பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் 680 மருத்துவ முகாம்களைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று (16.06.2020) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:
''பெருநகர சென்னை மாநகராட்சியில் 33,000 பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளையும் மற்றும் தூய்மைப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள 200 கோட்டங்களிலும், 200 உதவிப் பொறியாளர்கள்/ இளநிலைப் பொறியாளர்களைக் குழுத் தலைவராக (covid – 19 Response team head) நியமித்து மைக்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இக்குழுவில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், மற்றும் இதர அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இக்குழுவானது வைரஸ் தொற்று பாதித்த நபரை மருத்துவமனைக்கு அனுப்ப உதவி செய்தல் மற்றும் அவர்களது தொடர்புகளைக் கண்டறிந்து கண்காணித்து வைரஸ் தொற்றின் தீவிரம் கருதி உடனுக்குடன் தகவல் தெரிவிப்பார்கள். மேலும் 11,500 களப்பணியாளர்கள் தினந்தோறும் வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி இருக்கிறதா என்று ஆய்வு செய்து வருகிறார்கள். தொடர்ந்து இந்தப் பணிகளில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளித்தல், பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்குதல், கபசுரக் குடிநீர் வழங்குதல், மறுபயன்பாட்டுடன் கூடிய துணியாலான முகக்கவசங்கள் வழங்குதல், வீடு வீடாகச் சென்று நோய் அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிதல், 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள், கர்ப்பிணிப் பெண்கள், உயர் ரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோய் பாதித்த நபர்கள் ஆகியோரைக் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்குதல், கரோனா நோய் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகளைத் தன்னார்வலர்களுடன் இணைந்து செயல்படுத்துவார்கள்.
தொடர்ந்து, கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் மக்கள் பயன்படுத்தும் பொதுக் கழிப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்துடன் இணைந்து ஏற்கெனவே 1,000 சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. குழாய்கள் மூலம் குடிநீர் பெற வசதியில்லாத குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் லாரியில் வரும் தண்ணீரைப் பிடிப்பதற்காக பெருமளவில் கூடுவதைத் தவிர்க்கவும், வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையிலும், கூடுதலாக 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 350 சின்டெக்ஸ் தொட்டிகளை அமைக்க வேண்டும். இதன் மூலம் மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடித்து தண்ணீர் பிடிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அம்மா உணவகங்கள் மூலமாக ஏற்கெனவே, ஊரடங்கிற்கு முன்பு வரை நாளொன்றுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியில் 2.75 லட்சம் நபர்களுக்கும், பிற 14 மாநகராட்சிகள் மற்றும் 121 நகராட்சிகளில் 1.25 லட்சம் நபர்களுக்கும் ஆக மொத்தம் நாளொன்றுக்கு மொத்தம் 4 லட்சம் நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது. தற்சமயம் ஊரடங்கு காலத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியில் 4.55 லட்சம் நபர்கள், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 2.55 லட்சம் நபர்கள் என மொத்தம் 7.10 லட்சம் நபர்கள் நாளொன்றுக்கு அம்மா உணவகங்கள் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
ஊரடங்கு காலம் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை அம்மா உணவகங்களில் மொத்தம் 5.34 கோடி லட்சம் இட்லிகளும், 2.07 கோடி கலவை சாதங்களும், 81.11 லட்சம் சப்பாத்திகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுவரையில் 4.08 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிக்காக, கோட்டத்திற்கு 2 மருத்துவ முகாம்கள் என நாள்தோறும் 200 கோட்டங்களில் 400 இடங்களிலும் மற்றும் 140 நகர ஆரம்ப சுகாதார மையங்களுக்கு உட்பட்ட கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு மருத்துவ அலுவலர் குழுவோடு சென்று மருத்துவ முகாம்கள் நடத்தவும் மற்றும் 140 நகர ஆரம்ப சுகாதார மையங்களில் புற நோயாளிகளுக்கு சிகிச்சை என 680 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ முகாம்களைப் பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு பயனடை வேண்டும்.
மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் முகக்கவசம், கிருமி நாசினி திரவம் மற்றும் கைகழுவும் சோப்பு தயாரிக்கப்பட்டு, தூய்மைக் காவலர்களுக்கு குறைந்த விலையில் இதுவரை 7,65,530 எண்ணிக்கையில் முகக் கவசங்களும், 12,850 லிட்டர் கிருமிநாசினியும், 28,547 லிட்டர் கைகழுவும் திரவசோப்பும் வழங்கப்பட்டுள்ளது. கரோனா நோய் எதிர்ப்பு தொடர்பான அரசின் நடவடிக்கைகளில் 70,851க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுவினர் தன்னார்வத்துடன் இணைந்து செயலாற்றி வருகின்றனர். கிராம அளவில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை 19,792 சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 8.45 லட்சம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்துள்ளனர்.
முதல்வரின் ஆணைப்படி, நகர்ப்புறங்களில் வாழும் பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1000 வீதம், தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் 1,05,853 தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10.58 கோடி வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள 168 வீடற்றவர்களுக்கான உறைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 6,363 வீடற்றவர்களுக்கு இதுவரை நகர்ப்புற மேம்பாட்டு இயக்க நிதியின் மூலம் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் உணவு தயாரித்து வழங்கப்பட்டுள்ளது''.
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago