ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் இணையவழிக் கற்பித்தலைக் கைவிடுக; கல்வித் தொலைக்காட்சிகள் மூலம் வகுப்புகளை நடத்துக: வைகோ

By செய்திப்பிரிவு

சமச்சீரற்ற முறையில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் இணையவழிக் கற்பித்தல் முறையைக் கைவிட்டு, தொலைக்காட்சிகளின் வழியாக, தொலைக்கல்வி வகுப்புகள் நடத்தும் முறையை மத்திய - மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

''கரோனா தீநுண்மி பரவல் காரணமாக பொதுமுடக்கத்தால் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க முடியாத நிலை தொடர்கின்றது. இந்நிலையில், தனியார் பள்ளிகளும், மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரையும், கல்லூரிகளும் இணையவழியாகப் பாடங்களை நடத்தி வருகின்றன. அதே போல கலைக் கல்லூரிகள், தொழிற் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள், இணையவழிக் கற்பித்தல் முறையைப் பின்பற்றி வரத் தொடங்கியுள்ளன.

இதில் மழலையர் பள்ளி தொடங்கி, பள்ளிக் கல்வி இறுதி ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்கு இணையவழிக் கற்பித்தல் என்பது நடைமுறையில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்ற நிலை இருக்கிறது.

இணையவழி வகுப்புகள் நடத்துவதைத் தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஜூன் 10 ஆம் தேதி நீதியரசர்கள் வினித் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய - மாநில அரசுகள் தரப்பில் இணையவழிக் கற்பித்தல் வகுப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான விதிகள் எதுவும் வகுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விதிமுறைகள் எதுவுமின்றி இணையவழி வகுப்புகள் நடந்து கொண்டு இருப்பதை மத்திய - மாநில அரசுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 59 ஆயிரம் பள்ளிகள் இயங்குகின்றன. 1.3 கோடி மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். பொது முடக்கத்தால் இணையவழிக் கல்வியை ஊக்குவிக்குமாறு கல்வி நிறுவனங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியது. அதற்கு ஏற்ப ஸ்வயம், பாடசாலா, தீக்ஷா உள்பட பல்வேறு கல்வி சார்ந்த வலைதளங்கள் பொதுப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், ஸ்கைப், கூகுள் கிளாஸ், ஜூம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகள் இணைய வகுப்புகளை நடத்தி வருகின்றன.

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் இணையவழிக் கற்பித்தலுக்கான உள்கட்டமைப்புகளைப் பெற்று இருக்கின்றதா என்பதையும் ஆய்வு நடத்த வேண்டும். இணையவழிக் கற்பித்தலுக்கு மின் வசதி, இணையதளத் தொடர்பு, கணினி, அறிவுத் திறன் பேசி (Smart phone) போன்ற வசதிகள் அனைத்துக் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் கிடைத்திருக்கின்றதா? என்பதையும் பார்க்க வேண்டும்.

ஆனால், உண்மை நிலை என்ன?

தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவில் கிராமப்புறங்களில் 4.4 விழுக்காடு வீடுகளிலும், நகர்ப்புறங்களில் 23.4 விழுக்காடு வீடுகளிலும் மட்டுமே கணினிகள் உள்ளன. அதேபோன்று கிராமப்புறங்களில் 14.9 விழுக்காடு வீடுகளிலும், நகர்ப்புறங்களில் 42 விழுக்காடு வீடுகளில் மட்டுமே இணையதள (Internet)வசதிகள் உள்ளன.

மேலும் இவையன்றி, அறிவுத்திறன் பேசி வைத்துள்ளவர்கள் 24 விழுக்காடுதான் என்றும், 11 விழுக்காடு வீடுகளில்தான் கணினி, மடிக் கணினி, நோட்புக், நெட்புக் போன்றவை இருப்பதாக என்.எஸ்.எஸ்.ஓ ஆய்வு அறிக்கை 2017-18 தெரிவிக்கிறது. ‘ஸ்மைல் பவுண்டேஷன்’ எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நடத்திய ஆய்வில், 56 விழுக்காடு பள்ளி மாணவர்களிடம் அறிவுத்திறன் பேசி இல்லாததால், எந்த முறையிலும் ‘ஆன்லைன்’ வகுப்பில் பங்கேற்க முடியாத நிலை இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் இணையவழிக் கற்பித்தல் முறை என்பது சமூகத்தில் ஏழை எளிய, வசதியற்ற குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு எட்டாக் கனி என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது. மேலும் இணையவழி வகுப்புகளில் பங்கேற்கும் குழந்தைகள், மாணவர்கள் காதொலிக் கருவிகளைப் பயன்படுத்துவதும், கண்கள், காதுகளின் திறனைப் பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் 5 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு நீண்ட தூரம் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதாக பெற்றோர் புகார் அளித்தனர். கர்நாடக அரசு 5 ஆம் வகுப்புவரை நேரலை இணையவழி வகுப்புகளுக்குத் தடைவிதித்துள்ளது. கேரள மாநிலத்தில் பள்ளிகளுக்கு சோதனை முறையில் ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் என்று அரசு அறிவித்தது. அம்மாநில மலப்புரம் மாவட்டம், இரும்பிலியம் ஊராட்சியில் உள்ள கூலித் தொழிலாளி பாலகிருஷ்ணன் என்பவரின் மகள் தேவிகா அரசு மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இணையவழி வகுப்பில் பங்கேற்க முடியாததால், தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

எனவே சமச்சீரற்ற முறையில் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும் இணையவழிக் கற்பித்தல் முறையைக் கைவிட்டு, தொலைக் காட்சிகளின் வழியாக, தொலைக்கல்வி வகுப்புகள் நடத்தும் முறையை மத்திய - மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.

தற்போது நெருக்கடியான காலகட்டத்தில் நாடு உள்ளபோது, செயற்கைச்கோள் மூலம் இயங்கும் கல்விக்கான சேனல்களை இதற்குப் பயன்படுத்தும் வகையில் திறனை அதிகரிப்பதுடன், தனியார் தொலைக்காட்சிகளிலும் கற்பித்தலுக்கான நேரத்தை ஒதுக்கித் தர மத்திய - மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும்.

இணையவழிக் கற்பித்தலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள், சிக்கல்கள், சமச்சீரற்ற முறைகளைக் கருத்தில் கொண்டு தொலைக்காட்சிகள் மூலம் நேரலை வகுப்புகளை நடத்திடும் திட்டத்தை மத்திய - மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்''.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்