கரோனா தொற்று முழுமையாக எப்போது ஒழியும் என்பது இறைவனுக்குத்தான் தெரியும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை, வேளச்சேரியில் இன்று (ஜூன் 20) முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
"கரோனா வைரஸ் ஒரு புதிய நோய். ஆரம்பத்தில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களிடத்தில்தான் இந்தத் தொற்று கண்டறியப்பட்டது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மருத்துவப் பணியாளர்களின் முயற்சியால் இன்று குணமடைந்தவர்களின் சதவீதம் 54 சதவீதமாக உள்ளது.
ஊரடங்கு என்பது யாரையும் கட்டாயப்படுத்துவதற்கு அல்ல. யாரையும் சோதனைக்கு உள்ளாக்குவதற்கு அல்ல. பரவலைத் தடுப்பதற்குத்தான் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தொற்றுப் பரவலைத் தடுக்க முடியும். வீடு, வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு இந்த ஊரடங்கு பயன்படுகிறது. ஆங்காங்கே 300 காய்ச்சல் மையங்கள் அமைக்கப்பட்டுப் பரிசோதிக்கப்படுகிறது. இது 450 ஆக அதிகரிக்கப்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அப்போதுதான் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.
எதற்கு ஊரடங்கு என்று பல கட்சித் தலைவர்கள் கேட்கின்றனர். நோய்ப்பரவலைத் தடுக்கத்தான் இந்த ஊரடங்கு. அரசாங்கம் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இதனைக் கட்டுப்படுத்த அனைத்துக் கடுமையான முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது.
இன்று வரை 8 லட்சத்து 27 ஆயிரத்து 980 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனைகளை மேற்கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான். நேற்று மட்டும், 27 ஆயிரத்து 537 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாக்கப்படும். நேற்று வரை 23 ஆயிரத்து 509 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 2,115 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் அடக்கம். இதுவரை 54 ஆயிரத்து 449 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
30 ஆயிரத்து 271 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எந்தவொரு மருந்தும் கண்டுபிடிக்கப்படாத சூழலில் மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சையை அளித்ததாலேயே இவர்கள் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் அரசு சார்பாக 48, தனியார் சார்பாக 35 என 83 பரிசோதனை மையங்கள் உள்ளன. சென்னையில் 17 ஆயிரத்து 500 படுக்கை வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். மருத்துவமனைகளில் 5,000 படுக்கைகளும் மற்ற இடங்களிலும் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன"
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
இதையடுத்து, அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுமா?
வசதி இல்லாதவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வசதி இருப்பவர்கள் தனியார் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். பரிசோதனையும் செய்துகொள்ளலாம்.
ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுமா?
இதுவரை அதற்கான வாய்ப்பு இல்லை.
அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதா?
அவரே இல்லை என்று பேட்டியளித்துள்ளார்.
கரோனா தொற்று முழுமையாக எப்போது ஒழியும்?
இறைவனுக்குத்தான் தெரியும். எனக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரியுமா? நாம் மருத்துவர்கள் கிடையாது. படிப்படியாகத்தான் ஒழிக்க முடியும் என்கின்றனர். தடுக்கத்தான் முடியும், ஒழிக்க முடியாது என நிபுணர்கள் சொல்கின்றனர். முகக்கவசம், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மக்கள்தான் அரசாங்கம். அரசாங்கம் எனத் தனியாக இல்லை. மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதே?
அந்த மருந்து அங்கீகரிக்கப்பட்டு வர வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago