனையுடன் பதிவு செய்கிறோம்.
8) எனவே, தற்போது கரோனாவை எதிர்கொள்ள முக்கிய பலமாக அரசு மருத்துவர்களையே நம் அரசு கருதுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதுவும் இந்த கரோனா தொற்று தங்களுக்கும் ஏற்படுமே என்று எந்த மருத்துவருமே ஒதுங்கிக் கொள்ளவில்லை. பொது ஊரடங்கால் பல சிரமங்களையும் மீறி முழு வீச்சில் பணி செய்து வருகிறோம்.
9) எனவே டாக்டர்கள் தினத்தை ஒட்டி, நம் தண்டனையை முழுமையாக ரத்து செய்வதோடு, அரசு மருத்துவர்களுக்கு நாட்டிலேயே சிறந்த ஊதியத்தை வழங்க தமிழக முதல்வர், சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதாரச் செயலாளர் நடவடிக்கை எடுப்பதன் மூலம், இந்த ஆண்டு டாக்டர்கள் தினம் டாக்டர்களுக்கு மட்டுமன்றி, நம் சுகாதாரத் துறைக்கே மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago