கரோனா பெருந்தொற்று மட்டுமல்ல, எந்தவொரு பேரிடராக இருந்தாலும் பேரிடர் காலம் முதல் அதற்குப் பின்னான காலம் வரை பெரும் தாக்கங்களுக்கு ஆட்படுபவர்கள் 18 வயதுக்குட்பட்ட இளம் சிறார்களே. அதிலும், பெண் குழந்தைகள் மிக எளிதில் கல்வி இடைநிற்றல், பாலியல் வன்கொடுமைகள், குழந்தைத் திருமணங்கள் உள்ளிட்ட அனைத்துவிதச் சுரண்டல்களுக்கும் ஆளாகின்றனர்.
சுனாமி, வெள்ளம், பெருந்தொற்று என எல்லா இடர்களின்போதும் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்ததை புள்ளிவிவரங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. அத்தகைய மோசமான நிலை, கரோனா காலத்திலும் நிகழாமல் இல்லை. கரோனா காலத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 'யுனிசெஃப்' (UNICEF) அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. குழந்தைகளின் நலத்தைப் பேணிப் பாதுகாப்பது நம் கடமையாக இருக்க வேண்டும் என, உலக நாடுகளுக்கு யுனிசெஃப் அறைகூவல் விடுக்கிறது. அந்த அமைப்பு அளித்துள்ள சில புள்ளிவிவரங்கள் குழந்தைகளின் தற்போதையை நிலை குறித்து நமக்கு எளிதில் உணர்த்திவிடும்.
கரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 150 கோடி குழந்தைகளின் (97%) கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண் குழந்தைகள் இடைநிற்றல் விகிதம் அதிகரிக்கும் என யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. பள்ளிகள் மூடப்பட்டதால் பள்ளி சார்ந்த சத்துணவுத் திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதனால், குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா பெருந்தொற்றின்போது 2014-2016 ஆண்டு காலத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை, புறக்கணிக்கப்படுதல், பாலியல் வன்கொடுமைகள், பதின்பருவ காலத்திலேயே கர்ப்பமாதல் உள்ளிட்டவை பெருமளவில் அதிகரித்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வீடுகளிலேயே நடப்பவை. பெரும்பாலான நாடுகளில் மூன்றில் 2 குழந்தைகள் தங்களைக் கவனிப்பவர்களாலேயே பாதிக்கப்படுகிறார்கள்.
உலக அளவில் ஆண்டுதோறும் 2-ல் ஒரு குழந்தை ஏதேனும் ஒருவகையான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக யுனிசெஃப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கையே கணிசமாக உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2000-ம் ஆண்டிலிருந்து பல்வேறு முயற்சிகளால் குறைந்து வரும் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை, 9 கோடியே 40 லட்சமாக சரிந்துள்ளது. ஆனால், கரோனா பாதிப்பால், 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயரும் என எச்சரிக்கை விடுத்துள்ள யுனிசெஃப் அறிக்கை, உலகம் முழுவதும் சில நாடுகளில் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை 0.7 சதவீதமாக அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது நிலைமையின் தீவிரத்தைச் சொல்கிறது.
ஒருபுறம் அதிகரிக்கும் வறுமை, குழந்தைகளைத் தொழிலாளிகளாக்கி அவர்களின் பால்யத்தைத் தின்ன இருக்கிறது. இன்னொருபுறம், குழந்தைகளையே தின்ன இருக்கிறது.
இந்தியா உட்பட தெற்கு ஆசிய நாடுகளில் உள்ள குழந்தைகள் வறுமைக்குத் தள்ளப்படுவார்கள் என்கிறது ஐநாவின் சமீபத்திய ஆய்வறிக்கை. மேலும் 5 வயதுக்குட்பட்ட 8.8 லட்சம் குழந்தைகள் இறக்க நேரிடும் என்கிறது அந்த ஆய்வறிக்கை.
கரோனா நடத்திவரும் தொற்று யுத்தத்தின் அடுத்த பெரும் சீரழிவாக குழந்தைத் திருமணங்கள் இருக்கப்போகிறது என எச்சரிக்கிறது ஐ.நா. உலக அளவில் ஆண்டுதோறும் 1 கோடியே 20 லட்சம் பெண் குழந்தைகளுக்கு 18 வயதுக்குள் திருமணம் நடைபெறுகிறது. அதாவது, 3 நிமிடத்திற்கு ஒரு குழந்தைத் திருமணம் நடைபெறுகிறது. கரோனா பெருந்தொற்றால் அடுத்த 10 ஆண்டுகளில் 1 கோடியே 30 லட்சம் குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் என ஐநா எச்சரித்துள்ளது.
சர்வதேச அமைப்புகள் விடுக்கும் இத்தகைய எச்சரிக்கைகள் பல, இந்தியாவில் ஊரடங்கின் தொடக்கத்திலேயே தென்படத் தொடங்கிவிட்டன.
இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஆரம்பகாலமான மார்ச் 20 முதல் மார்ச் 31 வரையிலான 11 நாட்களில் மட்டும், 'சைல்ட்லைன் இந்தியா' உதவி எண்ணுக்கு (1098) பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள் தொடர்பாக 92 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன.
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள இந்தக் காலகட்டத்தில் கொலை உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் கணிசமாகக் குறைந்திருந்த காலத்திலும், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், குழந்தைத் திருமணங்கள் உள்ளிட்டவை அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன என்பதை சில புள்ளிவிவரங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.
ஊரடங்கு காலத்தில் எவ்வளவு குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன, அவற்றுள் எவ்வளவு திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என, தமிழக சமூக நலத்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம்.
"ஊரடங்கு என்பதால், மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள்தான் அலுவலகத்திற்கு வருகின்றனர். அவர்களுள் பலரும் வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டதால் பணிக்கு வர முடியவில்லை. பணியாளர்கள் பற்றாக்குறையால் மார்ச் மாதத்திலிருந்து குழந்தைத் திருமணங்கள் குறித்து சரியாகப் பதிவு செய்யப்படுகிறதா என்று தெரியவில்லை. சாதாரணமான காலத்தில் வரும் புகார்களில் மூன்றில் ஒரு பங்கு புகார்கள்தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தத் தரவுகள் சரிதானா என்பதில் எனக்குச் சந்தேகம் உள்ளது. 'சைல்ட் லைன்' அமைப்புக்குத்தான் புகார்கள் வருகின்றன. அதனால் அவர்களிடம் ஒருமுறை தரவுகள் குறித்து மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான வேலைகள் நடைபெறுகின்றன. 'சைல்ட் லைன்' கொடுக்கும் தரவுகள்தான் நம்பகமானவை.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கும் 181 என்ற எண்ணுக்கும் குழந்தைத் திருமணங்கள் குறித்த புகார்கள் வருகின்றன. தேனி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தான் அதிகம் குழந்தைத் திருமணங்கள் தொடர்பான புகார்கள் வருகின்றன. புகார் வந்த அனைத்துக் குழந்தைத் திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன" என்றார்.
கரோனா பெருந்தொற்று மற்றும் அதையொட்டிய பொது முடக்கத்திற்குப் பிறகு குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்கும் என, ஐநா, யுனிசெஃப் போன்ற சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ள நிலையில், அதைத் தடுப்பதற்கான திட்டங்கள் ஏதும் தமிழகத்தில் உள்ளனவா என அவரிடம் கேள்வியெழுப்பினோம்.
"இதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்த ஊரடங்கு சமயத்தில் எங்களால் எடுக்க முடியவில்லை. குழந்தைத் திருமணங்களை நிறுத்திய பிறகு பெற்றோர்களிடம் ஆவணத்தில் எழுதி வாங்கிக்கொண்டுதான் பிள்ளைகளை அனுப்புகிறோம். ஆனால், அதனையும் தாண்டி வேறு ஊருக்குச் சென்று திருமணம் செய்து வைக்கும் சம்பவங்களும் அரிதாக நடைபெறுகின்றன. தொடர் கண்காணிப்பால் எந்தவிதப் பயனும் இல்லை. ஆனால், திருமணம் செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு வரும்போது பெற்றோர்களின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கல்வித்துறைதான் இதற்கான ஆலோசனைகளை குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்க முடியும். இந்த ஆலோசனை வழங்குவதெல்லாம் கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டுள்ளன"என்றார்.
ஊரடங்கு காலம் மட்டுமல்லாமல் மற்ற நேரங்களிலும் குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்துவதில் பல சிக்கல்கள் இருப்பதாகக் கூறுகிறார், மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜன்.
"பெற்றோர்களால் கட்டாயப்படுத்தப்பட்டு செய்து வைக்கப்படும் குழந்தைத் திருமணங்கள் தவிர்த்து, 18 வயது நிறைவடையாத பெண் பிள்ளைகள் பலர் தாங்களாகவே விரும்பித் திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வுகளும் உண்டு. அந்த மாதிரியான சமயங்களில், திருமணத்தைத் தடுத்து நிறுத்தும்போது, அந்தப் பெண்கள் பெற்றோர்களுடன் செல்ல மறுப்பார்கள். இன்னொரு புறம், பெற்றோர்கள் செய்து வைக்கும் குழந்தைத் திருமணங்கள் பெரும்பாலானவை, இடையிலேயே காவல்துறையினரால் சமாதானம் செய்து வைக்கப்பட்டு விடுவதால் அவை குழந்தைகள் நலக்குழு வரை வருவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடுகின்றன. இதனால் அத்தகைய குழந்தைத் திருமணங்கள் புகார்களாகப் பதிவு செய்யப்படும் வாய்ப்புகள் குறைந்துவிடுகின்றன.
குழந்தைகள் நலக்குழுவிடம் புகாராக வந்தால், இருதரப்பு பெற்றோர்களும் 'திருமணம் செய்யவில்லை, நிச்சயதார்த்தம்தான் செய்கிறோம்' என்று மாற்றிப் பேசிவிடுவார்கள். கணவர் இல்லாத அல்லது தனித்து வாழும் பெண்கள் தங்கள் மகளுக்கு விரைவில் திருமணம் செய்ய வேண்டும் என எண்ணுகின்றனர். ஒருவரைப் பிடிக்காததால் கூட சிலர் பொய்யாகப் புகார்கள் கொடுக்கும் நிகழ்வுகளும் உண்டு. இம்மாதிரி பல காரணிகளால், குழந்தைத் திருமணங்கள் பலவற்றைத் தடுத்து நிறுத்த முடியாத நிலையும் உள்ளன" என்றார்.
ஊரடங்கு சமயத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட குற்றங்கள் குறித்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்குத் தலைமை வகிக்கும் கூடுதல் டிஜிபி ரவியிடம் பேசினோம்.
"தமிழகத்தில் ஊரடங்கு அமலான ஆரம்பத்திலிருந்து ஜூன் 15 வரையிலான காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக, மொத்தம் 9 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படம் (Child porn videos) பார்த்ததாக 7 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தைத் திருமணம் தொடர்பாக 639 புகார்கள் வந்துள்ளன. அனைத்துக் குழந்தைத் திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. சாதாரண காலத்தில் ஒரு நாளைக்கு 4 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்படும். தற்போது அவை குறைந்துள்ளன.
பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் பலவற்றில் குழந்தைகளின் பெற்றோர் பலர் வெளிமாநிலங்களில் இருக்கின்றனர். தனியாக இருக்கும்போது இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றன. தெரிந்தவர்களால் தான் பல குற்றங்கள் நடைபெற்றுள்ளன. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 'ஒன் ஸ்டாப் சென்டர்' (One Stop Center) மூலம் கவுன்சிலிங் வழங்கப்படுகிறது.
அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாக குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களின் பட்டியலைத் தயார் செய்து அவர்களைக் கண்காணிக்கிறோம். ஊரடங்கு காலத்தில் குழந்தைகளை எங்கும் தனியாக அனுப்பக்கூடாது.
குழந்தைகள் செல்போனைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பகிர்வதன் மூலம் குற்றங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
குழந்தைகளுக்காக ஆன்லைன் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் பெற்றோர்கள் தங்கள் கண்காணிப்புடன் குழந்தைகளைப் பங்கேற்க வைக்க ஊக்குவிக்க வேண்டும்" என்றார் ஏடிஜிபி ரவி.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறைந்துள்ளதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படும் நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு தொடக்கத்திலிருந்து தற்போது வரை பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக எவ்வளவு புகார்கள் வந்தன என்பது குறித்து 'சைல்ட் லைன் இந்தியா' அமைப்பிடம் பிரத்யேகமாகத் தகவல்களைப் பெற்றுள்ளோம். அந்தத் தகவல்கள் மாறுபட்ட அதிர்ச்சி தரும் தரவுகளை நமக்கு வழங்குகின்றன.
அதன்படி, மார்ச் 25 முதல் ஜூன் 20 வரை, தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக 134 புகார்களும், குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக 930 புகார்களும், மற்ற துன்புறுத்தல்கள் தொடர்பாக 441 புகார்களும் 'சைல்ட் லைன் இந்தியா' (1098) உதவி எண்ணுக்கு அழைப்புகள் வந்துள்ளன. அவற்றுள், சுமார் 264 புகார்களை பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளே நேரடியாக புகார் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் 25 பெண் குழந்தைகள் தமிழகத்தில் காணாமல் போனதாக 'சைல்ட் லைன் இந்தியா' புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை ஊரடங்கு சமயத்தில் புகார்களாகப் பதிவு செய்வதில் பல இடர்கள் இருப்பதே காவல்துறை தரப்பில் கூறப்படும் இத்தகைய குறைவான எண்ணிக்கைக்குக் காரணம் என, குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்குச் சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்கி வரும் 'நட்சத்திரா' எனும் அரசுசாரா அமைப்பின் நிறுவனர் ஷெரின் கூறுகையில், "சாதாரண காலங்களில் பெற்றோர்கள்தான் காவல்நிலையங்களுக்குச் சென்று புகார் அளிப்பார்கள். இப்போது இருக்கும் சூழ்நிலையில் புகார்கள் அளிக்க முடிவதில்லை. அதனால் பாலியல் துன்புறுத்தல்கள், புகார் வரை செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு. பாலியல் துன்புறுத்தல் நடைபெற்று அதனால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலைமையோ, கூட்டுப் பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றாலோ அல்லது பாதிக்கப்பட்ட குழந்தை இறக்க நேரிட்டால்தான் அந்தச் சம்பவங்கள் வெளியில் வரும்.
ஊரடங்கு சமயத்தில் வீட்டுக்குள் இருக்கும் சிலராலேயே பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வீட்டில் ஆதிக்கம் செலுத்துபவர்களாலேயே துன்புறுத்தப்படும்போது பாதிக்கப்படும் குழந்தை இதனை வெளியில் செல்லாது. என்ன செய்ய வேண்டும் என தெரியாத மனநிலைக்குக் குழந்தைகள் தள்ளப்படுவர். பக்கத்தில் இருப்பவர்களிடம்கூட சொல்வதற்கு குழந்தைகள் பயப்படுவர். இதனால் மன அழுத்தம் ஏற்படும். இதைத் தடுக்க அவசரநிலை எச்சரிக்கையை காவல்துறை விடுக்க வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" எனக் கூறுகிறார் ஷெரின்.
பாலியல் துன்புறுத்தல்கள், குழந்தைத் திருமணங்கள் குறித்த தரவுகள் தமிழகத்தில் முறையாக நிர்வகிக்கப்படாததே இத்தகைய முன்னுக்குப் பின் முரணான, குறைவான எண்ணிக்கைக்குக் காரணம் என்கிறார் குழந்தைகள் உரிமைகள் நலச் செயற்பாட்டாளர் தேவநேயன்.
"வீட்டிலேயே பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு புகாராகப் பதிவு செய்யப்படாத குற்றங்களின் எண்ணிக்கை என்ன? குடும்ப நலன், எதிர்காலத்தில் திருமணம் நடக்காதது உள்ளிட்டவற்றுக்காகப் பயந்து பலரும் புகார் கொடுக்க மாட்டார்கள். காவல் நிலையத்திலேயே சமாதானம் பேசி அனுப்பப்பட்ட புகார்களும் உண்டு. கடந்த ஆண்டு பெரம்பலூரில் பாலியல் துன்புறுத்தப்பட்ட குழந்தையின் தாயின் காலில் குற்றம் சாட்டப்பட்டவர் விழுந்து மன்னிப்பு கேட்டதால் அவரை போலீஸார் திருப்பி அனுப்பிய சம்பவம் நிகழ்ந்தது.
தமிழ்நாட்டில் 2018-ம் ஆண்டில் 1,853 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 199 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டன. 213 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். அதாவது 14%. ஆனால், 3 மாதங்களில் விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என, போக்சோ சட்டம் கூறுகிறது. பணம், அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்துபவர்கள் குற்றம் சாட்டப்படும்போது புகார்களாகப் பதிவு செய்யப்படுவதே குறைவுதான்.
ஊரடங்கு காலத்தில் குழந்தைகளுக்கான அமைப்புகள் முழுமையாகச் செயல்பட்டதா? மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகளில் பணியாளர்கள் இல்லாமல் உள்ளனர். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையம் தரவுகளை வைத்திருக்க வேண்டும். மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இதனை ஆய்வு செய்திருக்க வேண்டும். இதுதான் போக்சோ வழக்குகளைக் கண்காணிக்கும் அமைப்பு. இதற்கு கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தலைவர் கிடையாது. மே மாதத்திலிருந்து உறுப்பினர்கள் இல்லை. இது சட்டம் சார்ந்த அமைப்பு. ஒரு முன்னேறிய மாநிலத்தில் இதற்கு தலைவர், உறுப்பினர்கள் இல்லாதது மோசமான நிலைமை. இதற்கு ஆண்டுதோறும் 52 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது.
கேரளாவில் 5-7 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்படுகிறது. சட்டம் சார்ந்த ஒரு அமைப்புக்கு வழக்கறிஞர் இல்லை. ஆவணக்காப்பகம் இல்லை. ஆலோசகர்கள் இல்லை. இதனை சமூக நலத்துறையின் துணை அமைப்பாக வைத்துள்ளனர். சட்டம் சார்ந்த அமைப்பாக இல்லை. சுதந்திரமான, அரசியல் தலையீடு இல்லாத அமைப்பாக இது இருக்க வேண்டும்.
ஊரடங்குக்குப் பிறகு குழந்தைத் திருமணங்கள், குழந்தைத் தொழிலாளர் முறை, குழந்தைகள் கடத்தல், பள்ளி இடைநிற்றல், கொத்தடிமை முறை, வீட்டு வேலைக்கு அனுப்புதல், பாலியல் வன்கொடுமைகள் அதிகமாகும். இதனைக் குழந்தை நல அமைப்புகள் கண்காணிக்க வேண்டும். பாதிக்கப்படும் குழந்தைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும். வேறு ஊர்களுக்குச் சென்ற குழந்தைகள் குறித்துக் கண்காணிக்க வேண்டும்" என்றார் தேவநேயன்.
தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago