கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் திடீர் பலி: போலீஸ் தாக்கியதாகக் கூறி உறவினர்கள், வியாபாரிகள் மறியல்

By ரெ.ஜாய்சன்

கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை,மகன் திடீரென பலியான சம்பவத்தில் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள், வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (58). இவர் சாத்தான்குளம் காமராஜ் சிலை அருகே பனமரத் தடிகளை விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.

இந்தக் கடையின் முன் பகுதியில் அவரது மகன் பென்னிக்ஸ் (31) செல்போன் கடை நடத்தி வந்தார். கடந்த 19-ம் தேதி இரவு 7.30 மணியளவில் இருவரும் கடையைத் திறந்து வைத்திருந்ததாகத் தெரிகிறது. அப்போது அங்கு வந்த போலீஸார், கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் கடையை உடனே அடைக்குமாறு கூறியுள்ளனர். இரவு 9 மணி வரை கடையைத் திறக்க அனுமதி இருக்கிறதே என அவர்கள் கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தந்தை, மகன் இருவரையும் போலீஸார் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்தும் தந்தை, மகன் இருவரும் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த போலீஸார் இருவரையும் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் இருவர் மீதும் போலீஸாரை அவதூறாக பேசி, பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப் பதிவு செய்து மறுநாள் (ஜூன் 20) கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு 7.45 மணியளவில் பென்னிக்ஸ் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து சிறைக் காவலர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிறிது நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதேவேளையில் இரவில் ஜெயராஜூம் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து உடனடியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரும் இன்று அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்தார்.

இந்தத் தகவல் அறிந்ததும் சாத்தான்குளத்தில் உறவினர்கள், வியாபாரிகள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் காமராஜர் சிலை முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தை, மகனை தாக்கிய காவல் துறையினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காவல் துறையினரின் தாக்குதல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி காலை 8.30 மணி முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சாத்தான்குளம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயராஜ், செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மறியல் காரணமாக திருச்செந்தூர்- நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும், இந்த சம்பவத்தைக் கண்டித்து சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி, மெஞ்ஞானபுரம், பேய்குளம், தட்டார்மடம் உள்ளிட்ட இடங்களில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் ஏடிஎஸ்பி குமார், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்பிரியா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை. மாலை 3 மணி வரை போராட்டம் தொடர்ந்தது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் ஆகியோர் சாத்தான்குளம் வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் எச்.வசந்தகுமார், ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகியோரை ஆயுதப்படைக்கு பணியிட மாறுதல் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே இச்சம்பம் தொடர்பாக தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்