பொதுமக்களிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக திருச்சி சரகத்தில் 2 ஆய்வாளர்கள், 29 உதவி ஆய்வாளர்கள் உட்பட 80 பேரை சட்டம், ஒழுங்கு காவல் பணியிலிருந்து விடுவித்து டிஐஜி வே.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
வாகனத் தணிக்கை, வழக்கு விசாரணை, போக்குவரத்து ஒழுங்கு உட்பட பல்வேறு பணிகளின்போது காவல்துறையினர் பொதுமக்களிடம் தரக்குறைவாக நடந்து கொள்வதாகவும், தாக்குதலில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்தனர். காவல்துறையினர் தாக்கியதே இவர்களின் மரணத்துக்குக் காரணம் என எழுந்துள்ள குற்றச்சாட்டு நாடு தழுவிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட அனைத்துக் காவலர்களும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே திருச்சி சரகத்தில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் தவிர்ப்பதற்காக திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய 5 மாவட்டக் காவல்துறையினருக்கும் டிஐஜி வே.பாலகிருஷ்ணன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இதுதவிர ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பணியாற்றக்கூடிய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களில் பொதுமக்களைக் கண்ணியக்குறைவாக நடத்துவோர், தகாத வார்த்தைகளால் பேசுவோர், தாக்குதலில் ஈடுபடுவோர் குறித்த விவரங்களையும் காவல் நிலையங்கள் வாரியாகச் சேகரித்தார்.
அதன்தொடர்ச்சியாக 2 ஆய்வாளர்கள், 29 உதவி ஆய்வாளர்கள், 21 தலைமைக் காவலர்கள், 6 முதல்நிலை காவலர்கள், 22 இரண்டாம் நிலைக் காவலர்கள் என 80 பேரை சட்டம், ஒழுங்கு காவல் பணியிலிருந்து இன்று (ஜூன் 30) விடுவித்தார்.
இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையத்திடம் டிஐஜி வே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:
''சட்டம், ஒழுங்கு காவல் பணியில் இருப்பவர்களுக்குப் பொறுமை வேண்டும். பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பொதுமக்கள் தவறாக நடந்து கொண்டாலும், அதுபோன்ற சமயங்களில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த பயிற்சி எடுத்து வந்தவர்கள்தான் காவல்துறையினர். எனவே, நாமும் பொதுமக்கள்போல நடந்து கொள்ளக்கூடாது என திருச்சி சரகத்திலுள்ள அனைத்துக் காவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர காவல் நிலையங்களில் புகார் கொடுக்கவோ அல்லது விசாரணைக்கோ செல்லும்போது சில சமயங்களில் போலீஸார் கடுமையாகவும், மரியாதைக் குறைவாகவும் நடந்து கொள்வதாக பொதுமக்களிடமிருந்து ஏற்கெனவே புகார்கள் வரப்பெற்றிருந்தன. அவைகுறித்து அந்தந்த உட்கோட்ட டிஎஸ்பி மற்றும் தனிப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு கேட்டிருந்தேன்.
அதனடிப்படையில் முதற்கட்டமாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 2 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 17 பேர், புதுக்கோட்டையில் 8 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 21 பேர், கரூரில் 3 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 15 பேர், பெரம்பலூரில் 5 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 9 பேர், அரியலூரில் 8 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 18 பேர் என மொத்தம் 80 பேர் சட்டம் -ஒழுங்கு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் நாளை (ஜூலை 1) முதல் அந்தந்த மாவட்ட எஸ்.பி அலுவலகங்களில் மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் மூலம் சி.பி.டி (Cognitive Behavioural Therapy) பயிற்சி அளிக்கப்படும். அப்போது ஒவ்வொருக்கும் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து, அதிலிருந்து அவர்கள் மீள தேவையான உதவிகள் செய்யப்படும்.
பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்படும். இப்பயிற்சியின்போது சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்களின் நடத்தையில் தனிப்பட்ட முறையில் நல்ல மாற்றம் ஏற்பட்டால், அவர்கள் மீண்டும் சட்டம், ஒழுங்கு காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவர்".
இவ்வாறு டிஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago