கரோனா அலையிலும் கரை சேரும் திருப்பூர் பனியன் நிறுவனங்கள்!

By கா.சு.வேலாயுதன்

கரோனா காரணமாகப் பல்வேறு தொழில்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்தக் கரோனாவையே மூலதனமாக மாற்றி வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன திருப்பூர் பனியன் தயாரிப்பு நிறுவனங்கள். ஆம், ஆரம்பத்தில் மாற்று ஏற்பாடாக முகக்கவசம், மருத்துவர்கள் அணியும் கவச உடைகள் போன்றவற்றைத் தயாரிக்க முன்வந்த இந்நிறுவனங்கள், தற்போது அவற்றை அதிக அளவில் தயாரித்து அசத்திக் கொண்டிருக்கின்றன.

பனியன் ஏற்றுமதி செய்யும் பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி உள்நாட்டு பனியன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்களும், ஜாப் ஆர்டர் நிறுவனங்களும் நிறைந்துள்ள நகரம் திருப்பூர். தென் மாவட்ட, வடமாவட்டத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, வட இந்தியத் தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பை அள்ளித்தந்த இந்நகரம், கரோனா முடக்கத்தால் கடும் பாதிப்பைச் சந்தித்தது. இதையடுத்து வட இந்தியத் தொழிலாளர்கள் கொத்துக் கொத்தாய்த் தம் சொந்த ஊர் திரும்ப ஆரம்பித்தனர்.

இந்த நேரத்தில்தான் சில பனியன் நிறுவனங்கள், இருக்கிற பனியன் துணிகளைக் கொண்டு முகக்கவசம் தயாரிப்பதில் இறங்கின. பனியன் உற்பத்தியில் கிடைப்பது போல் பெரிய அளவில் இதில் வருவாய் இல்லாவிட்டாலும் தங்களிடம் வேலை செய்யும் சொற்ப நபர்களுக்கு, குறிப்பாகத் தையல் மிஷின், எம்ப்ராய்டிங் மெஷின் வைத்துப் பணியாற்றும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்த மாதிரி ஆகுமே என இந்தத் தொழிலைச் செய்ய ஆரம்பித்தன. இதன் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குத் திருப்பூர் முகக் கவசங்கள் விற்பனைக்குச் சென்றன.

இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை சுமார் 15 நிறுவனங்கள் மட்டும் இப்பணியில் ஈடுபட்டுவந்தன. ஒவ்வொரு நிறுவனமும் தினசரி தலா 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை முகக்கவசங்கள் தயாரித்து வந்தன. ஒவ்வொரு கவசமும் ரூ. 5 தொடங்கி ரூ. 30 வரை விற்கப்பட்டன. “கரணம் தப்பினால் மரணம் என்கிற கதையாக ஒரு முகக்கவசத்திற்கு 50 காசுகள் கிடைத்தாலே பெரிய விஷயம். அதிலும், ஒரு முகக்கவசம் காணாமல் போனால் 60 முகக்கவசங்கள் விற்றால்தான் நஷ்டத்தை ஈடு செய்ய முடியும். இப்போதைக்குத் தொழில் இல்லாததால் இதைச் செய்கிறோம்” என்றே அந்நிறுவனங்களின் உரிமையாளர்கள் கூறிவந்தனர்.

ஆனால், இன்று கதையே தலைகீழாக மாறியிருக்கிறது. இப்போது 7,000-க்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் முகக்கவசத் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றன. சொந்த ஊருக்குத் திரும்பிவிட்ட தொழிலாளர்கள் தவிர, மீதம் இருக்கிற தொழிலாளிகளுக்கு முழுமையாக வேலை அளிப்பது என்று இறங்கிவிட்டன. “இதன் மூலம் திருப்பூரில் மட்டும் தினசரி சுமார் 20 லட்சம் முகக்கவசங்கள் தயாராகின்றன. ஒரு முறை பயன்படுத்தும் முகக்கவசங்கள் முதல், இரட்டை அடுக்கு முகக்கவசங்கள், மூன்று அடுக்கு முகக்கவசங்கள் என பத்து வகையிலான முகக்கவசங்கள் தயாராகின்றன. இவை சராசரியாக ரூ.3-ல் ஆரம்பித்து ரூ.80 வரை விற்கப்படுகின்றன” என்கிறார் ஆரம்பத்திலிருந்து முகக்கவசத் தொழிலில் ஈடுபட்டுள்ள பனியன் நிறுவன உரிமையாளர் கணேஷ்.

இவரது நிறுவனம், இரண்டு மாதங்களுக்கு முன்பு தினசரி 20 ஆயிரத்தில் ஆரம்பித்து 50 ஆயிரம் முகக்கவசங்களைத் தயாரித்தது. தற்போது தயாரிப்புப் பற்றாக்குறையால் மற்ற நிறுவனங்களிடம் தினசரி கூடுதலாக 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை முகக்கவசங்களை வாங்கி கைமாற்றிவிடும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார் கணேஷ்.

முகக்கவசம் மட்டுமல்லாது, மருத்துவர்கள் பயன்படுத்தும் தனிநபர் பாதுகாப்பு உடைக்கும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. திருப்பூரில் இரண்டு மாதங்களுக்கு முன்பு 350 ரூபாய்க்குச் சில சிறு நிறுவனங்களே இவற்றைத் தயாரித்து வந்தன. இப்போது பெரிய நிறுவனங்களும் இதில் ஈடுபட்டிருக்கின்றன. உடைகளின் தரத்திற்கேற்ப அவற்றின் விலையும் நிர்ணயிக்கப்படுகின்றன. அதற்கேற்ப இந்திய அளவில் ஆர்டர்களும் குவிகின்றனவாம்.

குறிப்பாக, மத்திய அரசிலும், ஆந்திர அரசிலும் செல்வாக்குள்ள தமிழக அரசியல் பிரமுகர் ஒருவரின் நிறுவனத்துக்கு 25 லட்சம் பாதுகாப்புக் கவச உடைகள் ஆர்டர் கிடைத்துள்ளனவாம். இவை எல்லாம் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பப்பட உள்ளன. இந்த ஆர்டரை முக்கியமான நான்கைந்து நிறுவனங்களே பங்கு போட்டு மற்ற நிறுவனங்களுக்கு ‘சப் – கான்ட்ராக்ட்’ விட்டுக் கொண்டிருக்கின்றன.

கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் மாற்றுச் சிந்தனையுடன் இயங்குபவர்கள் எப்படியேனும் கரை சேர்ந்துவிடுவார்கள்.

திருப்பூர் நிறுவனங்கள் சொல்லும் பாடம் இதுதான்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்