கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த தந்தை, மகனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையைப் பார்க்கையில் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரித்துப் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.
நீதித்துறை நடுவர் நடத்திய விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க மறுத்தது, நீதித்துறை நடுவரை தவறாகப் பேசியது, நீதித்துறை நடுவர் விசாரணையை வீடியோவில் பதிவு செய்தது போன்ற காரணங்களுக்காக தூத்துக்குடி மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக இன்று உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூவரும் நேரில் ஆஜராகினர். நெல்லை சரக ஐஜி பிரவீன் குமார் மற்றும் தூத்துக்குடி எஸ்.பி. அருண் பாலகோபாலன் ஆகியோரும் ஆஜராகினர்.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''நீதித்துறை நடுவரின் விசாரணைக்குப் போதிய ஒத்துழைப்பு வழங்காத ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நீதித்துறை நடுவரை மரியாதைக் குறைவாகப் பேசிய காவலர் மகாராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த 24 போலீஸாரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ''சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நீதித்துறை நடுவர் அளித்த அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி மற்றும் காவலர் பிரபாகரன் மீதான குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடரும். அவர்கள் தனித்தனியே வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளலாம்'' என்றனர்.
தொடர்ந்து அரசு வழக்கறிஞர், ''மூவரும் செய்தது தவறுதான். இருப்பினும் அதிக மன அழுத்தம் காரணமாக சம்பவம் நடைபெற்றுள்ளது'' என்றார்.
''நீதித்துறை நடுவர்தான் விசாரணை நடத்துகிறார் என்பது அவர்களுக்குத் தெரியுமா? தெரிந்தும் ஏன் பிரச்சினை பெரிதாகும் அளவிற்கு இவ்வாறு நடந்து கொண்டனர்? 3 பேர் தரப்பில் வழக்கறிஞர் நியமிக்க 4 வாரம் அவகாசம் வழங்கப்படுகிறது'' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அவமதிப்பு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
பின்னர், ''இந்த வழக்கை சிபிஐ பல்வேறு அனுமதிகளைப் பெற்று விசாரணையைத் தொடங்குவதற்குள் தடயங்களை அழிக்க வாய்ப்புள்ளது. போலீஸார் அனைவரும் கெட்டவர்கள் அல்ல. ஒரு சில போலீஸாரின் நடவடிக்கைகளால் இது போன்ற தவறுகள் நேரிடுகிறது'' என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் நீதிபதிகள், தந்தை, மகனின் முதல் நிலை பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பார்க்கையில் உயிரிழந்த இருவரின் உடலில் அதிக காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யவும் முகாந்திரம் உள்ளது.
நீதித்துறை நடுவரின் அறிக்கையில் காவலர் ரேவதி சாட்சி அளிக்கையில் மிகவும் அச்சத்துடன் காணப்பட்டுள்ளார். எனவே அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை நீதிமன்றம் தாமதம் ஏற்படுவதை விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கிக் காத்துள்ளனர்.
எனவே ஒரு நொடி கூட வீணாகக்கூடாது. சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் வரை நெல்லை சரக ஐஜி இந்த வழக்கு விசாரணையை ஏற்க இயலுமா? அல்லது நெல்லை சிபிசிஐடி உடனடியாக வழக்கு விசாரணையை கையில் எடுக்க முடியுமா?என்பது குறித்து தகவல் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago