மதுரையின் ஆங்கில உச்சரிப்புப் பெயரில் மாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை திரும்பப் பெறப்பட்டதால், ஜவஹர்லால் நேரு சூட்டிய ஆங்கில உச்சரிப்புப் பெயர் நிலை பெற்றிருப்பதாக தமிழாசிரியர் தேவராஜ் அதிசயராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மதுரை உட்பட 1,018 ஊர்ப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்று ஆங்கிலத்தில் மாற்றியமைக்கப்பட்டன. அதன்படி மதுரை இதுவரை ஆங்கிலத்தில் MADURAI என எழுதப்பட்ட நிலையில் , MATHURAI என மாற்றியமைக்கப்பட்டது.
இந்த ஆங்கில உச்சரிப்பு மாற்றத்தில் வேலூர், வீலூர் எனவும், விழுப்புரம், வில்லுப்புரம் என மாறியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து ஊர்ப் பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு தொடர்பான அரசாணையை அரசு திரும்பப் பெற்றது. அரசாணை திரும்பப் பெறப்பட்டதால், பழம்பெரும் நகரமான மதுரைக்கு ஜவஹர்லால் நேரு சூட்டிய ‘MADURAI’ என்ற ஆங்கில உச்சரிப்புப் பெயர் நீடித்து நிலைத்திருப்பதாக தமிழாசிரியர் தேவராஜ் அதிசயராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், ‘தமிழ் இந்து திசை’யிடம் கூறியதாவது:
’’பாண்டிய மன்னன் வைகை ஆற்றங்கரையில் தனது தலைநகரை நிறுவி, அம்மாநகருக்கு மதுரை என்று பெயர் வைத்தான். இதற்கு ஒரு காரணம் உண்டு. இன்று ஐந்து கண்டங்களாக இருக்கும் உலகம், ஊழிக் காலத்தில் ஒரே கண்டமாக இருந்தது.
» 10,11-ம் வகுப்புகளில் எவ்வளவு மதிப்பெண் எடுத்திருந்தாலும் அனைவரும் தேர்ச்சி: அரசு உத்தரவு
இக்கண்டம் இன்றைய கன்னியாகுமரிக்குத் தெற்கே உள்ள கடலுக்குள் இருந்தது . தமிழ் இலக்கியங்கள் இக்கண்டத்தைக் குமரிக்கண்டம் என்றும் வரலாற்றாய்வாளர்கள் லெமூரியா கண்டம் என்றும் அழைக்கின்றனர். இங்குதான் முதன்மொழி தமிழ் தோன்றியது. தமிழினம் தோன்றியது.
குமரிக் கண்டத்தில் ஓடிய பஃறுளி ஆற்றங்கரையில் பாண்டிய மன்னனின் தலைநகரம் அமைந்திருந்தது. இந்நகருக்கு மதுரை என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. இங்குதான் முதல் தமிழ்ச் சங்கம் அமைந்து , தமிழ்ப் புலவர்கள் தமிழாய்ந்தனர். பாண்டிய மன்னன் தலைமையில் தமிழ்ச் சங்கம் இயங்கி வந்தது.
ஒரே கண்டம் கடல் கோளால் பல கண்டங்களாகப் பிரிந்தபோது, குமரிக் கண்டம் அழிந்தது. இதனால் தமிழர்கள் வடக்கே நகர்ந்து கபாடபுரம் வந்தனர். இங்கே இரண்டாவது தமிழ்ச் சங்கம் இருந்தது. மற்றொரு கடல் கோளால் கபாடபுரம் மறைந்தபோது , தமிழர்கள் மேலும் வடக்கே நகர்ந்து வைகைக் கரைக்கு வந்தனர்.
இங்கே அமைந்த பாண்டிய நாட்டுத் தலைநகருக்கு, மதுரைப் பெயரைச் சூட்டி பாண்டிய மன்னன் மகிழ்ந்தான். இதனால் குமரிக் கண்டம் மதுரையை தென்மதுரை என்றும் வைகைக்கரை மதுரையை வடமதுரை என்றும் இலக்கியம் கூறுகிறது. வைகை மதுரையில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் முத்தமிழ் வளர்த்தது.
மதுரை நகருக்குக் கூடல், நான்மாடக்கூடல், ஆலவாய், கடம்பவனம், கோயில் மாநகரம் உட்பட பல பெயர்கள் இருந்தபோதும், மதுரை என்ற பெயரே நிலைத்து நிற்கிறது. பாண்டியப் பேரரசுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த மாற்றரசர்களும் வேற்றரசர்களும் மதுரையைத் தலைநகராகக் கொண்டிருந்தனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மதுரை மாநகரம் மாவட்டத் தலைநகரானது. ஆங்கிலேயர்களுக்குத் சில தமிழ் எழுத்துகளை உச்சரிப்பது சிரமமாக இருந்தது. ஆகவே அவர்கள் உச்சரிப்பதற்கு வசதியாக தமிழ் எழுத்தை உச்சரித்தனர். அப்படித்தான். மதுரை என்று உச்சரிக்க முடியாத ஆங்கிலேயர்கள் மதுரையை மெஜூரா என்று உச்சரித்தனர்.
இதை ஆங்கிலத்தில் MADURA என்று எழுதினார்கள். அரசு ஆவணங்களில் இப்படியே எழுதப்பட்டன. இதன் அடிப்படையில்தான் "மெஜூரா காலேஜ்" "மெஜூரா கோட்ஸ்" போன்ற பெயர்கள் இன்றும் நிலைத்துள்ளன. அமெரிக்கன் மிஷனெரிகள் மதுரையை MADUREI என்று எழுதின.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மதுரையை MATHURAI என்று ஆங்கிலத்தில் எழுதும் புதிய முறை நடைமுறைக்கு வந்தது. அரசு ஆவணங்களில் இம்முறையே கடைப்பிடிக்கப்பட்டது. இவ்வாறு MATHURAI என்று மதுரையை எழுதும்போது புதிய ஒரு பிரச்சினை உருவெடுத்தது.
வட இந்தியாவில் உள்ள மதுரா நகரத்தை ஆங்கிலத்தில் MATHURA என்று எழுதுகிறார்கள். தபால்களைப் பிரிக்கும்போது ஒரே ஒரு எழுத்தினால் (MATHURAI- MATHURA) தவறுதலாக மதுரைக்கு வர வேண்டிய அனேகத் தபால்கள் மதுராவுக்குப் போயின. அந்நாட்களில் தபால் குறியீடு எண் (PIN) கிடையாது. இதனால் பல சங்கடங்கள் ஏற்பட்டன.
அப்போது நமது நாட்டின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவின் கவனத்திற்கு இப்பிரச்சினை சென்றது. இது குறித்து அன்றைய மதுரை நகரசபை தலைவர் டி.கே.ரமாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் மதுரையை MATHURAI என்று எழுதுவதை மாற்றம் செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
நேருவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட டி.கே.ரமா கல்லூரி முதல்வர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பிரமுகர்கள் அடங்கிய கூட்டத்தைக் கூட்டினார். நேருவின் கோரிக்கை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் MADHURAI மற்றும் MADURAI என்னும் இரு பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இவ்விரு பெயர்களில் நேருவின் ஆலோசனையின் பேரில் MADURAI என்பதை மத்திய அரசு தேர்ந்தெடுத்து நடைமுறைக்குக் கொண்டு வந்தது.
இந்த பெயரையே மீண்டும் MATHURAI என மாற்றியமைத்து அரசு உத்தரவிட்டது. தற்போது அந்த முயற்சி கைவிடப்பட்டிருப்பதால் நேரு வைத்த MADURAI என்ற ஆங்கிலப் பெயர் மாறாமல் நிலைத்துள்ளது’’.
இவ்வாறு தமிழாசிரியர் தேவராஜ் அதிசயராஜ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago