தமிழ் சினிமாவின் முதல் 'சூப்பர் ஸ்டாராக' விளங்கிய தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம் கட்ட முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
தமிழ்த் திரையுலகில் தொடர்ச்சியாக 3 தீபாவளி பண்டிகையைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய ஒரே திரைப்படம் என்ற பெருமையை இன்றளவும் தக்க வைத்திருக்கிறது 'ஹரிதாஸ்'. 1944-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் தமிழ்த் திரையுலகின் முதல் 'சூப்பர் ஸ்டாராக' கருதப்படும் தியாகராஜ பாகவதர்.
நாடகத்துறையில் ஆர்வம்
1910-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி மயிலாடுதுறையில் கிருஷ்ணமூர்த்தி-மாணிக்கத்தம்மாள் தம்பதியின் மகனாகப் பிறந்த இவர், சிறுவயதிலேயே குடும்பத்துடன் திருச்சி சங்கிலியாண்டபுரத்திலுள்ள கல்லுக்காரத் தெருவில் குடிபெயர்ந்து விட்டார்.
படிப்பில் நாட்டமில்லாத தியாகராஜன், திருச்சியில் நாடகம் நடைபெறும் இடங்களைத் தேடிச் செல்லத் தொடங்கினார். இந்த ஈர்ப்பின் காரணமாக, 1926-ம் ஆண்டு பொன்மலையில் நடைபெற்ற 'பவளக்கொடி' நாடகத்தில் அர்ஜுனன் வேடத்தில் நடிக்க தியாகராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
பொன்னிற மேனி, கந்தர்வக் குரலால் தமிழகத்தின் நாடக மேடைகளையெல்லாம் தன் வசப்படுத்திய தியாகராஜனுக்கு திரை வாய்ப்பு தேடி வந்தது. 1934-ம் ஆண்டு பவளக்கொடி நாடகத்தைத் திரைப்படமாகத் தயாரித்தபோது அதில் தியாகராஜன், கதாநாயகனாக நடித்தார்.
வசூலை அள்ளித்தந்த படங்கள்
இப்படம் மட்டுமின்றி, அதற்குபிறகு நடித்த நவீன சாரங்கதாரா (1936), சத்தியசீலன் (1936), சிந்தாமணி (1937), அம்பிகாபதி (1937), திருநீலகண்டர் (1939), அசோக்குமார் (1941), சிவகவி (1943) என அனைத்துப் படங்களும் திரையங்குகளில் மாதக்கணக்கில் ஓடி வசூலை அள்ளித் தந்தன.
தமிழகத்தின் இசை மாமேதையாகக் கருதப்படும் புதுக்கோட்டை தெட்சிணாமூர்த்தி பிள்ளை இவருக்கு பாகவதர் என்னும் பட்டத்தைச் சூட்டினார். தமிழ்த் திரையுலகின் முதல் உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்த இவருக்கு, 1944 நவம்பர் 7-ம் தேதி நடைபெற்ற லட்சுமிகாந்தன் கொலை வழக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இவ்வழக்கில் கிட்டத்தட்ட 30 மாதங்களை சிறையில் கழித்த தியாகராஜ பாகவதர், லண்டன் பிரிவி கவுன்சிலில் முறையீடு செய்து, தன்னைக் குற்றமற்றவர் என நிரூபித்து விடுதலையானார். அதற்குப் பின் அவர் மீண்டும் திரைப்படங்களில் நடித்தாலும், அவை பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
வறுமையில் சிக்கி மரணம்
எனவே அவர் நடிப்புத் தொழிலைக் கைவிட்டு சென்னையிலிருந்து மீண்டும் திருச்சிக்குத் திரும்பினார். அதன்பின் வறுமையின் உச்சிக்குச் சென்ற தியாகராஜ பாகவதர், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை பொது மருத்துவமனையில் 1959-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி இறந்தார்.
நடிகர் எம்.ஆர்.ராதா உதவியுடன் அவரது உடல் திருச்சிக்குக் கொண்டு வரப்பட்டு, சங்கிலியாண்டபுரத்திலுள்ள சுடுகாட்டில் தந்தை, தாயாரின் உடலுக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது. தியாகராஜ பாகவதரின் பிறந்த நாள், நினைவு நாட்களின்போது உறவினர்கள் சிலரும், தியாகராஜ பாகவதர் சார்ந்த விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்த சிலரும் அங்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தியாகராஜ பாகவதர் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம்
நடிப்புத்துறையில் மட்டுமின்றி, இசைத்துறையிலும் திருச்சிக்குப் பெருமை சேர்த்த தியாகராஜ பாகவதருக்கு இங்கு அடையாளச் சின்னங்கள் எதுவும் இல்லை. எனவே அவரைக் கவுரவப்படுத்தும் வகையில் திருச்சியில் மணிமண்டபம் அமைத்துத்தர வேண்டும் என பல்வேறு அமைப்பினர் தமிழக அரசுக்கு நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
திரைத்துறைக்கு அங்கீகாரம்
அதை ஏற்று மத்திய பேருந்து நிலையம் அருகில் தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு காணொலிக் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி இன்று (ஜூன் 16) அடிக்கல் நாட்டினார்.
தியாகராஜ பாகவதர் மணிமண்டபத்தின் வரைபடம்
இதனை வரவேற்றுள்ள திருச்சி கலைக்காவிரி இசைக்கல்லூரி மிருதங்கத் துறை தலைவர் எஸ்.டி மூர்த்தி கூறும்போது, "நடிப்பு மூலம் கிடைத்த பணத்தால் பெரும் செல்வந்தராக விளங்கிய தியாகராஜ பாகவதர், உதவி கேட்ட மக்களுக்குத் தங்கம், வெள்ளி என அள்ளிக் கொடுத்தவர். ஆனால், இறுதிக் காலத்தில் அனைத்தையும் இழந்து நோயின்பிடியில் சிக்கி இறந்தார். மத்திய பேருந்து நிலையம் அருகே இருந்த அவரது பங்களாவும், வேறு ஒருவருக்கு விற்கப்பட்டுவிட்டது.
எனவே, திருச்சியில் அவரது நினைவைப் போற்றும் வகையில் அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், முதல்வரின் இந்த நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. இது திருச்சிக்குக் கிடைத்துள்ள பெருமை மட்டுமல்ல. தியாகராஜ பாகவதர் முதல் 'சூப்பர் ஸ்டாராக' விளங்கியதால் திரைத்துறைக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் பார்க்க வேண்டும்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago