சென்னை, கடலூர், விழுப்புரத்தில் இருந்து வருவோராலேயே புதுச்சேரியில் கரோனா தொற்று பரவுகிறது; முதல்வர் நாராயணசாமி தகவல் 

By அ.முன்னடியான்

சென்னை, கடலூர், விழுப்புரத்தில் இருந்து வருவோராலேயே புதுச்சேரியில் கரோனா தொற்று பரவுகிறது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (ஜூன் 18) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"புதுச்சேரி மாநிலத்தில் ஜூன் 3 ஆம் தேதியிலிருந்து கடைகள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இரவு 9 மணி வரை செயல்படுவதற்கு உத்தரவிட்டோம். அதன் பிறகு சென்னையில் மிகப்பெரிய அளவில் கரோனா தொற்று பரவி வருகிறது.

சென்னையிலிருந்து வருபவர்கள் மூலமாக புதுச்சேரியிலும் கரோனா பரவ ஆரம்பித்தது. ஜூன் 8 ஆம் தேதியிலிருந்து கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளைத் திறந்து பாதுகாப்பான முறையில் வழிபட உத்தரவிட்டாலும்கூட கூட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, ஜூன் 1 ஆம் தேதியிலிருந்து 14 ஆம் தேதி வரை கரோனா தொற்றின் தாக்கம் 67 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமைச்சர், சுகாதார அதிகாரிகளை அழைத்துப் பேசினேன். புதுச்சேரியில் இரவு 9 மணியிலிருந்து காலை 6 மணி வரை வெளியில் யாரும் நடமாடக் கூடாது. வெளிமாநிலத்திலிருந்து வருபவர்களை முழுமையாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என உத்தரவு போட்டிருந்தோம்.

அது நேற்றிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. அதன் அடிப்படையில் கரோனா தொற்று குறையும் என்ற நம்பிக்கை உள்ளது. சிவப்பு மண்டலமான சென்னையில் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்த பிறகு, அங்கு இருப்பவர்கள் யாரிடமும் கூறாமல் குறுக்கு வழியில் புதுச்சேரிக்கு நுழைகிறார்கள். இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

கடுமையான நோய் இருப்பவர்களைத் தவிர்த்து யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று உத்தரவிட்ட பிறகு நிலைமை மாறும் என்று நினைக்கிறேன். நம்முடைய மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவுவதற்குக் காரணமாக இருப்பது, சென்னை, விழுப்புரம், கடலூர் பகுதியாகும்.

அங்கிருந்து வருபவர்கள் இங்கே கரோனாவைப் பரப்பி விட்டுச் செல்கின்றனர். இதனால் புதுச்சேரி, காரைக்காலில் பல இடங்களில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யார் உள்ளே வந்தாலும் அனுமதிக்கக் கூடாது. மீறி வந்தால் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.

இன்று காலை நானும், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவும் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரிக்குச் சென்று ஆய்வு செய்தோம். அங்கு ஒரு நாளைக்கு 300 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தினமும் 100 பேருக்குத்தான் எடுக்கப்படுகிறது. அதனை உயர்த்த வேண்டும் என உத்தரவிட்டேன்.

ஜிப்மரில் தினமும் 300 பேருக்குப் பரிசோதனை செய்ய உபகரணங்கள் உள்ளன. ஆனால், அங்கு குறைந்த அளவிலேயே பரிசோதனை செய்கிறார்கள். அங்கும் பரிசோதனையை உயர்த்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். மேலும், மருத்துவர்கள் புதுச்சேரி மக்களைக் காப்பாற்றுவதற்கு முழுமையாக பாடுபட வேண்டும் என வலியுறுத்திக் கூறினேன்.

இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. தேவையான ஊழியர்கள் வேண்டும். மருத்துவ உபகரணங்கள் அதிகமாக வாங்கித் தர வேண்டும் எனக் கல்லூரிப் பேராசிரியர்கள் கூறினார்கள். மாநில சுகாதார இயக்கக் கூட்டத்தில் எடுத்த முடிவுப்படி தேவைப்படுகிற மருத்துவர், செவிலியர், ஆஷா பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கிறோம். முதல்வர் நிவாரண நிதியிலிருந்து மருத்துவ உபகணரங்கள் வாங்கத் தயாராக உள்ளோம் என்றேன்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்கின்ற மனப்பான்மை மருத்தவர்களுக்கு வந்துள்ளது. நாம் இந்த மருத்துவர்கள், செவிலியர்களை ஊக்குவிக்க வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் 'சண்டே மார்க்கெட்' திறக்க அனுமதி வழங்கமாட்டோம். மீறிக் கடைகள் வைப்போர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படும். கடைகளின் நேரம் குறைப்பது குறித்து கடை வியாபாரிகளை அழைத்துப் பேசி முடிவு செய்யப்படும்.

காவல்துறை பணியாளர் நியமனம் சம்பந்தமாக காவல்துறை தலைவரை அழைத்துப் பேசினேன். உடனடியாக நியமன நடவடிக்கை எடுக்க வேண்டும், கரோனாவை வைத்துக் காலதாமதம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளேன். அதேபோல் மின்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள சுமார் 9 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஒருபுறம் கரோனா தொற்றைத் தடுக்கப் பணிபுரிந்தாலும், மற்றொரு புறம் அரசு இயந்திரம் செயல்பட வேண்டும். மாநிலத்துக்கு வருவாயை உருவாக்க பொருளாதார வளர்ச்சி ஏற்படுதவற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மாநிலத்தைப் பொறுத்தவரை மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால்தான் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்".

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்