மதுரையில் கரோனாவை ஒழிக்க 15 ஆலோசனைகள்; அமல்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கத் தயார்!- சு.வெங்கடேசன் எம்.பி.

By கே.கே.மகேஷ்

மதுரை மாவட்டத்துக்கு சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் சந்திரமோகனை இன்று காலை சந்தித்து, மதுரையில் கரோனா பரவலைத் தடுக்க எடுக்க வேண்டிய 15 நடவடிக்கைகளைப் பற்றி எழுத்துபூர்வமான மனுவினை அளித்துள்ளார் எம்.பி. சு.வெங்கடேசன்.

இந்த நடவடிக்கைகளை நிறைவேற்றத் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உடனடியாக ஒரு கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு அதிகாரியிடம் சு. வெங்கடேசன் கொடுத்த மனு விவரம் வருமாறு:

''மதுரை மாவட்டத்தில் பெருகிவரும் கரோனா தொற்றினைத் தடுத்திடவும் தொற்றுக்குள்ளான மக்களுக்குச் சிறந்த, உரிய சிகிச்சையை உத்தரவாதப்படுத்தவும் கீழ்க்கண்ட நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்:

1. ஒரு வட்டாரத்துக்கு 2 நடமாடும் கரோனா தொற்று பரிசோதனை (RBSK) வண்டிகள் தற்பொழுது உள்ளன. ஒவ்வொரு வண்டியிலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுநர் உள்ளனர். இவர்களைக் கொண்டு ஒருநாளைக்கு ஒரு முகாம் வீதம் 39 (13 X 3 முகாம்) காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்த வேண்டும். இந்தக் குழுக்களை எக்காரணம் கொண்டும் வேறு பணிகளுக்கு அனுப்பக்கூடாது.

2. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களை, காலை 11 மணிக்குப் பிறகு அவர்களின் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யவேண்டும். அவர்களுக்கான வாகனம் உள்ளிட்ட இதர ஏற்பாடுகளை நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.

3. இவ்வாறு ஒவ்வொரு நாளும் 100 முகாம்கள் நடந்தால், சுமார் 7,500 நபர்களை அவர்கள் இடத்திற்கே சென்று முகாம்களில் சந்திப்பதன் மூலம் காய்ச்சலும் கரோனா அறிகுறிகளும் இருப்பவர்களை நிறைய கண்டறியலாம். அவ்வாறு கண்டறியப்படுபவர்களுக்கு முகாம்களிலேயே கரோனா சளி மாதிரி (swab) எடுக்க வேண்டும். இதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

4. இம்முகாம்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளுக்கு (ஷாமியானா, இருக்கைகள் உள்ளிட்டவை) ஆகும் தொகையை, மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்குள் நடக்கும் அத்தனை முகாம்களுக்கும் ஆகும் தொகையை - எனது நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யத் தயாராக உள்ளேன்.

5. இம்முகாம்களில் மருத்துவர்கள் கண்டறிந்து கரோனா சளி மாதிரிகள் எடுக்கப்பட்டவர்களின் வீடுகள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் சீலிடக் கூடாது. அந்த நபரின் பரிசோதனை முடிவுகள் வரும் வரை வீட்டிலிருந்து அவர் வெளியே வராதவாறு உறுதிசெய்ய வேண்டும்.

6. முகாம்களைத் தவிர மக்கள் தொகை அடர்த்தி அதிகம் இருக்கும் பகுதிகளிலும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதில் கண்டறியப்படும் நபர்கள் கோவிட் சுகாதார மையத்துக்கோ, கோவிட் மருத்துவமனைக்கோ கொண்டு செல்லப்பட வேண்டும்.

7. வெளி மாவட்டத்திலிருந்தோ வெளி மாநிலத்திலிருந்தோ வருகிறவர்களுக்கு மாவட்ட எல்லையிலேயே கரோனா சளி பரிசோதனை செய்யப்படவேண்டும். சோதனை முடிவுகள் வரும்வரை, (ஒரு நாளுக்குள் முடிவுகள் வருவதை உறுதிப்படுத்த வேண்டும்) நிர்வாகம் ஏற்பாடு செய்யும் இடத்திலோ அவரது செலவில் நிர்வாகம் ஏற்பாடு செய்யும் இடத்திலோ அவர்களைத் தங்கவைக்க வேண்டும்.

8. அறிகுறிகளற்ற கோவிட் நோயினரை (asymptomatic positive) பாதுகாப்பாய் பராமரிக்க 1,000 படுக்கை வசதிகள் கொண்ட தனிமைப்படுத்தல் முகாம்களை அமைக்க வேண்டும்.

9. அறிகுறிகளற்ற துணைநோய் உடைய கோவிட் நோயருக்கு (asymptomatic posited with comorbidities) முழு மருத்துவ, அவசர மேல் சிகிச்சைக்குத் தயார் நிலையில் தனித் தடுப்பு ஒதுக்க, வசதி கொண்ட 500 படுக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.

10. வயோதிக மக்களைக் கண்காணித்து அவர்களைப் பராமரிக்க மதுரையில் தனி கோவிட் மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

11. அறிகுறியுடன் இருக்கும் கோவிட் நோயாளிகளுக்கான படுக்கைகளின் எண்ணிக்கையை 2,000 ஆக உயர்த்த வேண்டும்.

12. மதுரையில் கோவிட் நோய்க்கான ஒருங்கிணைந்த ஆயுஷ் சிகிச்சை மையம் அமைக்கப்பட வேண்டும். சென்னையிலும் தமிழகமெங்கும் ஆங்காங்கே நடந்த/ நடைபெறும் சித்த மருத்துவக் கூட்டுச் சிகிச்சையின் பயன் இப்போது அறிவியல் உலகில் நம்பிக்கை அளிப்பதாக வந்து கொண்டிருக்கின்றது. மதுரையிலும் சித்தாவுடன் ஹோமியோபதியும் சேர்த்து ஒருங்கிணைந்த ஆயுஷ் சிகிச்சை மையம் வருவது கோவிட் நோயை கட்டுக்குள் கொண்டுவர பேருதவியாய் இருக்கும்.

13. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் மிக விலையுயர்ந்த மாத்திரைகளான 1.TACROLIMUS, 2.MYCOPHENOLATE, 3.CYCLOSPRIN ஆகியவை தினமும் சாப்பிடவேண்டும். இந்த மாத்திரைகளை நமது ராஜாஜி மருத்துவமனையில் அவர்களுக்கு விலையில்லாமல் தரப்படுகிறது. மதுரையில் சுமார் 80 முதல் 100 நோயாளிகள் இப்படிப் பயன்பெறுகிறார்கள். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக மிகக் குறைவு. அவர்கள் இறுதிச் சடங்கில்கூட கலந்துகொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்படுபவர்கள். கரோனா அச்சுறுத்தல் உள்ள இந்தக் காலத்தில் அரசு மருத்துவமனையின் பெருங்கூட்டத்துக்குள் வந்து அவர்களை மருந்து வாங்கிச் செல்லச் சொல்வது பாதுகாப்பானது அல்ல. எனவே, அவர்களுக்கு வேறு ஒரு இடத்தை அறிவித்து, மாதாமாதம் அங்கு வந்து மருந்து வாங்கிச்செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

14. நாள்தோறும் 3,000 எண்ணிக்கையில் கரோனா பரிசோதனைகள் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

15. மதுரை கரோனா வார்டில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை இரு மடங்கு அதிகரிக்க வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முழு வெற்றியடைய மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நல்ல முயற்சிக்கும் உடன்நிற்கும் அதேநேரத்தில், ஏற்கெனவே எனது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசு ராஜாஜி மருத்துவமனை கோவிட் வார்டுக்குத் தேவையான உபகரணங்களையும் அரசு அலுவர்களுக்கு ஒரு லட்சம் முகக் கவசங்களையும் வாங்கித் தந்துள்ளேன்.

கோவிட் போராட்டத்தின் அடுத்தகட்டமான இப்பொழுது மேற்கண்ட ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தும் பணிகளைச் செய்ய எனது நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேலும் ஒரு கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்வதற்குத் தயாராக உள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்''.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்