கரோனா பேரிடரிலும் அரசியல் செய்யும் ஒரு ஆட்சி தமிழகத்தில் இருப்பது மக்களின் சாபக்கேடு என, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, டி.ஆர்.பாலு இன்று (ஜூன் 16) வெளியிட்ட அறிக்கை:
'' 'கரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு திணறி வருவதாக திமுக தலைவர் கூறுவது முற்றிலும் தவறானது' என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுவதற்கு தகுதி இருக்கிறதா என்பதைச் சற்று அவர் யோசித்துப் பார்க்க வேண்டும்.
இந்தக் கொடிய கரோனா நோய் மக்களின் உயிரோடு சம்பந்தப்பட்டது. தினமும் இறக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தோடு சம்பந்தப்பட்டது என்பதை அமைச்சர் விஜயபாஸ்கர் இவ்வளவு மரணங்களுக்குப் பிறகும் தெரிந்து கொள்ளவில்லை என்றால், இவரைத் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகப் பெற்றது முதல் பாவம்!
» உதவிப் பொறியாளருக்கு கரோனா தொற்று எதிராலி: வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் நுழையத் தடை
'கரோனா நோய் சிகிச்சைக்கு மருத்துவமனை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துங்கள்' என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ஜனவரி 7-ம் தேதியே எழுதிய கடிதத்தைத் வைத்துக்கொண்டு இன்றுவரை முழு வீச்சில் நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக் கொண்டிருப்பது யார்? மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், முதல்வரும்தான் என்பதை மறுக்க முடியுமா?
'அனைவரும் முகக்கவசம் போட வேண்டிய அவசியமில்லை' என்று பேட்டி கொடுத்தது யார்? விஜயபாஸ்கர்தான்!
'தமிழகத்தில் உள்ள யாருக்கும் கரோனா நோய்த் தொற்று இல்லை', 'மதுரையில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவரின் தொடர்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே சமூகப் பரவல், 'இதோ வருகிறது; அதோ வருகிறது என்று கூறி அதிவிரைவு பரிசோதனைக் கருவிகளை வாங்காமல் மூன்று மாதங்கள் தூங்கியது', '236-க்கும் மேற்பட்ட கரோனா மரணத்தை வெளியிடாமல் மறைத்தது', 'சென்னை மாநகரில் உள்ள அரசு பொது மருத்துவமனையின் டீன் விடுமுறையில் சென்றது', 'அங்கு ஒரு மூத்த செவிலியர் கரோனா நோய்க்குப் பலியானது' எல்லாம் யார் துறையில் நடைபெற்றது? அமைச்சர் விஜயபாஸ்கர் துறையில்தானே!
ஏன் இன்றைக்குத் தனது துறைச் செயலாளரைக் கூட சரிவர வழிகாட்ட முடியாமல், அவரை பணியிட மாற்றத்தில் இருந்து காப்பாற்றவும் முடியாமல் தவிப்பது யார்? நிர்வாகத் தோல்விக்காக தன் துறை செயலாளர் மாற்றப்பட்டவுடன் அமைச்சர் விஜயபாஸ்கரும் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டுப் போயிருக்க வேண்டும்.
அவர் எங்கள் தலைவரைப் பார்த்து உளறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அமைச்சர் விஜயபாஸ்கர்: கோப்புப்படம்
திமுக தலைவர் தொடக்கத்திலிருந்து, அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு, அரசுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். திமுக தலைவர் வைத்த கோரிக்கைகளையே ஒவ்வொன்றாக காலதாமதமாக இன்றைக்கு அதிமுக அரசு செய்து வருகிறதே தவிர, சுயமாக ஒரு முடிவையும் இதுவரை எடுத்து அறிவிக்கவில்லை.
நேற்றைய தினம் பத்திரிகையாளர்களுடனான காணொலிச் சந்திப்பில் அரசின் தோல்விகளை அடுக்கடுக்காக திமுக தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதில் ஒன்றுக்குக் கூட இதுவரை அமைச்சர் விஜயபாஸ்கரோ, முதல்வரோ பதில் சொல்ல முடியவில்லை. 'சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்'!
ஈவு இரக்கமின்றி 236 கரோனா உயிர்ப் பலிகளை மறைத்துவிட்டு, சென்னையில் நோய்த் தொற்று, ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்த அன்று , 'வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது' என்று அபாண்டமான பொய்யை அமைச்சர் விஜயபாஸ்கர் அவிழ்த்து விட்டிருக்கிறார்.
நேற்று வரை தமிழ்நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 504. அதில் சென்னையில் மட்டும் 33 ஆயிரத்து 244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏன் அமைச்சரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் 62. இந்த நிலையில் அமைச்சர் 'வைரஸ் கட்டுப்பாட்டில்' இருக்கிறது என்கிறார்.
கரோனா நோய்த் தொற்றின் ஆரம்பத்திலிருந்து மருத்துவர்களுக்கு, தூய்மைப் பணியாளர்களுக்கு, சுகாதாரப் பணியாளர்களுக்கு ஏன் காவலர்களுக்கு முகக்கவசங்கள் உள்ளிட்ட கிருமி நாசினிகளைத் தானே சென்று வழங்கி, அவர்களின் சுய பாதுகாப்பை உறுதி செய்ய எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பாடுபட்டவர் திமுக தலைவர்.
ஆனால், அமைச்சரோ அவர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்காமல், நூற்றுக்கணக்கான மருத்துவர்களுக்கும், பயிற்சி மருத்துவர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் கரோனா நோய்த் தொற்றில் சிக்கி அவதிப்பட வித்திட்டவர்.
தனது தோல்வியை அதிமுக அரசின் அப்பட்டமான தோல்வியை மறைக்க, குடும்ப உறவுகளையும், சுகங்களையும் மறந்து இரவு - பகல் என்று பாராது கரோனா பணியாற்றும் முன்களப் பணியாளர்களின் தியாகத்தை தயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
திரும்பவும் சொல்கிறேன்; சட்டப்பேரவையைத் தொடர்ந்து நடத்தியும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமலும், 'ஒன்றிணைவோம் வா' நிகழ்ச்சியின் மூலம் கொடுத்த மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும், அரசியல் செய்தது அதிமுக ஆட்சிதான்.
கரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவித்த திமுகவினரைப் பொய் வழக்குப் போட்டு கைது செய்து அரசியல் பண்ணியது அதிமுக ஆட்சிதான். ஏன், மருத்துவப் படுக்கை இல்லாமல் தவிக்கிறார்கள் என்று பதிவிட்டதற்காகச் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மீது வழக்குப் போட்டு அவரை எச்சரித்தது இதே அமைச்சர் விஜயபாஸ்கர்தான்!
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மறுபடியும் முழு ஊரடங்கு போடும் அளவுக்கு படுதோல்வி அடைந்து நிராயுதபாணிகளாக நிற்பது அதிமுக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், அவருக்குத் தலைவராக இருக்கும் மாநில பேரிடர் மேலாண்மை தலைவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்தான்!
தமிழக மக்களைப் பாதித்துள்ள சமூகப் பரவல், நோய்த் தொற்றுக்கு நடத்தப்பட்ட பரிசோதனை, பரிசோதனைக் கருவிகள் கொள்முதல், குணமாகித் திரும்புவோரின் கணக்கு, இறந்தவர்கள் எண்ணிக்கை அனைத்திலும் குளறுபடி செய்து, மறைத்து, திரித்து வெளியிட்டு கரோனா பேரிடரிலும் அரசியல் செய்யும் ஒரு ஆட்சி தமிழகத்தில் இருப்பது மக்களின் சாபக்கேடு.
முழுக்க முழுக்க அரசியல் செய்துவிட்டு, அரசு கஜானாவை கரோனா பேரிடரிலும் சுரண்டிக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சிக்கு திமுகவைப் பார்த்தோ, திமுக தலைவர் எங்கள் தளபதியைப் பார்த்தோ அரசியல் செய்கிறார்கள் என்று சொல்லும் தகுதி எள் அளவு அல்ல, எள் முனையளவும் இல்லை.
அதிலும் குறிப்பாக, கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பேட்டியளிப்பதில் எனக்கு விளம்பரமா, உங்களுக்கு விளம்பரமா என்பதில் போட்டிப் போட்டுக் கொண்டு அரசியல் செய்யும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் அவரது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் எவ்வித தகுதியும் இல்லை".
இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago