தமிழக ஓசூர் எல்லையில் உள்ள ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி தொடங்கிய வாகனச் சோதனை, கிருமிநாசினி தெளிப்பு மற்றும் தமிழகத்துக்குள் நுழையும் வாகனங்களின் கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகள், இன்றுடன் 3 மாதங்களைக் கடந்த நிலையிலும் கடுமையாக்கப்பட்ட புதிய விதிமுறைகளுடன் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இருமாநில எல்லையில், தேசிய நெடுஞ்சாலையில் செயல்படும் பிரதான சோதனைச்சாவடியாக ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடி விளங்குகிறது. இந்த சோதனைச்சாவடிக்கு தினமும் கர்நாடகா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள் பெங்களூரு வழியாகத் தமிழகத்துக்கு வருகின்றன.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிப்பைத் தொடர்ந்து தமிழக எல்லை மூடப்பட்டது. தமிழ்நாடு - கர்நாடகா இடையே இருமாநில அரசுப் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மருந்து, உணவுப்பொருட்கள் மற்றும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய சரக்கு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. கரோனா எதிரொலியாக தமிழக எல்லை மூடப்பட்டு, ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடியில் தொடங்கிய வாகனச் சோதனை உள்ளிட்ட கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைப் பணிகள் இன்றுடன் 3 மாதங்களை நிறைவு செய்துள்ளன.
இந்நிலையில் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனிடையே மக்கள் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்குச் செல்ல இ-பாஸ் முறை செயல்படுத்தப்பட்டு வருவதால் தமிழகத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக இன்று காலையில் வெளி மாநிலங்களில் இருந்து பெங்களூரு வழியாக ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடிக்கு அதிக அளவில் கார் உள்ளிட்ட வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக வருவதைக் காண முடிந்தது.
இதுகுறித்து ஜுஜுவாடி சோதனைச்சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறியதாவது:
''இந்தச் சோதனைச்சாவடியில் தமிழ்நாடு இ- பாஸ் வைத்துள்ள இதர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தமிழகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்தச் சோதனைச்சாவடிக்கு வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். மேலும் வெளி மாநிலங்களில் பெற்ற இ-பாஸை மட்டுமே வைத்துள்ளவர்களுக்கு தமிழ்நாட்டுக்குள் செல்ல அனுமதியில்லை. அவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இறப்பு நிமித்தமாக வருபவர்களுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய வட மாநிலங்களின் இ-பாஸ் மூலமாக வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். அவர்கள் ஆன்லைன் மூலமாக தமிழ்நாடு இ-பாஸ் பெற்ற பிறகே தமிழகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் தமிழகத்துக்கு வருபவர்கள் குறித்து இங்குள்ள ஆன்லைன் மையத்தில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அங்கு அவர்களைத் தனிமைப்படுத்த, கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இங்கு கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஓசூர் மாநகராட்சி சார்பில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முகாம் அமைத்து வாகனங்களுக்குக் கிருமிநாசினி தெளிப்பு, வாகன எண்களைப் பதிவு செய்வது உள்ளிட்ட பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் மூன்று ஷிப்ட்களில் ஈடுபட்டுள்ளனர். கால்நடைத் துறை சார்பில் ஜுஜுவாடி சோதனைச்சாவடியில் முகாம் அமைக்கப்பட்டு கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு பறவைக் காய்ச்சல் தடுப்புக் கிருமிநாசினி தெளிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இந்தச் சோதனைச்சாவடியில் நடைபெற்று வரும் 24 மணி நேர வாகனச் சோதனை உள்ளிட்ட பணிகளில் காவல்துறை, வருவாய்த் துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச்சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்''.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago