மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி அதிமுக, திமுக, பாமக, திராவிடர் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு ஜூன் 22-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக சார்பில் தமிழக சட்டத்துறை அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளருமான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. இதில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீதமும், பட்டியலினத்தவர்களுக்கு 18 சதவீதமும், பழங்குடியினருக்கு 1 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மருத்துவப் பட்டப் படிப்புகளுக்காக மொத்த இடங்களில் 15 சதவீதமும், மருத்துவ மேற்படிப்புகளுக்காக 50 சதவீதமும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்தியத் தொகுப்புக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக ஒப்படைக்கப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அடங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது.
பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் தவிர்த்து மற்ற அனைவரையும் பொதுப்பிரிவாக அறிவித்து மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதனால் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு சட்ட ரீதியாக கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடு தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகிறது.
» சுமார் 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 நிவாரணத் தொகை; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
எனவே, மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசால் மத்தியத் தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க மத்திய அரசுக்கும், அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி திமுக சார்பில் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனும், பாமக சார்பில் இளைஞரணித் தலைவர் அன்புமணியும், மதிமுக சார்பில் வைகோவும், திராவிடர் கழகம் சார்பில் கலி.பூங்குன்றனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் மீதான விசாரணை இன்று (ஜூன் 16) நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் காணொலிக் காட்சி மூலமாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.
அப்போது இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் கலந்தாய்வு நடத்த அனுமதிக்கக்கூடாது என்றும், 50 சதவீத இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டால் சமூக நீதிக்கு எதிராகி விடும் எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் இந்த வழக்குகளில், மருத்துவப் படிப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்படவில்லை என வாதிட்டார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் வரும் ஜூன் 22-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago