எனது பெற்றோர் தண்டனைக்குரியவர்கள் இல்லை என்றால் இந்த வழக்கே தேவைப்பட்டிருக்காது; சட்டப் போராட்டத்தைத் தொடருவேன்; கவுசல்யா பேட்டி

By ஆர்.டி.சிவசங்கர்

எனது பெற்றோர் தண்டனைக்குரியவர்கள் இல்லை என்றால் இந்த வழக்கே தேவைப்பட்டிருக்காது என, சங்கர் ஆணவக் கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கவுசல்யா தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கரும், திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த கவுசல்யாவும் காதலித்து 2015 ஆம் ஆண்டு சாதி மறுப்புத் திருமணம் செய்தனர். இந்தத் திருமணத்திற்கு கவுசல்யாவின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 2016 மார்ச் 13-ம் தேதி உடுமலையில் சாலையில் பட்டப்பகலில் மனைவி கவுசல்யாவுடன் சென்ற சங்கர், அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் திருப்பூர் நீதிமன்றம், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீசன், பழனி எம்.மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்கிற கலைதமிழ்வாணன், மதன் என்கிற எம்.மைக்கேல் ஆகிய 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஸ்டீபன் ராஜுக்கு ஆயுள் தண்டனையும், மணிகன்டனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது. மேலும், கவுல்சயாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, உறவினர் பிரசன்னகுமார் ஆகிய 3 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து, தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்குகளில் இன்று (ஜூன் 22) வழங்கப்பட்ட தீர்ப்பில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார். மேலும், ஜெகதீசன், பழனி எம்.மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்கிற கலைதமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல் ஆகிய 5 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகவும் குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட 3 பேரின் விடுதலையை உறுதி செய்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதனால், விடுதலையை எதிர்த்து காவல் துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், ஸ்டீபன் ராஜூக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை, மணிகண்டனுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையும் ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து நீலகிரி மாவட்டம் குன்னூரில் கவுசல்யா கூறும்போது, "சங்கர் கொலை வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. முதலில் அன்னலட்சுமி விடுதலை செய்யப்பட்டார். இப்போது சின்னசாமி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். மற்றவர்களுக்கு மரண தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அன்னலட்சுமி உள்ளிட்டோரின் விடுதலைக்கு எதிரான மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

முதலில் இவ்வளவு அவசரமாக கரோனா காலத்தில் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டுமா? சமூகம் பெரும்பாலும் முடங்கியுள்ள சூழலில் இந்தத் தீர்ப்பை வழங்கியிருப்பது எனக்குள் பல கேள்விகளை எழுப்புகிறது. அதேபோல, தமிழக அரசு இந்த வழக்கைப் போதிய முனைப்போடும் அக்கறையோடும் நடத்தியிருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றதற்கும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றதற்கும் இந்த இரண்டு காலங்களில் என்னோடு அரசுத் தரப்பு கொண்டிருந்த தொடர்புக்கும் பெருத்த வேறுபாட்டை உணர்கிறேன்.

ஆனால், இன்னும் நீதிமன்றத்தின் மீது நான் நம்பிக்கையை இழந்துவிடவில்லை. சட்டப் போராட்டத்தைத் தொடருவேன். உச்ச நீதிமன்றத்ததுக்கு இந்த வழக்கு தமிழக அரசால் எடுத்துச் செல்லப்படும் என நம்புகிறேன். அப்படி நடத்தப்படும்போது உரிய சட்டக் கலந்தாய்வு செய்து எனது தரப்பையும் வழக்கில் இணைத்துக் கொள்வேன். ஒருபோதும் சோர்ந்துவிட மாட்டேன். இன்னும் வேகமெடுத்து, எனது போராட்டத்தைத் தொடருவேன். குறிப்பாக சின்னச்சாமி, அன்னலட்சுமி தண்டனை பெற வேண்டும். அதுதான் சங்கருக்குரிய குற்றவியல் நீதியாக இருக்கும். சங்கருக்கு உரிய நீதி கிடைக்கும் வரை சட்டப் போராட்டத்தை இன்னும் முனைப்புடன் கவனமெடுத்துத் தொடர்வேன்.

சங்கர் கொலைக்கு நேரடிப் பொறுப்பானவர்கள் இப்போது ஆயுள்தண்டனை பெற்றவர்களா அல்லது விடுதலை செய்யப்பட்டிருப்பவர்களா என்கிற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். எனது பெற்றோர் தண்டனைக்குரியவர்கள் இல்லை என்றால் சங்கர் இன்று என்னோடு இருந்திருப்பார். இந்த வழக்கே தேவைப்பட்டிருக்காது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்