சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்  ஜூன் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்குப் பின் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:

''தமிழக அரசு, கரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்து, அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.

இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவை 25.3.2020 முதல் அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கரோனா தொற்றின் நிலைமையைக் கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 30.6.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்த் தொற்றைத் தடுக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னையில் 15 மண்டலங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க அமைச்சர்களும், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களின் மேற்பார்வையில், நோய்த் தொற்று உள்ளவர்களுடன் தொடர்புள்ளவர்களைக் (Contact tracing) கண்டறியும் பணி மண்டல அளவில் மேற்கொள்ளப்படுவதுடன், நோய்த் தடுப்புப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, அப்பகுதியில் உள்ள ஏழைகளுக்கு முகக்கவசம், வைட்டமின் மாத்திரைகள், கபசுரக் குடிநீர் போன்றவை வழங்கப்படுகிறது. அவர்களின் வாழ்விடம் நெருக்கமாக இருந்தால், அவர்கள் தனிமை முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.

நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் விவரம் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு, தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தவிர, சென்னையில் உள்ள 140 நகர ஆரம்ப சுகாதார மையங்களிலும், 19 மருத்துவமனைகளிலும் காய்ச்சல் சோதனை மையம் ((Fever clinic) செயல்படுவதுடன், 300க்கும் மேற்பட்ட காய்ச்சல் சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, வீடு வீடாகச் சென்று நோய் அறிகுறி உள்ளவர்கள் தீவிரமாகக் கண்டறியப்பட்டு, சோதனை செய்யப்படுகின்றனர்.

இதனால் நோய்த் தொற்றை முன்கூட்டியே கண்டறிந்து, சிகிச்சை அளிக்கப்பட்டு, உயிரிழப்பு தவிர்க்கப்படுகின்றது. இதே போன்ற நடவடிக்கைகள் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் கரோனா வைரஸ் நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, 15.6.2020 மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையிலும், அமைச்சரவைக் கூட்டத்தின் ஆலோசனையின் அடிப்படையிலும், பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன் கீழ், 19.6.2020 அதிகாலை 12 மணி முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு .

* பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும்,
* திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,

* செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.

*இருப்பினும் கீழ்க்கண்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுடன் தளர்வுகள் அளிக்கப்படுகிறது:

1) மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள்.

2) வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது. எனினும், அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டும் வாடகை, ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.

3) மாநில அரசுத் துறைகள் 33 சதவிகிதப் பணியாளர்களுடன் செயல்படும். அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை, கருவூலத்துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை போன்ற துறைகள் தேவையான பணியாளர்களுடன் செயல்படும்.

4) மத்திய அரசு அலுவலகங்கள் 33 சதவீதப் பணியாளர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவார்கள். அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் மத்திய அரசு அலுவலகங்கள் தேவையான பணியாளர்களுடன் பணிபுரிய அனுமதிக்கப்படும்.

5) கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ((Containment Zones) வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரத் தேவையில்லை. அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முன்கூட்டியே பெற்றுக்கொள்ள வேண்டும்.

6) வங்கிகள் 33 சதவீதப் பணியாளர்களோடு 29.6.2020 மற்றும் 30.6.2020 ஆகிய நாட்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ஏடிஎம்), அது சம்பந்தப்பட்ட வங்கிப்பணி மற்றும் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும்.

7) பொது விநியோக கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். பொது விநியோகத் திட்டத்திற்கு தொடர்புடைய இந்திய உணவுக் கழகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகள் மற்றும் அதைச் சார்ந்த போக்குவரத்து அனுமதிக்கப்படும்.

8) கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ((Containment Zones) செயல்பட்டு வரும் பொது விநியோகக் கடைகள் இயங்காது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, அரசு அறிவித்த நிவாரணங்கள் அக்கடைப் பணியாளர்களால் நேரடியாக வழங்கப்படும்.

9) காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்க்குகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அதே போல் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும்.

அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் பொதுமக்கள், வாகனங்களைப் பயன்படுத்தாமல் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே, அதாவது 2 கி.மீ. தொலைவிற்குள் மட்டும் சென்று, பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

10) உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது. தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைக்கு அனுமதி வழங்கப்படும். அப்பொருட்களை வழங்கும் ஊழியர்கள், தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடம் இருந்து அடையாள அட்டை பெற்றுப் பணியாற்ற வேண்டும்.

11) முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள், வீட்டில் தங்கியிருக்கும் முதியோர் / நோயாளிகளுக்கு உதவிபுரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.

12) அம்மா உணவகங்கள் மற்றும் ஆதரவற்றோருக்காக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் (Community Kitchens) தொடர்ந்து செயல்படும்.

13) பொதுமக்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள், சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.

14) அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள்.

15) நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள்.

16) மேற்கண்ட 12 நாட்களுக்கு பணியிட வளாகத்திலேயே தங்கியிருந்து பணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்ட கட்டுமானப் பணி அனுமதிக்கப்படும்.

17) சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொழிலாளர்களுக்கு ஒரு முறை RTPCR பரிசோதனை செய்து, மேற்கண்ட 12 நாட்களுக்கு தொழிற்சாலை வளாகத்திலேயோ, அதன் அருகிலேயோ, அவர்கள் தங்கவைக்கப்பட்டு பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல், பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து மற்ற இடங்களுக்குச் சென்று பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஒரு முறை RTPCR பரிசோதனை செய்து, தொழிற்சாலை வளாகத்திலேயோ அல்லது அதன் அருகிலேயோ தங்கி பணிபுரிய அனுமதிக்கப்படும்.

இந்த 12 நாட்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து தினந்தோறும் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றுவர அனுமதிக்கப்படமாட்டாது. எனினும், தொடர் செயல்பாடுகள் உள்ள ((Continuous Process Industries) மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ((Industries manufacturing essential commodities) உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

18) இந்த ஊரடங்கின்போது சரக்கு போக்குவரத்துக்குக்கும், அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் எவ்வித தடையும் கிடையாது.

19) சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்குச் செல்ல, தகுந்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இ-பாஸ் அனுமதி வழங்கப்படும்.

20) வெளி மாநிலத்தில் இருந்து வருகின்ற ரயில்களுக்கும், விமானங்களுக்கும், அதேபோல வெளி நாட்டில் இருந்து வருகின்ற விமானங்களுக்கும், கப்பல்களுக்கும் தற்போதுள்ள நடைமுறையே தொடரும்.

21.6.2020 மற்றும் 28.6.2020 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கண்ட எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். (அதாவது, 20.6.2020 அன்று நள்ளிரவு 12 மணி முதல் 22.6.2020 காலை 6 மணி வரையிலும், எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். அதேபோன்று, 27.6.2020 அன்று நள்ளிரவு 12 மணி முதல், 29.6.2020 காலை 6 மணி வரையிலும் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்).

இவ்விரு நாட்களிலும், பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது.

கட்டுப்பாட்டுப் பகுதிகளில் (Containment zone), எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும். இந்தப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு ஒரு நாளைக்கு இருமுறை தெளிக்கப்படும்.

முழு ஊரடங்கின்போது,

* 104 (கட்டுப்பாட்டறை) மற்றும் 108 (அவசரகால ஊர்தி) ஆகிய சேவைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும்.

* அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் மற்றும் ஆபத்து கால மருத்துவ உதவி ஆகியவற்றை சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் மூலம் ஒருங்கிணைக்கப்படும்.

ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அரசு, * பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளிலும்,
* திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,

*செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். அதேபோன்று, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக அரசு வழங்கும்.

அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய்ப் பரவலைத் தடுக்க இயலாது. பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பைப் பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக் கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியைத் தவறாமல் கடைப்பிடித்து, அவசியத் தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும். மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவ மனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும். பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்