ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்; விவசாயிகளுக்கு நன்மையே அதிகம்: வங்கியாளர்கள் கருத்து

By குள.சண்முகசுந்தரம்

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதனால் கூட்டுறவு முறையின் கட்டுமானம் பாதிக்கப்படும் எனவே, மத்திய அரசு இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் தரப்பிலிருந்தே கண்டனக் குரல்கள் எழுகின்றன. “இது கூட்டாட்சித் தத்துவத்தைக் கேலி செய்யும் நடவடிக்கை” என திமுக தலைவர் ஸ்டாலின் கொதிக்கிறார். ஆனால், “கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதால் விவசாயிகளுக்கு நன்மையே அதிகம்’’ எனக் கூட்டுறவு வங்கியாளர்கள் ஆணித்தரமாகச் சொல்கிறர்கள்.

‘வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1947’-ன் படி கூட்டுறவு வங்கிகள் அனைத்துமே இப்போதும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில்தான் இருக்கின்றன. இந்த வங்கிகளுக்கு லைசென்ஸ் வழங்குவது, ரத்து செய்வது, ஆய்வு செய்வது உள்ளிட்ட அதிகாரங்கள் ரிசர்வ் வங்கியிடம் இருக்கின்றன. ஆனால், நிர்வாக அதிகாரம் மட்டும் மாநில அரசுகளின் கையில் இருக்கின்றன. இந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு கூட்டுறவு வங்கிகளையும், சங்கங்களையும் அரசியல்வாதிகள் தங்கள் இஷ்டத்துக்குச் சுரண்டிக் கொண்டே இருக்கிறார்கள். இந்தச் சுரண்டலால் ஒரு கட்டத்தில் பெரும்பாலான கூட்டுறவு வங்கிகள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு நஷ்டப் பாதையில் பயணிக்கத் தொடங்கின.

ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது இதைச் சரிசெய்து கூட்டுறவு வங்கிகளைத் தூக்கி நிறுத்துவதற்காக வைத்தியநாதன் என்பவர் தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்தார். அதன்படி 2005 பிப்ரவரியில் வைத்தியநாதன் கமிட்டி அரசுக்கு அளித்த பரிந்துரைகளில் மிக மிக முக்கியமானது, கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்கக் கூட்டுறவு வங்கிகளில் (சங்கங்கள்) இப்போதுள்ள இரட்டை அதிகார முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான்.

“கூட்டுறவு வங்கிகளை மாநில அரசுகளின் பிடியிலிருந்து மீட்டு ரிசர்வ் வங்கியின் ஒற்றை அதிகாரத்துக்குள் கொண்டுவர வேண்டும். அதற்கு முன்னதாக, நலிவடைந்த கூட்டுறவு வங்கிகளை மீட்க அந்த வங்கிகளுக்கு மத்திய அரசு உடனடியாக 15 ஆயிரம் கோடி ரூபாய் சீரமைப்பு நிதியை அளிக்க வேண்டும்” என்றும் வைத்தியநாதன் சிபாரிசு செய்திருந்தார்.

இதை ஏற்று அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை கூட்டுறவு வங்கிகள் மறு சீரமைப்புக்காக வழங்கினார். இதனால், அவரது சொந்தத் தொகுதியில் மூடுவிழா காணவிருந்த ‘சிவகங்கை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி’ உள்பட நாடு முழுவதும் ஏராளமான கூட்டுறவு வங்கிகள் நஷ்டத்தை ஈடுகட்டி லாபப் பாதையில் பயணிக்கத் தொடங்கின. இப்போது வரை அது தொடர்கிறது. என்றாலும் வைத்தியநாதன் கமிட்டி சிபாரிசுப்படி கூட்டுறவு வங்கிகள் இன்னமும் ரிசர்வ் வங்கியின் முழுமையான அதிகாரத்துக்குள் கொண்டுவரப் படவில்லை.

நேற்று மத்திய அமைச்சரவை எடுத்திருக்கும் முடிவின் படி, இந்தியா முழுவதுமுள்ள 1,482 நகரக் கூட்டுறவு வங்கிகளையும் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் கிளைகளை வைத்திருக்கும் 58 மல்டி கோ-ஆபரேட்டிவ் வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இதன் மூலம் இந்த வங்கிகளில் முதலீடு செய்திருக்கும் 8.6 கோடி மக்களின் 4.48 லட்சம் கோடி ரூபாய்க்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்பதும் அரசின் வாதம்.

ஆனால் வங்கியாளர்களோ, இந்த 1,540 வங்கிகளை மட்டும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதால் பெரிய அளவில் பலன் கிடைத்துவிடாது. இதில்லாமல் அனைத்து மாநிலங்களிலும் முப்பதுக்கும் மேற்பட்ட மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றின் கீழே இந்தியா முழுமைக்கும் முந்நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் சுமார் ஆயிரம் கிளைகளுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் கட்டுப்பாட்டில் இந்தியா முழுமைக்கும் 96 ஆயிரம் தொடக்க கூட்டுறவு வங்கிகள் (சங்கம்) செயல்படுகின்றன. இந்த வங்கிகள்தான் விவசாயிகளுடன் நேரடித் தொடர்பில் இருப்பவை. இவைதான் விவசாயிகளுக்குக் கடன்களை வழங்கி வருகின்றன. அரசியல்வாதிகள் புகுந்து விளையாடுவதும் இங்குதான்.

இந்த மூன்று அடுக்கிலான வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்லும் வங்கியாளர்கள் அதற்கான காரணங்களையும் அடுக்குகிறார்கள். தற்போது கூட்டுறவு வங்கிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ஆளும் அரசியல்வாதிகள் இஷ்டத்துக்கு வங்கியின் நிதி ஆளுமைகளில் தலையிடுகிறார்கள். தங்களது நிதி ஆதாரத்தைப் பொறுத்துத்தான் வங்கிகள் பயிர்க்கடன் உள்ளிட்ட எந்தக் கடனையும் கொடுக்க முடியும். ஆனால், இதை உணராத அதிகாரப் புள்ளிகள் தங்கள் இஷ்டத்துக்கு அறிக்கைகளை அள்ளிவிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

அண்மையில் அமைச்சர் செல்லூர் ராஜூ, ”ரேஷன் கார்டைக் காட்டினால் கூட்டுறவு வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் கடன் கிடைக்கும்” என்று சொன்னதுகூட அந்த ரகம் தான். தான் சொன்னபடி நடக்க வேண்டுமானால் அதற்கு எத்தனை ஆயிரம் கோடி தேவைப்படும் என்பதை சிந்தித்துப் பாத்திருந்தால் அமைச்சர் இப்படிச் சொல்லி இருக்கமாட்டார். இதேபோல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது இலவச எரிவாயு இணைப்பு கொடுப்பதற்காகக் கூட்டுறவு வங்கிகளை மூச்சுத் திணற வைத்த சம்பவங்களும் உண்டு என்கிறார்கள்.

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் நிலுவையில் வைத்திருந்த சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கான கடனை ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. இப்படி தள்ளுபடி செய்யப்படும் தொகையை பல்வேறு தவணைகளில் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு மாநில அரசு வழங்குவது வழக்கம். கருணாநிதி கடனைத் தள்ளுபடி செய்து 14 வருடங்கள் ஓடிவிட்டன. இன்னமும் அந்தக் கடனுக்கான தவணைத் தொகையில் கூட்டுறவு வங்கிகளுக்குப் பாக்கி வைத்திருக்கிறது அரசு. இதில் அந்தத் தொகை முழுமையாக வழங்கி முடிக்கப்படும் வரை ஏற்படும் வட்டி இழப்பையும் அந்த வங்கிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கூட்டுறவு வங்கிகள் முழுமையாக ரிசர்வ் வங்கியின் கட்டுக்குள் வந்துவிட்டால் ஓட்டுக்காக அரசியல்வாதிகள் நடத்தும் அதிகார தர்பார் எல்லாம் எடுபடாது. ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் எந்தக் கடனையும் தள்ளுபடி செய்யமுடியாது. யாரும் அதிகாரம் செலுத்தி யாருக்கும் கடன் கொடுக்க வைக்க முடியாது. கொடுத்த கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது. இந்த ஷரத்துதான் அரசியல்வாதிகளைச் சீண்டிப் பார்க்கிறது. “விவசாயிகளுக்கு இதனால் பிரச்சினை வரும் என்கிறார்களே?” என்று கேட்டால் அதையும் வங்கியாளர்கள் திட்டவட்டமாக மறுக்கிறார்கள். வங்கியில் கடன்பெற்று விவசாயம் செய்ய நினைக்கும் உண்மையான விவசாயிகளுக்கு உண்மையில் இது வரப்பிரசாதம்தான் என்கிறார்கள்.

இப்போதுள்ள முறைப்படி, கொடுக்கும் கடனுக்கு நபார்டு வங்கி ஒரு குறிப்பிட்ட சதம் வட்டியுடன் மாநிலக் கூட்டுறவு வங்கிக்கு நிதியை ஒதுக்கும். மாநிலக் கூட்டுறவு வங்கி அதிலிருந்து கூடுதல் வட்டி வைத்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளுக்குக் கடன் வழங்கும். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அதிலிருந்து கூடுதல் வட்டி வைத்து தொடக்கக் கூட்டுறவு வங்கிகளுக்கு (சங்கம்) கடன் தருகிறது. தொடக்கக் கூட்டுறவு வங்கிகள் அதிலிருந்து கூடுதல் வட்டி வைத்து விவசாயிகளுக்குக் கடன் வழங்கும். ஆனால், ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் கொண்டு வரப்பட்டால் நபார்டு வங்கி எவ்வளவு வட்டியில் கடன் தருகிறதோ அதே வட்டிக்கு விவசாயிகள் கடன் பெறமுடியும் என்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சிவகங்கை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.எம்.கணேசன், “கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்பது அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் நெடு நாளைய கோரிக்கை. கூட்டுறவு வங்கிகள் சீரமைப்புக்காக அமைக்கப்பட்ட வைத்தியநாதன் கமிட்டியின் சிபாரிசும் அதுதான். எனவே, மத்திய அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும், மல்டி கோ-ஆபரேட்டீவ் வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகள் மட்டுமே ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்கப்படுவதாக மத்திய அரசின் அறிவிப்பில் இருக்கிறது.

மாநில தலைமைக் கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்துக்குள் வருமா வராதா என்பது குறித்த மத்திய அமைச்சரின் அறிவிப்பில் தெளிவு இல்லை. அந்த வங்கிகளையும் ரிசர்வ் வங்கி, தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.

இதன் மூலம் விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் அதிக அளவில் கடன் வழங்க முடியும் என்பதால் இந்த நடவடிக்கையால் விவசாயிகளுக்கு நன்மையே அதிகம் இருக்கும். இதன் மூலம் தொடக்கக் கூட்டுறவு சங்கங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டுதல் கிடைப்பதுடன் தொழில்நுட்ப ரீதியிலும் சங்கங்களை ஒருங்கிணைத்து முறைப்படுத்த முடியும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்