தமிழக பள்ளிக் கல்வித்துறை அடிக்கடி தடுமாறுவது ஏன் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் இன்று (ஜூன் 25) வெளியிட்ட அறிக்கை:
"தமிழக பள்ளிக் கல்வித்துறை சமீபகாலங்களில் முன்னுக்குப் பின்னான பல முரண்பட்ட திட்டங்களை அறிவிப்பதும், பின்னர் மக்களின் வற்புறுத்தல் காரணமாக அதைத் திரும்பப் பெறுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த வகையில் தற்போது நடப்பாண்டுக்கான (2020-21) 11-ம் வகுப்புக்கான பாடத்திட்டத்தில் மாறுதலை ஏற்படுத்தி புதிய குழப்பத்தை உருவாக்கியுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை இந்திய நாட்டில் பல சாதனைகளைச் சாதித்துள்ளது. இந்திய நாடு முழுவதும் 10+2 வகுப்பு முறை 1967-68 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டுமென இந்திய அரசு வற்புறுத்திய போதும், தமிழக சூழ்நிலையைக் கணக்கில் கொண்டு அதை 1977-78 இல் தான் அமல்படுத்த முன்வந்தது. மேலும், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் அதிக வாய்ப்புகள் அளிக்கும் வகையில் 11-ம் வகுப்பில் மூன்றாவது பிரிவில் நான்கு பாடங்களைக் கொண்ட திட்டங்களைச் செயல்படுத்தி வந்தது. இத்தகைய காரணங்களால் அகில இந்திய அளவில் ஒப்பிடும்போது உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இரட்டிப்பு விகிதத்தை தமிழகம் அடைந்துள்ளது.
» மதுரையில் ஒரே நாளில் கரோனா பாதிப்பு இரட்டை சதம்: நோயாளிகள் சிகிச்சை பெற படுக்கை வசதி பற்றாக்குறை
இச்சூழ்நிலையில் தற்போது 11-ம் வகுப்புக்கான பாடத்திட்டங்களை மாற்றியமைத்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது, முதல்பிரிவு தமிழ், இரண்டாம் பிரிவு ஆங்கிலம், மூன்றாம் பிரிவுக்கு நான்கு பாடங்களைக் கொண்ட பல்வேறு குரூப்புகளுடன் மொத்தமாக 600 மதிப்பெண்கள் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தால் மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கோ அல்லது அதில் சேர வாய்ப்பில்லாத போது பொறியியல் படிப்புக்கோ அதிலும் சேர வாய்ப்பில்லாதபோது இதர கலை மற்றும் அறிவியல் துறைகளில் சேர்ந்து படிக்க முடியும்.
ஆனால், தற்போது தமிழக அரசு மூன்றாம் பிரிவுக்கு மூன்று பாடங்களுடன் மொத்தமாக 500 மதிப்பெண்கள் எனத் தீர்மானித்துள்ளது. மாணவர்களின் மன அழுத்தம், உயர்கல்வி, வேலைவாய்ப்புகளைக் கணக்கில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நான்கு பாடங்கள் மூன்றாகச் சுருங்கும்போது இம்மாணவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகளும் சுருங்கும் நிலை ஏற்படுகிறது.
மத்திய அரசின் கட்டாய நீட் தேர்வால் தமிழக மாணவர்களது மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பாடத்திட்ட மாற்றத்தால் பொறியியல் படிப்பிற்கான வாய்ப்புகளும் பறிக்கப்படுகின்றன.
மேலும் நடப்பாண்டில் (2020-21) நான்கு பாட முறைகளைக் கொண்ட 600 மதிப்பெண்கள் கொண்ட திட்டமும், மூன்று பாடங்களைக் கொண்ட 500 மதிப்பெண்கள் கொண்ட திட்டமும் நடைமுறையில் இருக்கும் என்பதுதான் உச்சகட்ட குழப்பமாகும். அதாவது, ஒரே வகுப்பில் நான்கு பாடங்களைப் படிக்கும் மாணவர்களுக்கும், மூன்று பாடங்களைப் படிக்கும் மாணவர்களுக்கும் உயர்கல்வியில் ஒரே மாதிரியான வாய்ப்பு என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையினை அறிவித்து நாடு முழுவதும் எழுந்த பலத்த எதிர்ப்பின் காரணமாக இன்னமும் இறுதி செய்யாமல் உள்ளது. ஆனால், தமிழக அரசு இறுதி செய்யப்படாத மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஏதுவாக 11-ம் வகுப்பின் பாடத்திட்டங்களை மாற்றியமைப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
ஏற்கெனவே, தமிழக அரசு 5-ம் மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என அறிவித்து மக்களின் பலத்த எதிர்ப்பின் காரணமாக பின்னர் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்பின்னர் 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவித்தது. பின்னர், இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தினாலும் மேல்படிப்புக்கு 12-ம் வகுப்புக்கான தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே அடிப்படையாக கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்படியானால் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏன் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.
கரோனா உச்சக்கட்டத்தில் இருக்கும் போது, 10-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக தமிழக அரசு மேற்கொண்டது. அரசியல் கட்சிகள், ஆசிரியர் அமைப்புகள், கல்வியாளர்கள் வலியுறுத்தலோடு உயர் நீதிமன்றத் தலையீட்டின் காரணமாக 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு கைவிடப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்கள் என முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்பைச் செயல்படுத்துவதிலும் பள்ளிக் கல்வித்துறை குழப்பமான அணுகுமுறையையே கடைப்பிடித்து வருகிறது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் மேற்கண்ட தடுமாற்றங்கள் பல லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. பள்ளிக் கல்வித்துறை இத்தகைய தடுமாற்றங்களைக் கைவிட்டு, தமிழக மாணவர்களின் நலனைக் கணக்கில் கொண்டு நிதானமான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
தற்போது கரோனா நோய்த் தொற்று மிகவும் உச்சத்தை அடைந்து, தமிழக மக்கள் உயிருக்கு அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் பொதுமுடக்கம், ஊரடங்கு நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவசர கதியில் 11-ம் வகுப்புக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கிற பாடத்திட்ட மாற்றங்களை தமிழக அரசு நிறைவேற்றக் கூடாது எனவும், இப்போதைக்கு அத்திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டுமெனவும், பின்னர் சுமுகமான சூழ்நிலையில் இத்தகைய மாற்றங்கள் குறித்து தமிழக சட்டப்பேரவையிலும், ஆசிரியர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்".
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago