கரோனாவுக்கு அதிகாரபூர்வமாக மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் போலி மருந்து விளம்பரங்கள்: கி.வீரமணி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றுக்கு இதுவரை அதிகாரப்பூர்வமான மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில், போலி மருந்து விளம்பரங்களைக் கண்டு மக்கள் ஏமாறவேண்டாம், இந்திய அரசின் மருத்துவ ஆய்வு நிறுவனங்கள் அதிகாரபூர்வமான முடிவுகளை அறிவிக்க முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

“130 கோடி மக்கள் தொகைக் கொண்ட நாடான இந்தியாவில், குறிப்பாக அதன் மாநிலங்களான மகாராட்டிரா, தமிழ்நாடு போன்றவற்றிலும், இதர மாநிலங்களிலும் கரோனா தொற்று நாளும் பன்மடங்கு பெருகி “விஸ்வரூபம்‘’ எடுத்துள்ள நிலையில், மக்கள் அதிர்ச்சிக்கும், மன இறுக்கத்திற்கும், அச்சத்திற்கும் ஆளாகித் தத்தளித்துக் கொண்டுள்ள வேதனையான சூழ்நிலை!

‘‘சர்வரோக நிவாரணி சஞ்சீவியாக...’’

நோய்த் தொற்று அச்சம் ஒருபுறம், மறுபுறம் தொடர்ந்த ஊரடங்குகளால் பசிப் பிணி ஏழை, எளிய அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கும், நடுத்தரக் குடும்பங்களுக்கும் மிகப்பெரிய பொருளாதார பாதிப்புகள் - திடீரென்று வேலை இழந்து, வறுமைத் தேள் கொட்டப்பட்டதால், ஏறிய விஷத்தின் வேதனை.

இந்த நிலையில், மத்திய - மாநில அரசுகள் ஊரடங்குகளை மேலும் தொடருவதே ஒரே வழி என்பது போன்ற ‘‘சர்வரோக நிவாரணி சஞ்சீவியாக’’ அதனையே நம்புகின்ற அவலமும் தொடருகின்றது, இதுவரை மருந்தே கண்டுபிடிக்காத தொற்று நோயாக கரோனா தொற்று - (கோவிட் 19) இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை.

அலோபதி மருந்து என்ற மலேரியாக் காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்பட்ட ‘‘அய்ட்ரோக்சிகுளோரோகுயின்’’ (Hydroxychloroquine) என்ற மாத்திரை முதலில் அமெரிக்கா போன்ற நாடுகளில் கரோனா நோயாளிகளுக்குத் தரப்பட்டு, அது எதிர்பார்த்த பலனைத் தரவில்லை - கரோனாவை குணப்படுத்த அதனால் இயலவில்லை என்பதை பிரபல மருத்துவ ஆராய்ச்சி - ‘Lancet’ என்ற ஏட்டில் மருத்துவ அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை

பற்பல நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனரே தவிர, தக்க மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு ஒரே மருந்து கரோனாவைத் தடுப்பது, நிவாரணம் அளிப்பது என்று கூறும் நிலையில், இதுவரை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே உண்மை.

இந்நிலையில், மக்களின் அச்சத்தை மூலதனமாகக் கொண்டு, தங்களது கல்லாப் பெட்டியை நிரப்பும் ஏமாற்றுப் பேர்வழிகளின் ஏய்த்துச் சுரண்டும் பிழைப்பும், ஆங்காங்கே ‘இதோ மருந்து’ என்ற அறிவிப்புகள்மூலம் மக்களின் அவலத்தை அதிகரிக்கவே செய்கிறது.

பாபா ராம்தேவ் என்ற ஒரு பேர்வழி, வெறும் யோகாவை வைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து, இன்று பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்கும் ஒரு கார்ப்பரேட்டு முதலாளியாகி, பல பொருட்கள் - முன்பே பல வழக்குகளுக்கு இடம் தந்த நிலையில், மத்திய அரசின் செல்லப் பிள்ளைபோல தனிக்காட்டு ராஜாவாகவே ராஜ்ஜியம் நடத்துகின்றார்.

திடீரென்று அவர் கடந்த 23 ஆம் தேதி ,தனது ஆயுர்வேத நிறுவனம் கரோனா வைரஸ் தொற்றைக் குணப்படுத்துவதற்கு 2 மருந்துகளைக் கண்டறிந்து இருப்பதாக ஒரு பரபரப்புச் செய்தியை வெளியிட்டார்!.

‘‘கரோனா நில், சுவாசரி - என்னும் இந்த 2 மருந்துகளையும் கொண்டு உயிர் காக்கும் வகையில், வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டோ, ஆக்சிஜன் செலுத்துகிற நிலையிலோ வைக்கப்படாத பிற கரோனா நோயாளிகளுக்கு 7 நாளில் சுகம் காண முடியும் என்று கூறினார்.

தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனம் என்ற ஒரு தனியார் அமைப்புடன் கைகோர்த்து முதன்முதலாக மருத்துவ ரீதியில் சோதிக்கப்பட்ட இந்த ஆயுர்வேத மருந்துகளை அறிமுகம் செய்கிறோம் என்று கூறி, பெருத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தினார் - மார்க்கெட்டிங் முறையில், அதற்குள் இதைத் தீவிரமான வியாபாரமாக்கிட வேகப்படுத்தும் முயற்சிகளும் தொடங்கின.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் வரவேற்கத்தக்க நடவடிக்கை.

ஆனால், அடுத்த சில மணித்துளிகளில் இந்த இரு மருந்துகளின் தயாரிப்பு குறித்து சரி பார்க்கும் வரையில், இது தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அதிரடியாக நிறுத்தி வைத்துவிட்டது, வரவேற்கத்தக்கது.

இந்த மருந்துகளின் விற்பனைக்கு மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநில அரசுகள் தடை போட்டுள்ளன. இதற்கிடையில், இந்த நிறுவனத்தின் இயக்குநர் பாலகிருஷ்ணா என்பவர், ‘‘எங்களது மருந்துகள், கரோனா வைரஸ் தொற்றுக்கானது என நாங்கள் கூறவில்லை’’ என்று கூறி, தலைகீழ் பல்டி அடித்தார். இதிலிருந்தே இந்த மோசடி வியாபாரத்தின் முரண்பாடுகளை எவரும் விளங்கிக் கொள்ள முடியும்.

தமிழில் ஒரு பழமொழி உண்டு. ‘எ(த்)தைத் தின்றால் பித்தம் தீரும்‘ என்று! நெருக்கடி மன உளைச்சல் உள்ளவர்கள் இப்படி ஒரு விளம்பரம் வந்தால், சில நாட்களில் வாங்கி, அதன்மூலம் இந்த போலி (மருந்து) விளம்பரதாரர்கள் பல கோடி ரூபாய் சம்பாதித்துவிட முடியுமே. மத்திய - மாநில அரசுகளின் சட்டபூர்வ நடவடிக்கை ஏன் பாயவில்லை?

ஏன் இதுவரை இந்த சாமியார் பாபா ராம்தேவ்மீது மத்திய - மாநில அரசுகளின் சட்டபூர்வ நடவடிக்கை பாயவில்லை? பாவம், ஆர்வம் மிக்க ஒரு சித்த வைத்தியர் திருத்தணிகாசலம் ஏதோ கூறினார் என்றவுடன், நமது தமிழகக் காவல்துறை அவரைக் கைது செய்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததே. அதே குண்டர் சட்டம் இப்படிப்பட்ட காவிச் சாமியார்கள்மீது பாயத் தயங்குவது ஏன்?

அதற்கு என்ன பின்னணி?

இருவருக்கு இருவேறு அணுகுமுறையின் காரணம் என்ன? பாபா ராம்தேவின் பின்பலம் என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். மக்களுக்கு நமது வேண்டுகோள். எனவே, மக்களுக்கு நமது வேண்டுகோள், மிகவும் தெளிவாக இருந்து, துணிவுடன் கரோனா தொற்றை எதிர்கொள்ளுங்கள்.

இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடித்து உறுதி செய்யப்பட்டு உலா வரவில்லை. அமெரிக்காவில் FDA (Federal Drug Authority) என்பது ஆய்வு செய்த பிறகே எந்த மருந்தையும் வியாபாரச் சந்தையில் வெளியே விற்பனைக்கு அனுமதிக்கிறது.
நம் நாட்டு மருத்துவமனைகளில் பெரிதும் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை வளர்த்து, நோய்த் தடுக்க Vitamin C, Vitamin D அடங்கிய சரியான மருந்துகள் என்று எதை மருத்துவர்கள் கருதுகிறார்களே, அந்த மருந்துகளைப் பெரிதும் கொடுப்பதாகத் தெரிகிறது. (வேறு சிலவும் மருத்துவர்கள் ஆலோசனை அனுபவத்திற்கேற்ப - அங்கீகரிக்கப்பட்டவைகளைத்தான் தருகிறார்கள்).

எனவே, அரசு அனுமதி வழங்காத எதையும், தாமாக வாங்கி - பயன்படுத்தாதீர்கள் - எச்சரிக்கையுடன் இருங்கள். மருந்துகளில் கூட போலித்தனம் செய்து சுரண்டும் இந்த கயமைத்தனத்தை ஒழிக்க மத்திய - மாநில அரசுகள் முன்வரவேண்டும். எதுவும், பழுத்த ஆராய்ச்சி முடிவுக்குப் பின்னர், மருத்துவ நிபுணர்களும், நிறுவனங்களின் சரி பார்க்கப்படாத சிகிச்சைகள் நோய் நிவாரணத்தை மேலும் சிக்கலாக்கி விடும் அபாயம் உண்டு, மறவாதீர்.
அலோபதி, ஓமியோபதி, ஆயுர்வேதிக் மற்றும் சித்த வைத்தியம்.

ICMR என்ற இண்டியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச், CSIR என்ற கவுன்சில் ஆஃப் சயின்டிபிக் ரிசர்ச் மற்றும் அறிவியல் நேஷனல் அகாடமி போன்ற அமைப்புகள், அலோபதி, ஓமியோபதி, ஆயுர்வேதிக் மற்றும் சித்த வைத்தியம் எல்லாவற்றையும் ஆய்வு செய்து, முடிவுகளை அறிவிக்கும் செயற்பாட்டினையும் செய்திட முன்வரவேண்டியது அவசியம்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்