லடாக் எல்லையில் சீன ராணுவத்தால் தாக்கப்பட்டு வீரமரணம் அடைந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் பழனியின் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் சொந்த கிராமத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
கிழக்கு லடாக் எல்லையில் இந்திய- சீன ராணுவத்தினரிடையே கடந்த 15-ம் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதில் வீர மரணம் அடைந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் கடுக்கலூரைச் சேர்ந்த காளிமுத்து மகன் ஹவில்தார் பழனியின் உடல் ராணுவ விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.
விமான நிலையத்தில் வீரர் பழனியின் உடலுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், எம்பி வெங்கடேசன், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அதனையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்திற்கு அவரது உடல் மாற்றப்பட்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியிலிருந்து கடுக்கலூர் கிராமம் வரை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
ராணுவ வாகனத்தில் இருந்து பழனியின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி , ராணுவ பேண்டு வாத்தியம் முழங்க அவரது கடுக்கலூர் வீட்டிற்கு அதிகாலை 3.15 மணிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ராணுவ வீரர்கள் பழனியின் உடலை சுமந்து சென்று வீட்டின் முன் வைத்து, துப்பாக்கியை தலைகீழாகப் பிடித்து மரியாதை செலுத்தினர்.
பழனி உடலைக் கண்டதும் அவரது தந்தை காளிமுத்து, தாய் லோகாம்பாள், பழனியின் மனைவி வானதிதேவி, குழந்தைகள் பிரசன்னா, திவ்யா, அவரது சகோதரர் இதயக்கனி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
அரசின் ரூ.20 லட்சம் நிதியுதவி:
தொடர்ந்து பழனியின் உடலுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார், பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர், அதிமுக மாவட்டச் செயலர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது தமிழக அரசின் சார்பில் ரூ.20 லட்சத்துக்கான காசோலையை அவரது குடும்பத்தாரிடம் ஆட்சியர் வழங்கினார்.
ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்:
பழனியின் உடலை நல்லடக்கம் செய்வதற்காக அவரது வீட்டுக்கு எதிர்ப்பகுதியில் உள்ள பிரதான சாலையோரம் சொந்த இடத்தில் இன்று காலை 6.30 மணி முதல் பணிகள் நடைபெற்றது. முன்னதாக குடும்பத்தினரின் பாரம்பரிய சடங்குகள் முடிந்தவுடன் அவரது உடலை ராணுவ வீரர்கள் காலை 7.05 மணிக்கு கொண்டு வந்தனர்.
வழியில் பொதுமக்கள் மலர்தூவி கண்ணீரஞ்சலி செலுத்தினர். அடக்க இடத்தில் வைக்கப்பட்ட பழனியின் உடலுக்கு அரசு சார்பில் ராமநாதபுரம் ஆட்சியர் கொ.வீரராகவராவ், ராமநாதபுரம் சரக டிஐஜி ரூபேஷ் குமார் மீனா, காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார், சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ் உள்ளிட்டோர் மலர் வளையும் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இறுதியாக முப்படையினர் சார்பில் உச்சிப்புளி பருந்து கடற்படை விமானத்தள கமாண்டிங் அதிகாரி வெங்கடேஷ் அய்யர் உள்ளிட்டோர் ராணுவத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
பின் வீரர் பழனியின் உடலில் போர்த்தியிருந்த தேசியக்கொடி முறைப்படி மரியாதையுன் மடிக்கப்பட்டு பழனியின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின் சோககீதம் இசைக்கப்பட்டு 21 குண்டுகள் முழங்க காலை 7.45 மணிக்கு வீரர் பழனியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக பழனியின் மகன் பிரசன்னா(10) சடங்குகளை செய்தார்.
அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி:
இறுதிச் சடங்கில் ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி, எம்எல்ஏக்கள் சதன்பிரபாகர் (பரமக்குடி), எஸ்.கருணாஸ் (திருவாடானை), மலேசியாபாண்டியன் (முதுகுளத்தூர்) மற்றும் பாஜகா மாநிலத் தலைவர் முருகன், மாநில துணைத் தலைவர் குப்புராம், மாவட்டத் தலைவர் முரளிதரன், காங்கிரஸ் மாநில செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார், ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் தெய்வேந்திரன், திமுக மாவட்டப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், அமமுக மாவட்டச் செயலர் வ.து.ஆனந்த், தேமுதிக மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா மற்றும் இந்து முன்னணி பிரமுகர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago