தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வாய்ப்புகளைக் காவு கொடுப்பதற்கு தமிழக அரசு முற்றிலும் தயாராகிவிட்டது. மருத்துவப் படிப்பில் சேர முடியாத மாணவர்கள் பொறியியல் படிக்க முடியாத அளவுக்கு பாடத்திட்டம் மாற்றம் செய்ததை திமுக கண்டிப்பதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், விருதுநகர் மாவட்ட வடக்கு திமுக செயலாளருமான தங்கம் தென்னரசு இன்று விடுத்துள்ள அறிக்கை:
“12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்த கையோடு, இந்தக் கல்வியாண்டில் 11-ம் வகுப்பில் மாணவர்களின் சேர்க்கைக்கான பாடப்பிரிவுகள் மூன்று பகுதிகளாக உருவாக்கப்பட்டு; மொழிப்பாடங்களுக்கான ஒன்று மற்றும் இரண்டு ஆகிய பகுதிகள் தவிர்த்து, எஞ்சியுள்ள மூன்றாம் பகுதியில் முக்கிய பாடங்களுக்கென நான்கு பிரிவுகளை உருவாக்கி அவை ஒவ்வொன்றிலும் மொத்தம் 300 மதிப்பெண்கள் இருக்கும் வண்ணம் மூன்றே பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும் தலா 100 மதிப்பெண்கள்) மட்டுமே இருக்கும் வகையில் புதிய பிரிவுகள் உருவாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில்,
» கரோனா தொற்றால் உயிரிழந்தோர்: சேவை மனப்பான்மையுடன் உடல் அடக்கம் செய்யும் எஸ்டிபிஐ தன்னார்வலர்கள்
பகுதி 1 : தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்பாடங்கள்
பகுதி 2 : ஆங்கிலம்
பகுதி 3 : முக்கியப் பாடங்கள் ( core subjects)
பிரிவு I : கணிதம், இயற்பியல்,வேதியியல். பிரிவு II: இயற்பியல், வேதியியல், உயிரியல்
பிரிவு III :கணிதம், இயற்பியல், கணினி அறிவியல்
பிரிவு IV: வேதியியல், உயிரியல், மனையியல்
என்ற வகையில் புதிய பாடப்பிரிவுகள் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கவே ஆறு பாடங்களாக இருந்தவை தற்போது ஐந்தாகக் குறைக்கப்பட்டு மொத்த மதிப்பெண்கள் 600க்குப் பதில் இனி 500 ஆக இருக்குமென்றும் இதன் மூலம் மாணவர்கள் தாங்கள் உயர் கல்வியில் பயில விரும்பும் படிப்பிற்கான (Course) தேர்வினை 11-ம் வகுப்பில் சேரும்போதே இறுதி செய்துகொண்டு அதற்கேற்ப கூடுதல் பாடங்களைப் படிப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம் எனத் “ தேன் தடவிய” விஷத்தை பள்ளிக் கல்வித்துறை சாமர்த்தியமாக மறைத்து இந்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றது.
மேலோட்டமாகப் பார்த்தால் ஏதோ பள்ளிக்கல்வி மாணவர்களின் மன அழுத்தம் போக்கவே பாடங்களைக் குறைத்திருப்பது போன்ற மாயத்தோற்றம் இருந்தாலும், எடப்பாடி அரசின் உண்மை நோக்கம் அதுவல்ல!
“அங்கே தான் இருக்கின்றது ஆச்சாரியாரின் விபீஷண வேலை” என்ற தலைவர் கலைஞரின் வசனத்தைப் போல இந்த மாய்மால அறிவிப்பினைக் கூர்ந்து நோக்கினால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத மாணவர்களுக்குத் தமிழகத்தின் முண்னணிப் பொறியியல் கல்லூரிகளான அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில் நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்ப நிலையம் உள்ளிட்ட எந்தப் பொறியியல் கல்லூரிகளிலும் இடம் கிடைக்கும் ஒரு வாய்ப்பையும் கூட அடியோடு தகர்த்தெறியும் கள்ள நோக்கத்துடனேயே மேற்கொண்ட பிரிவுகள் தந்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது விளங்கும்.
மருத்துவக் கல்லூரியில் இடம்பெற இயலாத மாணவர்கள் இயல்பாகவே தேர்ந்தெடுக்கும் தொழிற்கல்வி என்பது பொறியியல் படிப்புக்களே ஆகும். ஏற்கெனவே “ நீட்” தேர்வு மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து இளம் மாணவியர் உயிர்களைப் பலியாக்கிவிட்ட இந்த அரசு, தனது எஜமான விசுவாசத்தை மீண்டும் நிரூபிப்பதற்காக தமிழக மாணவர்களில் தொழிற் கல்விக் கனவுகளிலும் இந்தத் திட்டத்தின் மூலம் மண்ணை வாரி இறைத்திருக்கின்றது.
அதுமட்டுமல்ல, பிரிவு III மற்றும் IV-ல் சேரும் மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கோ அல்லது பொறியியல் படிப்பிற்கோ விண்ணப்பம் கூடச் செய்ய இயலாத வண்ணம் திட்டமிட்டே இப்பிரிவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல வணிகவியல் பிரிவில் உள்ள பாடங்களின் நிலை குறித்து எந்தத் தகவலும் இல்லாதிருப்பதும்; மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிப் படிப்பிற்கான சில பாடங்களை மட்டுமே குறிவைத்து மாற்ற முனைந்திருப்பதும், இதில் ஆதாயம் பெறக் காத்திருக்கும் சில சக்திகளுக்கு இந்த அரசு துணை போகும் செயலன்றி வேறல்ல.
இதன் வாயிலாகத் தமிழகத்தின் மிகச்சிறந்த பொறியியல் கல்லூரிகளில் உள்ள குறிப்பிட்ட முக்கிய பாடப்பிரிவுகளில் வடநாட்டைச் சார்ந்த மாணவர்களே ஏக போகமாக இடம் பெறும் சூது ஒன்றிற்குத் தமிழக அரசு பலியாகி இருப்பதும், தமிழகத்தின் கல்விக் கட்டமைப்பைப் புதிய கல்விக் கொள்கையின் பெயரால் நிர்மூலமாக்குவதற்கு முன்னரே தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வாய்ப்புகளைக் காவு கொடுப்பதற்கு எடப்பாடி அரசு முற்றிலும் தயாராகி விட்டது என்பதும் வெட்ட வெளிச்சமாகி இருக்கின்றது.
தமிழக மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்புகளை அடியோடு அழிக்கத் துடிக்கும் இந்த மாபெரும் துரோகத்தைக் திமுக வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்த முடிவுகளை உடனடியாகத் திரும்பப் பெற்று பழைய நடைமுறையைத் தொடர வேண்டும் என வலியுறுத்துவதோடு மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் இந்த முடிவு விபரீதத்திற்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கின்றது".
இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago