திருச்சி மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த வி.வரதராஜூ இன்று பணி ஓய்வு பெற்றார்.
இதையொட்டி மாநகர காவல்துறையினர் சார்பில் மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் இன்று (ஜூன் 30) அணிவகுப்பு நடத்தி வி.வரதராஜூக்கு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், பணி ஓய்வுக் காலம் சிறப்பாக அமைந்திட காவல் அதிகாரிகள், காவல் அமைச்சுப் பணியாளர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இது தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
"மாநகர காவல் ஆணையராகப் பணிநிறைவு செய்துள்ள வி.வரதராஜூ 1991-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் டிஎஸ்பியாகப் பணியில் சேர்ந்து சிதம்பரம் உட்கோட்டத்தில் பணியாற்றினார். அதன்பின் முதல்வர் பாதுகாப்புப் பிரிவிலும் (1994-96), தூத்துக்குடி நகர டிஎஸ்பியாகவும், கோவை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக 1998-ம் ஆண்டில் புலனாய்வுப் பிரிவிலும் பணியாற்றினார். கடந்த 2000-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றியபோது, அங்கு கள்ளச்சாராயம் அடியோடு கட்டுப்படுத்தப்பட்ட காரணத்தினால் இவருக்கு 'உத்தமர் காந்தி' விருது வழங்கப்பட்டது.
பதவி உயர்வு பெற்று மதுரை மாவட்ட எஸ்.பி.யாகவும், சென்னை மாநகர காவல்துறையில் வண்ணாரப்பேட்டை, அடையாறு, நுண்ணறிவுப் பிரிவு, புனித செயின்ட் தாமஸ் மவுண்ட் துணை ஆணையராகவும் பணிபுரிந்தார். அப்போது சென்னை பெசன்ட் நகரில் ஸ்டேட் வங்கியில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் மிகவும் சாதுர்யமாக துப்பு துலக்கினார்.
2003 முதல் 2005 வரை திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருக்கும்போது வட இந்திய பவாரியா கொள்ளையர்களைக் கண்டுபிடித்து கொடுங்குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
2011 முதல் 2012 வரை திருநெல்வேலி சரக டிஐஜியாக பணியாற்றியபோது கூடங்குளம் போராட்டத்தினைத் திறம்படக் கையாண்டு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியதைப் பாராட்டி 2012-ல் இவருக்கு குடியரசுத் தலைவரின் மெச்சத்தகுந்த பணிக்கான விருது வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து சென்னை மாநகரில் நுண்ணறிவுப் பிரிவில் இணை ஆணையர், கூடுதல் ஆணையர் என 4 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், 2016-ம் ஆண்டு மத்திய மண்டல ஐ.ஜி.யாகப் பொறுப்பேற்றார். அந்தக் காலகட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள், விநாயகர் ஊர்வலங்கள், வேதாரண்யம், பொன்பரப்பி, பொன்னமராவதி பகுதிகளில் ஏற்பட்ட கலவரங்களைக் கையாண்டு சட்டம் ஒழுங்கினை நிலை நாட்டியது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் திருச்சி மாநகர காவல் ஆணையராகப் பொறுப்பேற்ற பிறகு குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, கரோனா தடுப்புப் பணி போன்றவற்றிலும் முனைப்புடன் செயல்பட்டு அனைத்துத் தரப்பினரின் பாராட்டினைப் பெற்றார்"
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வி.வரதராஜூ பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து திருச்சி மாநகர காவல் ஆணையர் பணியிடத்தை, மத்திய மண்டல ஐ.ஜி. அமல்ராஜ் கூடுதலாகக் கவனித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago