மற்றவர்களை வைத்து அறிக்கை விடாமல் எஞ்சிய நாட்களிலாவது கரோனா தடுப்புப்பணியில் கவனம் செலுத்துங்கள்: கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விமர்சனம்

By செய்திப்பிரிவு

மூன்று நாளில் கரோனா ஒழியும் என்றுச் சொன்ன முதல்வர் எதிர்க்கட்சித்தலைவருக்கு பதில் சொல்ல முடியாமல் எடுபிடிகளை வைத்து அறிக்கை விடாமல் எஞ்சிய நாட்களில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு மக்களை காக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“தமிழக அரசியலில், தரமில்லாதவர்களின் கூடாரமாக அதிமுக மாறிவிட்டதை நிரூபிக்கும் வகையில் அபத்தக் களஞ்சியமான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுக் திமுக தலைவர் மீதும், கட்சியினர் முன்னணியினர் மீதும் சேறுவாரி இறைக்கும் கீழ்த்தரமான வேலையில் இறங்கியிருக்கின்றார் தமிழக பால்வளத்துறை அமைச்சர் இராஜேந்திர பாலாஜி.

ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கில் பரவி தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கைச் சூழலைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தையும் பறித்துக் கொண்டு மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் “கரோனா” என்னும் நோய்த் தொற்றில் இருந்து தமிழக மக்களைக் காக்க ஒரு முடியாமல், எங்கள் தலைவரை நோக்கி அவதூறுகளை அள்ளி வீச முற்பட்டிருக்கிறார்கள்.

கரோனா காலத்தில் டெண்டர் விடுவதிலும் அதைத் திறப்பதிலுமே குறியாக இருக்கும் முதல்வர் பழனிசாமி அரசின் யோக்கியதை தமிழக மக்களுக்குத் தெரியாமல் இல்லை. 'ஊரடங்குக்குள் ஊரடங்கு' என்ற 'அரிய கண்டுபிடிப்பால்' தமிழகத்தின் தலைநகரை ஏற்கனவே கரோனாவிற்கானத் தலைமையிடமாக மாற்றிவிட்டு, இன்றைக்குத் தமிழகத்தின் ஏனைய முக்கிய நகரங்களை எல்லாம் ஊரடங்குக்குள் உட்படுத்திவிட்டு தமிழகம் முழுவதும் பரவிவரும் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில்லாமல் தமிழக முதல்வர் பழனிசாமி அரசு நிற்பது அகில இந்தியாவிலும் சந்தி சிரித்துக் கொண்டு இருக்கின்றது.

முதல்வரின் அமைச்சரவை சகாக்களையும் அவரது அலுவலகத்தின் அதிகாரிகளையுமே நோய்த்தொற்றில் இருந்து காப்பாற்ற முடியதாவர்கள் ஒரு பத்திரிகை அலுவகத்தில் நாற்பது பேரை குணப்படுத்தி விட்டதாகத் தம்பட்டம் அடித்து அறிக்கை அளிப்பது வெட்கக்கேடு.

ஆகப்பெரிய அறிவோடு இந்தக் கரோனா பேரிடர் காலத்தைத் தங்களுக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பாகக் கருதி மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளில் கிருமி நாசினி தெளிப்பது வரை ஊழல் செய்து கொண்டு இருப்பவர்கள் இன்னும் சில மாதங்களில் தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்டு தாங்கள் செய்த தவறுகளுக்கு தண்டனை பெறப் போவது உறுதி.

காவிரி டெல்டா வேளாண் மண்டலப் பாதுகாப்புக்கு சட்டம் கொண்டு வருவதாக பம்மாத்து செய்து, புழக்கடை வழியே பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களும், விளைநிலங்களில் குழாய் பதிக்கும் கம்பெனிகளும் உள்ளே நுழைய வழிவகுத்து, விவசாயப் பெருமக்களை வஞ்சித்ததோடு, காவிரி மேலாண்மை ஆணையம் தனக்கான தன்னாட்சி நிலை இழந்து மத்திய நீர்வளத்துறையின் கீழ் ஒன்றாக ஒடுங்கிப் போகும்போது கூட உள்ளம் துடிக்காது மத்திய அரசுக்கு நடுங்கிப் போய் வாய்மூடி மௌனியாக டெல்டா மாவட்ட விவசாயிகளுக்குத் துரோகமிழைத்தவர்கள்.

இன்றைக்கு குடிமராமத்து என்ற பெயரில் அடிக்கும் கொள்ளையை மறைப்பதற்குப் புனித புத்தர் வேடம் போட்டு அறிக்கைவிட்டாலும் ஊழல் சகதியில் எந்நாளும் உழன்று கொண்டிருப்பவர்கள் இவர்கள் தான் என்பதையும் அதில் முன்னணி இடம் வகிப்பவர் ராஜேந்திர பாலாஜிதான் என்பதையும் உலகறியும்.

'மிடாஸ்' சாராய ஆலையின் பங்குதாரர்கள் யார் என்பதையும், வருமானம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கரோனா ஊரடங்கின் நடுவில் டாஸ்மாக் கடைகளை லாபநோக்கிற்காக திறந்துவிட்டு ஊரெல்லாம் தொற்று பரவக் காரணமாக இருந்தவர்கள் யார் என்பதை எல்லாம் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல மறைக்க ராஜேந்திர பாலாஜி முயற்சி செய்தாலும் அவரது கொண்டை வெளியே தெரியாமல் இல்லை.

அதிகார ருசியைக் கடைசி காலத்திலும் ஒவ்வொரு சொட்டும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் வீட்டுக்குப் போகும் நாள் விரைந்து வருவதைக் கண்டு நடுங்குதுயர் கொண்டு மனப்பிறழ்வு அடைந்ததன் விளைவே ராஜேந்திர பாலாஜியின் இந்த அறிக்கை.

“மூன்றே நாட்களுக்குள் கரோனாவை முடித்துக் காட்டுவோம்” என்று முழங்கிய முதல்வர் இன்றைக்கு “என் கையில் என்ன இருக்கின்றது” என்று கைவிரித்து நிற்கும் அளவு கரோனா ஒழிப்பில் முழுத்தோல்வி அடைந்துவிட்ட பரிதாப நிலையை மூடி மறைப்பதற்கென அறிக்கை ஒன்றை எழுதி அமைச்சர் மூலம் வெளியிடுகின்றார்.

அதுசரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் பொறுப்பில் அமர்ந்திருந்தால் தானே நாட்டு மக்களைப் பற்றிக் கவலை வரும். கூவத்தூர் கூடாரத்தில் முதல்வர் பொறுப்பில் ஒட்டிக்கொண்டவர்கள் எரிகிற கொள்ளியில் பிடுங்கிய வரை ஆதாயமாகத்தான் முதல்வர் பதவியைக் கருதுவார்கள். மன்னன் எவ்வழியோ அவ்வழி தாங்களும் என இருக்கும் ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் அதே வழியில் இன்றைக்குப் பயணிக்கின்றார்கள்.

எதிர்கட்சித் தலைவர் விடுக்கும் ஆக்கப் பூர்வமான யோசனைகளைக் கேட்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட கூட்டமுடியாது என்று கூறிய இறுமாப்பு இன்னும் குறையாமல் அறிக்கை எனும் பெயரில் அடிப்பொடிகளை விட்டு அக்கப்போர் செய்யாமல் எஞ்சியிருக்கும் நாட்களிலாவது தமிழக மக்களைத் துயரக்கடலில் தள்ளிவிடாமல் ஆட்சி நடத்த முதல்வர் பழனிசாமி அரசு முன்வர வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்