கரோனா தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன? தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்: கமல் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

வெளிப்படைத்தன்மையின்றி செயல்பட்டதன் விளைவே, ஊரடங்குக்குள் ஊரடங்கு எனக் காலம் நீள்கிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, கமல்ஹாசன் இன்று (ஜூன் 19) வெளியிட்ட அறிக்கை:

"மார்ச் 24-ம் தேதி தொடங்கியது இந்த ஒத்துழைப்பு இயக்கம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று தொடங்கியிருக்கும் முழு அடைப்புக்கு முன், கரோனாவில் இருந்து தப்பிக்க சொந்த ஊருக்கு, இருசக்கர வாகனங்களில் கூட செல்லத் துணிந்து விட்ட மக்களைப் பார்க்கும்போது என் மனதில் எழும் கேள்விகள் இவை.

வெளிநாட்டில் இருந்து வருவோர் மூலம் இந்த வியாதி பரவுகிறது எனும் நிலையில், விமான நிலையத்திலேயே அவர்களுக்குப் பரிசோதனைகளைச் செய்திருந்தால் இத்தனை நீண்ட நெடிய ஊரடங்கினை நாம் எதிர்கொள்ள வேண்டியது இருந்திருக்காது. உங்களின் அந்த ஒரு தவறுக்காக ஒட்டுமொத்த தமிழகமும் 68 நாட்கள் ஊரடங்கில் இருந்து, இப்போதுதான் மெதுவாக மீளத் தொடங்கியிருக்கிறது.

'முன்பிருந்த நிலை' என்பதை அடைவதற்கே இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். பல ஆண்டுகள் நம் பொருளாதார நிலையைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது இந்த நுண்ணுயிரி.

சென்னையைத் தவிர்த்து பிற பகுதிகளில் பரிசோதனையே செய்யாமல், கரோனா சென்னைக்குள் மட்டுமே இருப்பது போன்ற பிம்பத்தைக் கட்டமைக்க முயல்வது, பிற மாவட்டத்தினரின் உயிரை அலட்சியப்படுத்தும் செயல் என்பதை உணர்ந்து எப்போது செயல்படப்போகிறது இந்த அரசு? பரவலான பரிசோதனையை எல்லா மாவட்டத்திலும் செய்து, உண்மை நிலையை தெளிவுபடுத்தியிருந்தால், கரோனாவிலிருந்து தப்பிக்க, சென்னையை விட்டு வெளியேறினால் போதும் என்ற மக்களின் மனநிலையையும், காவல் துறை சோதனைச்சாவடிகள் அமைத்து தடுக்கும் நிலையினையும் தவிர்த்திருக்கலாம்.

இதை எதையுமே செய்யாமல் ஊர்ப் பெயர்களை மாற்றி, பின் அதைத் திரும்பப்பெற்று என செயலாடிக் கொண்டிருக்கிறது அரசு.

83 நாட்களாக ஊரடங்கில் இருக்கும் சென்னையில், மீண்டும் ஒரு முழு ஊரடங்கு என அறிவித்திருந்தார் முதல்வர். ஏற்கெனவே சற்றே தளர்த்தப்பட்ட ஊரடங்கில் இருக்கும் சென்னைக்கு எப்படி மறுபடியும் ஊரடங்கு என்பதைக் கூட யோசிக்காமல் அறிவிக்கும் முதல்வரும், அமைச்சர்களும் தான் நம்மைக் காப்பதற்கான பொறுப்பில் இருப்பவர்கள்.

'ஊரடங்குக்குள் இன்னொரு ஊரடங்கு' என ஏற்கெனவே அறிவித்து மக்களைப் பயமுறுத்தி, கோயம்பேடு தொற்றினை உருவாக்கினார்கள். ஒரு மாதத்துக்கு முன்பு செய்த தவறில் இருந்து கூட பாடம் கற்காமல் மீண்டும் அதே தவறைச் செய்கிறார்கள். மக்களின் ஒத்துழைப்பு அதிகம் தேவைப்படுவதால் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

'அத்தியாவசியப் பொருட்களின் இருப்பும், விநியோகமும் உறுதி செய்யப்படும்' என்கின்ற உறுதிகள் வழங்கப்பட்டாலும் கூட மக்கள் கண்டிப்பாக பதற்றம் அடைவார்கள் என்ற முன்யோசனையின்றி செயல்படுவது ஏன்? ஊரடங்கு என்பது தொற்று பரவலைத் தடுக்கும் முயற்சிதான். ஆனால் ஏற்கெனவே இருக்கும் தொற்றினைக் கட்டுப்படுத்த பரவலான பரிசோதனை முக்கியம் என்று அறிஞர்கள் சொன்ன போதெல்லாம், அதைக் காதில் வாங்காமல் 300, 400 பேருக்கு மட்டும் பரிசோதனை செய்ததன் விளைவு, இன்று இந்த பொது முடக்கமும், அதன் விளைவாக பொருளாதார முடக்கமும்.

மக்களின் ஒத்துழைப்பை தொடர்ந்து வென்றெடுப்பதற்கு, நேர்மையாக தகவல்களைப் பரிமாறாமல், வெளிப்படைத்தன்மையின்றி செயல்பட்டதன் விளைவே, ஊரடங்குக்குள் ஊரடங்கு எனக் காலம் நீள்கிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று ஆரம்பித்திருக்கும் இந்த முழு ஊரடங்கு காலத்திலாவது, மக்கள் உள்ளிருக்கும்போது அரசு என்ன தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்பதையும், அதற்கு மக்கள் ஒத்துழைப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும் மக்களுக்கு விளக்க வேண்டியது அரசின் கடமை. இதை ஒரு கட்சியின் தலைவராக கேட்கவில்லை. அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைத்த, ஒத்துழைக்கின்ற, அரசின் உத்தரவுகளை மதிக்கும், ஒரு சாமானியனாகக் கேட்கிறேன். அரசு தெளிவுபடுத்த வேண்டும்".

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்