உடல் வலிமையைக் காட்டி மிரட்டல்; சிசிடிவி காட்சிகள் அழிப்பு: கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பரபரப்புத் தகவல்

By கி.மகாராஜன்

சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்றபோது, ஏடிஎஸ்பி உடல் வலிமையைக் காட்டியும், போலீஸார் ஒருமையில் பேசியும், அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி மிரட்டியதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு அனுப்பிய அறிக்கையில் கோவில்பட்டி நீதித்துறை நடுவர் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான காவல் நிலையத்துக்கு நேரில் சென்று விசாரிக்க கோவில்பட்டி முதலாவது நீதித்துறை நடுவருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அதன்படி நீதித்துறை நடுவர் எம்.எஸ்.பாரதிதாசன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நேரில் சென்று விசாரித்தார்.

பின்னர் அவர் உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக ஜூன் 28-ல் நண்பகல் 12.45 மணிக்குச் சென்றேன். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டி.குமார், டிஎஸ்பி சி.பிரதாபன் ஆகியோர் ஆய்வாளர் அறையில் இருந்தனர்.

இருவரும் ஒருமுறை கூட முறையாக வணக்கம் செலுத்தாமல் அலட்சிய மனப்பான்மையுடனும், பொறுப்பற்ற தன்மையுடனும் நின்று கொண்டிருந்தனர். டி.குமார் உடல் பலத்தைக் காட்டுவது போன்ற உடல் அசைவுகளைச் செய்தபடி நின்று கொண்டிருந்தார்.

அவரிடம் இந்த வழக்கை உயர் நீதிமன்றம் கண்காணித்து வருகிறது என்று சொன்ன பிறகும் மிரட்டும் தொனியிலான பார்வையுடனும் உடல் அசைவுகளுடன் நின்று கொண்டிருந்தார்.

பொது நாள் குறிப்பேடு மற்றும் இதர பதிவேடுகளைக் கேட்டபோது அவற்றைத் தர நடவடிக்கை எடுக்காமல் டி.குமார் காவலர்களை ‘ஏ இத கொண்டு வா, அத கொண்டு வா’ என்று அதட்டும் தொனியில் கூறிக்கொண்டு அங்கேயே நின்றிருந்தார். வழக்கின் ஆவணங்களை எழுத்தர் தாமதமாகக் கொண்டு வந்து கொடுத்தார்.

காவல் நிலையக் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பதிவிறக்கம் செய்ய முயன்றபோது சிசிடிவியின் ஹார்டு டிஸ்க்கில் பதிவாகும் காட்சிகள் தினமும் தானாகவே அழிந்து போகுமாறு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. சம்பவ நாளான ஜூன் 19 முதலான எவ்விதக் காணொலிப் பதிவுகளும் கணிணியில் இல்லை. அவை அழிக்கப்பட்ட நிலையில் இருந்தன.

காவலர் மகாராஜானிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டும் அவர் பயத்துடன் சரிவரப் பதில் அளிக்கவில்லை. சம்பவ இடத்தில் சாட்சியாக இருந்த தலைமைக் காவலர் ரேவதியின் சாட்சியம் நிதானமாகப் பதிவு செய்யப்பட்டது. அவர் மிகுந்த பயத்துடனும், தான் சொல்வதை வெளியே சொல்லிவிட வேண்டாம், தான் சாட்சியம் அளிப்பதை வெளியே இருப்பவர்கள் கேட்டுக்கொண்டிருப்பார்கள் என பயத்துடன் தெரிவித்தார்.

பின்னர் நீதிமன்ற ஊழியர்களை அறைக்கு வெளியே பாதுகாப்புக்காக நிறுத்திய போதும், போலீஸார் காவல் நிலையத்தின் வேப்ப மரத்தின் கீழ் அவ்வப்போது கூட்டமாக நின்று கொண்டு சாட்சியத்தைப் பதிவு செய்ய முடியாதவாறு கிண்டல் செய்துகொண்டு சிரமம் ஏற்படுத்தி அசாதாரண சூழ்நிலைகளை ஏற்படுத்தினர்.

ரேவது தனது வாக்குமூலத்தில் கைதிகள் இருவரையும் அங்கிருந்த காவலர்கள் விடிய விடிய லத்தியால் அடித்ததாகவும், இதில் லத்தி மற்றும் டேபிளில் ரத்தக்கறை படிந்துள்ளதாகவும், அவற்றை அழிக்க வாய்ப்பிருப்பதால் அவற்றைக் கைப்பற்ற வேண்டும் என்றும் கூறினார். அந்த லத்தியை எடுக்கும்படி காவலர்களைக் கேட்டபோது அவர்கள் காதில் விழாதது போல் இருந்தனர். கட்டாயப்படுத்தி கேட்டபிறகே லத்தியைக் கொடுத்தனர்.

மகாராஜன் என்பவர் என்னை (நீதித்துறை நடுவர்) பார்த்து என் காதில் விழும்படி, உன்னால ஒன்னும் பண்ண முடியாது’ என ஒருமையில் தரக்குறைவாகப் பேசி அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினார்.

அங்கிருந்த காவலர்களில் ஒருவரிடம் லத்தியைக் கேட்டபோது அவர் சுவர் ஏறிக் குதித்து தப்பியோடிவிட்டார். இதை அங்கிருந்த காவலர்கள் வீடியோவில் படம் பிடித்தனர்.

இதனால் சூழல் சரியில்லாத நிலையில் அங்கிருந்து கிளம்ப நேரிட்ட போது சாட்சியத்தில் கையெழுத்திட ரேவதி மறுத்துவிட்டார். பின்னர் அவரது பாதுகாப்பை உறுதி செய்து கையெழுத்து பெறப்பட்டது. அங்கு பாதுகாப்பு இல்லாததாலும், போலீஸார் ஆங்காங்கே சூழ்ந்து கொண்டு நடக்கும் நிகழ்வுகளை செல்போனில் படம் பிடித்து நீதிமன்ற ஊழியர்களை மிரட்டியதாலும் அங்கிருந்து புறப்பட்டு திருச்செந்தூர் அரசினர் விருந்தினர் மாளிகைக்குச் சென்றேன். அங்கிருந்து மாவட்ட நீதிபதியிடம் செல்போனில் தகவல் தெரிவித்தேன்''.

இவ்வாறு நீதித்துறை நடுவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்த அறிக்கை அடிப்படையிலேயே தூத்துக்குடி ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, காவலர் மகாராஜன் மீது உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்