பள்ளிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு கொள்கை முடிவை அறிவித்துள்ள போதிலும், தனித்தேர்வர்களின் தேர்ச்சி பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்காததால், வெளிமாநில தமிழ்ப் பள்ளிகளின் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியில் குழப்பம் நிலவுகிறது. அவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:
''தமிழ்நாடு மற்றும் புதுவையில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்திற்கு அப்பால் உள்ள தமிழ்வழிப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த நீதி வழங்கப்படாதது அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் முதலில் மார்ச் 27 ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக இந்தத் தேர்வுகள் முதலில் ஜூன் ஒன்றாம் தேதிக்கும், பின்னர் ஜூன் 15 ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டன. ஆனால், கரோனா வைரஸ் பரவல் குறைவதற்கான வாய்ப்புகளே இல்லாத சூழலில் நானும், மாணவர்களின் பெற்றோரும் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக கடந்த 9 ஆம் தேதி அறிவித்த தமிழக அரசு அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தது. இதன் மூலம் தமிழ்நாட்டு மாணவ, மாணவியரிடையே நிலவி வந்த மன உளைச்சல் போக்கப்பட்டது.
ஆனால், மராட்டியம், கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ள தமிழ்வழிப் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி குறித்து தமிழக அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மராட்டியம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 300 தமிழ்ப் பள்ளிகள் தமிழ்ச் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளால் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தப் பள்ளிகளில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம்தான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளைப் பொறுத்தவரை தமிழக அரசின் தேர்வுத்துறை அதிகாரிகள்தான் அங்கு சென்று தேர்வுகளை நடத்துவார்கள். அதன் அடிப்படையில் தமிழக அரசின் தேர்வுத்துறைதான் அவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும்.
ஆனால், தமிழ்நாட்டில் தற்போது பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சலுகை வெளிமாநில தமிழ்ப் பள்ளிகளுக்கு நீட்டிக்கப்படவில்லை. இதற்கான முக்கியக் காரணம். தமிழ்நாடு, புதுவை தவிர பிற மாநிலங்களில் இருந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தனித்தேர்வர்களாக கருதப்படுவதுதான்.
பள்ளிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு கொள்கை முடிவை அறிவித்துள்ள போதிலும், தனித்தேர்வர்களின் தேர்ச்சி பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்காததால், வெளிமாநில தமிழ்ப் பள்ளிகளின் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியில் குழப்பம் நிலவுகிறது.
மராட்டிய மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டுவிட்டன. அம்மாநிலத்தில் அடுத்த மாத இறுதியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, அதனடிப்படையில் உடனடியாக 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கப்படவுள்ளது. தமிழ்வழிப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு அதற்குள் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டால்தான் அவர்களால் 11 ஆம் வகுப்பில் சேர முடியும். ஆனால், அவர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்படாததால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு வெளியே பிற மாநிலங்களில் தமிழ்வழிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதில் எந்தச் சிக்கலும் இல்லை. அவர்களைத் தனித்தேர்வர்கள் என்ற வகைப்பாட்டிலிருந்து பிரித்து, பிற மாநில தமிழ்வழிப் பள்ளி மாணவர்கள் என வகைப்படுத்தினாலே போதுமானது. அவர்கள் அனைவரும் தமிழகப் பள்ளி மாணவர்களைப் போலவே ஆண்டுக்கு 200 நாட்கள் பள்ளி செல்கிறார்கள்.
மாதந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் திருப்புதல் தேர்வுகளை எழுதுகிறார்கள். அதன் மூலம் அவர்களின் கல்வித்திறனை மதிப்பிட்டு மதிப்பெண் வழங்க முடியும். இவை அனைத்தையும் கடந்து பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்ற அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ள நிலையில், பிற மாநிலப் பள்ளிகளின் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சியும், மதிப்பெண் சான்றும் வழங்குவதில் எந்தச் சிக்கலும் இல்லை.
எனவே, தமிழ்நாடு மற்றும் புதுவை மாணவர்களைப் போலவே பிற மாநிலங்களில் உள்ள தமிழ்வழிப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அவர்கள் 11 ஆம் வகுப்பில் சேர வசதியாக அடுத்த மாத இறுதிக்குள் மதிப்பெண் சான்றிதழ்களையும் வழங்கி, அவர்களின் எதிர்காலம் வீணாகி விடாமல் பாதுகாக்க வேண்டும்''.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago