ஊசுடு ஏரியில் 10 கி.மீ. தொலைவுக்கு இயற்கை எரிவாயு குழாய் புதைக்க ஐஓசி விண்ணப்பம்; தவிப்பில் பறவைகள் சரணாலயம்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி ஊசுடு ஏரியில் 10 கி.மீ. தொலைவுக்கு இயற்கை எரிவாயு குழாய் புதைக்க இந்திய ஆயில் நிறுவனம் விண்ணப்பித்துள்ள நிலையில், பறவைகள் சரணாலயத்தின் சூழல் தவிப்பில் உள்ளது.

புதுச்சேரியில் ஆண்டு முழுவதும் பெருக்கெடுக்கும் ஜீவநதிகளோ, தண்ணீரைத் தேக்கி வைத்து பயன்படுத்தும் வகையில், பிரம்மாண்டமான அணைக்கட்டுகளோ இல்லை. கடைமடைப் பகுதியான புதுச்சேரியில் 84 ஏரிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இவை குடிநீர் விநியோகத்துக்கும், விவசாயப் பணிகளுக்கும் அடிப்படை ஆதாரமாக அமைந்துள்ளன.

புதுச்சேரி மாநிலத்தின் மிகப்பெரிய பழம்பெருமை வாய்ந்த ஏரியாகத் திகழ்வது ஊசுடு ஏரி. சோழ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் இந்த ஏரிக்கு மதகுகளும், கால்வாய்களும் கட்டினார் என்று திருவக்கரைக் கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் இருந்து மேற்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த ஏரி. மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 15.54 சதுர கி.மீ., ஏரிக் கரையின் மொத்த நீளம் 7.275 கி.மீ., மொத்தக் கொள்ளளவு 540 மில்லியன் கன அடி. ஊசுடு ஏரிக்கு, சங்கராபரணி ஆறு மற்றும் வீடூர் அணையில் இருந்து நீர் வருகிறது. மேலும், சுத்துக்கேணி கால்வாய் மூலம் செஞ்சியாற்றிலிருந்து ஏரிக்குப் பெருமளவில் நீர் வருகிறது. பாசன வசதிபெறும் நிலங்கள் தோராயமாக 1,500 ஹெக்டேர் ஆகும்.

புதுச்சேரியின் மிகப்பெரிய ஏரியான ஊசுடு ஏரி 800 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இதில், 410 ஹெக்டேர் தமிழகப் பகுதியிலும், 390 ஹெக்டேர் புதுச்சேரி பகுதியிலும் உள்ளது.

புதுச்சேரியில் தொடங்கி கிழக்குப் பகுதியில் தமிழக எல்லைப்பகுதியான விழுப்புரம் மாவட்ட வானூர் புதுத்துறை, காசிப்பாளையம், மணவெளி, பெரம்பை ஆகிய பகுதிகள் வரை ஏரி பரவியுள்ளது.

புதுச்சேரிக்குச் சுற்றுலா வருபவர்கள் தவறாமல் சென்று வரும் பகுதிகளுள் ஊசுடு ஏரியும் ஒன்று. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல்போல் காட்சியளிக்கும் குளிர்ந்த நீர்ப்பரப்பு, அதன் மேலே பறக்கும் அழகிய பறவைகள், மன பாரத்தை இறக்கி மகிழ்ந்து களிக்க அழகிய படகுப்பயணம் என இந்த ஏரி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும். இந்த ஏரி, புதுச்சேரியின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் உயிர்நாடியாகவும் விளங்குகிறது.

தற்போது எண்ணூர் துறைமுகத்தில் அமைக்கப்படவுள்ள இயற்கை எரிவாயு முனையத்திலிருந்து திருவள்ளூர் வழியாக பெங்களூருவுக்கும் புதுச்சேரி, நாகப்பட்டினம், மதுரை வாயிலாக தூத்துக்குடி வரையிலுமான 1,446 கிலோ மீட்டர் தொலைவுக்கு இயற்கை எரிவாயு எடுத்துச் செல்வதற்கான குழாய் அமைக்கும் பணியை இந்தியன் ஆயில் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

இந்தக் குழாயின் ஒரு பகுதியானது விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி தாலுகாவின் மண்டகப்பட்டு கிராமத்திலிருந்து புதுச்சேரிக்குச் செல்கிறது. இந்த வழியில் ஊசுடு ஏரி பறவைகள் சரணாலயத்தின் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலமாக அறிவிக்கப்பட்ட இடத்தின் 10 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்கிறது. இதற்காக ஊசுடு ஏரியின் தமிழக எல்லையில் உள்ள 38.5 ஹெக்டேர் மற்றும் புதுச்சேரி எல்லையில் உள்ள 7.5 ஹெக்டேர் பரப்பளவு பகுதியைப் பயன்படுத்திக்கொள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் தேசிய வனவுயிர் வாரிய அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.

இதற்கு புதுச்சேரியில் இயற்கை ஆர்வலர்களும் அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், "ஊசுடு ஏரி புதுச்சேரி, தமிழகத்தில் விழுப்புரம் பகுதியில் பரவியுள்ளது. 2008-ல் புதுச்சேரி அரசும் 2014-ல் தமிழக அரசும் ஊசுடு ஏரியைப் பறவைகள் சரணாலயமாக அறிவித்தன.

உணவு மற்றும் இனப்பெருக்கத்துக்காக இங்கு 170 பறவை இனங்கள் நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர், ஜனவரியில் அதிக அளவில் வருகின்றன. ஏராளமான பட்டாம்பூச்சிகளும் இங்கு வலம் வரும். சலீம் அலி ஆய்வு நிறுவனம் ஊசுடு ஏரியை ஆய்வு செய்து 168 பறவை இனங்கள் இங்கு வருவதாகவும், அதில் 29 பறவை இனங்கள் வெளிநாட்டைச் சேர்ந்தது என்றும் தெரிவித்தன. நாமக்கோழி என்ற நீர்ப்பறவை இனம் இங்குதான் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்கிறது. ஊசுடு ஏரியை நம்பி இரு மாநில விவசாயிகளும் உள்ளனர்" என்றனர்.

இதுபற்றி அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவர் அன்பழகனிடம் கேட்டதற்கு, "இயற்கைக்கு மாறான செயல்பாட்டுக்கு மத்திய அரசும் புதுச்சேரி அரசும் அனுமதிக்கக் கூடாது" என்றார்.

அரசு கொறடா அனந்தராமன் கூறுகையில், "புதுச்சேரி நகரப் பகுதி மக்களுக்கு ஊசுடு ஏரியில் இருந்து குடிநீர் வழங்க 15 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை. அப்படியிருக்க பறவைகளின் இனப்பெருக்கத்திற்கு ஆதாரமான ஊசுட்டேரி வழியே குழாய் அமைக்க மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. புதுச்சேரி அரசும் இத்திட்டத்தை அனுமதிக்காது. தேவை எனில், சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருவோம்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்