தவறுசெய்யும் காவல்துறையினர் மீது புகார் அளிக்க தனி அமைப்பு: உச்ச நீதிமன்ற உத்தரவை முழுமையாகப் பின்பற்றுமா தமிழகம்?

By க.சக்திவேல்

பொதுமக்கள் யாராவது குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால், காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கலாம். ஆனால், காவல்துறையினரே புகாரில் சிக்கினால் யாரிடம் தெரிவிப்பது?. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகவே, தவறுசெய்யும் காவல்துறையினர் மீது புகார் அளிக்க தனி அமைப்பை (Police Complaints Authority) உருவாக்க வேண்டும் எனக் கடந்த 2006-ம் ஆண்டு அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுப்படி, தனி அமைப்பை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2019 நவம்பரில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

இதற்குப் பதிலளித்த தமிழக அரசு, தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த சட்டத்தின்கீழ் 2019 நவம்பர் 14-ம் தேதி, காவல்துறையினர் மீது புகார் தெரிவிக்க மாநில, மாவட்ட அளவில் தனி அமைப்பு (பிசிஏ) உருவாக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தது.

மாநில அளவிலான அமைப்பின் தலைவராக தமிழக உள்துறைச் செயலர் செயல்படுவார் என்றும், டிஜிபி, கூடுதல் டிஜிபி (சட்டம், ஒழுங்கு) ஆகியோர் அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, மாவட்ட அமைப்பின் தலைவராக மாவட்ட ஆட்சியரும், உறுப்பினர்களாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளரும் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருந்து வருகிறது.

இது தொடர்பாக வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் காவலில் யாரேனும் உயிரிழந்தால் அவரது வாரிசுகள், நெருங்கிய உறவினர்கள் மாநில, மாவட்ட அமைப்பிடம் புகார் அளிக்கலாம். அதேபோல, பாலியல் வன்கொடுமை, போலீஸ் காவலில் துன்புறுத்தல், பணமோசடி, நில மோசடி போன்றவற்றில் ஈடுபடுவோர் குறித்தும் புகார் அளிக்கலாம்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், அதற்கு மேல் அந்தஸ்தில் உள்ளவர்கள் மீதான புகார்களை மாநில அளவிலான அமைப்பிலும், துணை காவல் கண்காணிப்பாளர் வரையிலான அந்தஸ்தில் உள்ள காவல்துறையினர் மீதான புகார்களை மாவட்ட அளவிலான அமைப்பிடமும் தெரிவிக்கலாம். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாநில ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி இருக்க வேண்டும். அதேபோல, மாவட்ட அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி இருக்க வேண்டும். இதற்கு மாறான அமைப்பை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைப்பு உருவாக்கப்பட்டால்தான் உரிய முறையில் விசாரணை நடைபெறும். அந்த அமைப்பின் நோக்கம் நிறைவேறும்".

இவ்வாறு வழக்கறிஞர் சூரியபிரகாசம் கூறினார்.

உரிய நீதி கிடைக்காது

மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன் கூறுகையில், "கேரளா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற இடங்களில் உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி புகார் தெரிவிப்பதற்காக அமைப்பை உருவாக்கியுள்ளனர். அங்கெல்லாம் மாநில அளவிலான புகார் தெரிவிக்கும் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளே நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு அதிகாரிகளும், காவல்துறையினருமே அந்த அமைப்பில் இருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்காது. மாவட்ட அளவிலான புகார்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடமே அளிக்க வேண்டும் என்றால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். நீதி வேண்டி பல ஆயிரம் செலவு செய்து, சாதாரண மக்களால் நீதிமன்றங்களில் வழக்கு நடத்த முடியாது. எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவை முழுமையாகப் பின்பற்றி, காவல்துறையினர் மீது புகார் தெரிவிப்பதற்கான அமைப்பை தமிழக அரசு உருவாக்க வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்