மதுரையில் கரோனா சிகிச்சைக்கான படுக்கைகளின் எண்ணிக்கையை 5 ஆயிரமாகவும் தினசரி பரிசோதனைகளின் எண்ணிக்கையை 9,500 ஆகவும் உயர்த்த வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. தமிழக முதல்வருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் விடுத்திருக்கும் அறிக்கை:
''மதுரையில் கரோனாவின் தாக்குதல் தீவிரப்பட்டிருக்கிறது. நாள்தோறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்று இலக்கங்களில் வரத் தொடங்கியுள்ளது. இது மக்களுக்கு சற்றே பதற்றத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் மாநில அரசின் செயல், மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமைய வேண்டும். தொற்று பரவினாலும் அதனைச் சந்திக்கும் நிலையில் மாவட்ட நிர்வாக அமைப்பும் சுகாதார அமைப்புகளும் இருக்கிறது என்ற நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் தொற்று பரவும் (ஜூன் 22-ம் தேதி புள்ளிவிவரங்களின் அடிப்படையில்) வேகமானது 7.9 சதவீதமாக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறையின் குறிப்பு தெரிவிக்கிறது. இதே வேகத்தில் இந்தப் பரவல் இருக்குமானால், ஜூலை 21-ம் தேதி மதுரை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சுமார் 7,883 ஆக இருக்கும் என்று வரையறுக்கிறது.
» கரோனா தடுப்பு: அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுவதற்கான தேவை இல்லை; முதல்வர் பழனிசாமி பேட்டி
ஜூலை 21-ம் தேதி 7,883 தொற்றாளர்கள் இருப்பார்கள் என்றால் அவர்களைக் கண்டறிய, இன்றைய விகிதாச்சாரப்படி ஜூலை 21-ம் தேதிக்குள் 2,40,000 பேரைச் சோதனை செய்திருக்க வேண்டும். அதாவது இனிவரும் நாள்களில் சராசரியாக 9,500 பேரைச் சோதனை செய்தாக வேண்டும். (சோதனையைக் குறைத்து, அதன் மூலம் தொற்றாளர்களைக் கண்டறிய முடியாமல் போகும்போது நோய் பரவும் விகிதமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரிக்கும்.)
கணித்துள்ள தொற்றாளர்கள் 7,883 பேரில், ஜூலை மாதத்தின் நடுவில் சுமார் 4,500 பேர் ஒரே நேரத்தில் அரசு மருத்துவமனையிலும் தனிமைப்படுத்தும் மையங்களிலும் இருக்கவேண்டிய சூழல் வரலாம். இப்பொழுதுள்ள நிலையில் நமது மருத்துவமனைகளில் சுமார் 1,200 படுக்கைகள் மட்டுமே உள்ளன. இது தவிர தனிமைப்படுத்தும் மையங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை.
இரண்டு நாள்களுக்கு முன்னர் சிறப்புக் கண்காணிப்பு அதிகாரி டாக்டர் சந்திரமோகனைச் சந்தித்துப் பேசும்போது உடனடியாக 2,000 படுக்கைகளை ஏற்பாடு செய்கிறோம் என்று கூறினார். அந்த 2,000 படுக்கைகளை ஏற்பாடு செய்தாலும் சுமார் 1,300 படுக்கைகள் கூடுதலாகத் தேவைப்படும். இவ்வளவு சோதனைகளைச் செய்து தொற்றாளர்களைக் கண்டறிந்து, முறையான சிகிச்சை செய்தால் மட்டுமே அடுத்து வரும் மாதங்களில் நாம் பேரிழப்புகளைச் சந்திக்காமல் மீள முடியும்.
ஆனால், நம்மை நோக்கி விரைந்து வந்துகொண்டிருக்கும் இந்த ஆபத்தினைச் சந்திக்கும் வேகம், மாவட்ட நிர்வாகத்தின் செயல்களில் வெளிப்படவில்லை. குறிப்பாக, ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து 15-ம் தேதிவரை சோதனைகளை அதிகப்படுத்தாதன் விளைவால்தான், இன்று மதுரை மாவட்டம் இவ்வளவு பெரிய பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஜூன் 4-ம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக இதுபற்றி நாங்கள் எடுத்துக்கூறியும் எதுவும் நடக்கவில்லை. நிர்வாகத் தோல்விக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் நலவாழ்வை விலையாகக் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இதே நிலை இனியும் தொடர்வதை அனுமதிக்க முடியாது. நாளொன்றுக்குக் குறைந்த பட்சம் 9,500 பேரையாவது சோதனை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். உடனடியாக மருத்துவமனைகளிலும் கரோனா நலவாழ்வு மையங்களிலும் சேர்த்து 5,000 படுக்கைகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வளவு எண்ணிக்கையில் தொற்றாளர்கள் வந்தால், அதற்கு ஏற்ப மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், ஆய்வகப் பணியாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும்.
இன்றைய நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனைக்கான கருவிகளை இரட்டிப்பாக்கினால் மட்டுமே இவ்வளவு சோதனைகளைச் செய்ய முடியும். சோதனை செய்வதற்கான கருவிகளின் எண்ணிக்கையை உயர்த்தாமல் மேற்குறிப்பிட்ட எதையும் செய்ய முடியாது. எனவே, பரிசோதனைக் கருவிகளை அதிகப்படுத்த உடனடியாக மாநில அரசு உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.
15 லட்சத்தும் அதிகமான மக்கள் வசிக்கும் மதுரை மாநகராட்சிக்கு, மாநகரச் சுகாதார அலுவலர் பணியிடம் இப்பொழுதுவரை நிரப்பப்படாமல் இருக்கிறது. உடனடியாக இப்பணியிடம் நிரப்பப்பட வேண்டும். கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க சிறப்புக் கண்காணிப்பு அதிகாரியாக டாக்டர் சந்திரமோகன் நியமிக்கப்பட்டு கடந்த சில நாள்களாகப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். ஆனால், தொற்றின் வேகத்தையும் செய்ய வேண்டிய பணிகளையும் கவனத்தில் கொண்டு மாநகராட்சிப் பகுதிக்கு மட்டும் சிறப்புக் கண்காணிப்பு அதிகாரி ஒருவர் தனியே நியமிக்கப்பட வேண்டும்.
அதேபோல தென்மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான சிறப்பு அதிகாரி ஒருவரும் தனியே நியமிக்கப்படவேண்டும். இவையெல்லாம் உடனடியாக விரைந்து செய்யப்பட வேண்டிய பணிகளாகும். மீண்டும் சொல்கிறோம், பரவும் வைரஸின் வேகத்துக்கு இணையாக அதனைக் கண்டறியும் வேகம் இருந்தால் மட்டுமே நம்மால் அதிக இழப்புகளின்றி மக்களைக் காக்க முடியும். அதுதான் உலக நாடுகள் நமக்குச் சொல்லும் பாடம்.
தமிழக முதல்வரே, நீங்கள் உடனடியாகத் தலையிட்டு இக்கோரிகைகளை நிறைவேற்றுங்கள். மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்களும் உடனடியாக இது சம்பந்தமாக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லுங்கள். இப்பொழுது இத்தகைய திட்டமிடலும், நிர்வாக ஏற்பாடும் உறுதி செய்யப்படவில்லையென்றால் பேரிழப்பிலிருந்து மீள வழியேதும் இருக்காது''.
இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago