இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் நட்டாவும், ராம் விலாஸ் பாஸ்வானும் குரல் கொடுத்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அப்படியே பிரதமரிடமும் அதை வலியுறுத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:
“இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவும் உறுதியாக உள்ளனர். சமூக நீதியில் நாங்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாடு பிரிக்க முடியாதது என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்திருப்பது, ஆச்சரியம் அளித்தாலும், மிகவும் மகிழ்ச்சி தருகிறது.
மேலும், பாஜக. தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகிக்கும் லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவரும், மத்திய உணவு அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் , சமூக நீதிக் கொள்கையின்பால் தொடர்ந்து காட்டிவரும் ஈடுபாட்டின் காரணமாக, “இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்காக ஒத்த கருத்துடைய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும்” என்றும்; “இட ஒதுக்கீடு அரசியல் சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமை” என்றும் ஆணித்தரமாக அறிவித்திருப்பதை நான் மனதார வரவேற்கிறேன்.
தமிழ்நாட்டில் திமுக, தனது தோழமைக் கட்சிகளுடன் இணைந்து எழுப்பிய சமூக நீதி லட்சிய முழக்கம், தேசிய அளவில் எதிரொலித்திருப்பது, இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நிலைநாட்டிடும் போராட்டத்திற்குக் கிடைத்திருக்கும் முதற்கட்ட வெற்றி ஆகும்.
மத்திய அரசுக்கு - அகில இந்தியத் தொகுப்புக்கு, மாநிலங்கள் அளிக்கும் 15 சதவீத இளநிலை மருத்துவ (எம்.பி.பி.எஸ்.) இடங்களிலும், 50 சதவீத முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களிலும், மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி - மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டுள்ள 27 சதவீத இட ஒதுக்கீடு, இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு (OBCs), கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்றும்; தமிழக மாணவர்களுக்கு மாநிலத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 50 சதவீத இட ஒதுக்கீடுபிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் வழங்கப்படவில்லை என்றும் திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
இது தொடர்பாக ஏற்கெனவே திமுக சார்பில், கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்திருக்கிறார்கள்; மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடத்தில் கோரிக்கை மனுவாகவும், நேரிலும் தொடர்ந்து வலியுறுத்தப் பட்டிருக்கிறது.
ஆனாலும் மத்திய பாஜக அரசு, நியாயமான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளாமல் அமைதி காத்ததின் விளைவாக - சமூக அநீதி இனியும் தொடர்ந்திடக் கூடாது என்ற நோக்கில், திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் “இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையல்ல” என்ற எதிர்பாராத, அதிர்ச்சி தரும் கருத்து ஒன்றினை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எடுத்து வைத்து, சென்னை உயர் நீதிமன்றத்தினை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.
ஆனால் அவ்வழக்கின் உத்தரவில் நீதிபதிகள் அவ்வாறு கூறிய கருத்து இடம் பெறவில்லை. மாணவர்களின் நலன் கருதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அறிவுறுத்தலை ஏற்று, திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உடனடியாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்றாலும்; தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு குறித்த வழக்குகள் வரும் போதெல்லாம், “இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையல்ல” என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டு வருவதும் - அதை மத்திய பாஜக அரசு கண்டுகொள்ளாமல் ஒதுங்கி நிற்பதும் மிகுந்த கவலையளிக்கிறது.
சமூக நீதியின் அடிப்படைக் கூறான இட ஒதுக்கீடு குறித்த பிரிவுகள், இந்திய அரசியல் சட்டத்தில், “அடிப்படை உரிமைகள்” என்ற தலைப்பின் மூன்றாவது பகுதியில் (III Part) இடம்பெற்றிருக்கிறது. அரசியல் சட்டத்தின் முகவுரையில் “சமூக நீதி” (Social Justice) என்பது பொறிக்கப்பட்டுள்ள நிலையில் - இந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் சார்பில் கருத்துக்களை உச்ச நீதிமன்றத்தில் எந்தவித ஐயப்பாட்டுக்கும் இடமின்றி தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். ஆனால் உச்ச நீதிமன்றத்தில்- நாட்டின் மிக முக்கியமான அரங்கத்தில்- அமைதி காத்து விட்டு, இப்போது “சமூக நீதிக் கொள்கை மீதான எங்கள் உறுதிப்பாட்டைப் பிரிக்க முடியாது” என்று பாஜக தேசியத் தலைவர் கூறியிருப்பது, சற்று வேறுபாடாகவும் வியப்பாகவும் இருக்கிறது.
இருந்தாலும் - நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களும், எங்கே பாஜகவின் சிந்தனைப் போக்கையும் செயல்பாட்டையும் உணர்ந்து கொண்டு எதிர்வினை ஆற்றிடத் தொடங்கி விடுவார்களோ என்ற ஆதங்கத்தின் விளைவாக- இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான இந்தக் கருத்தை காலதாமதமாகவாவது, பாஜக தலைவர் நட்டா இப்போது தெரிவித்திருப்பதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கலைஞர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 12.5.1989-ல் கொண்டு வந்து நிறைவேற்றிய சிறப்புத் தீர்மானத்தின் முக்கியமான பகுதியை நினைவு கூர்ந்திட விரும்புகிறேன்.
அந்தத் தீர்மானத்தில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340 ஆம் விதியில் கூறப்பட்டுள்ளவாறு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15 (4) 16 (4) பிரிவுகளின் கீழ் செய்யப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டினையும், சிறப்பு விதிகளையும் சமூக நிலையிலும், கல்வியிலும் பின்தங்கியுள்ள பிரிவினர் முன்னேற்றத்திற்காகச் செயல்படுத்துவதில் மத்திய அரசு பெரும்பங்கு வகிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் முதல்வராக கலைஞர் அன்றைய மத்திய அரசுக்கு நினைவூட்டிய இந்த வரிகள் மத்திய பாஜக அரசுக்கு அப்படியே நிச்சயமாகப் பொருந்தும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஆகவே, இட ஒதுக்கீடு என்பது, இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்பதை மத்திய பாஜக அரசு இப்போதாவது உணர வேண்டும், உணர்ந்து, உண்மையான அணுகுமுறைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று மிகுந்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞரின் தொடர்ச்சியான முயற்சியால், ‘சமூக நீதிக் காவலர்’ மறைந்த பிரதமர் வி.பி.சிங்கின் ஆணையால், ‘மண்டல் கமிஷன்’ பரிந்துரைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டு - இந்திய வரலாற்றில் முதல் முறையாக, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு அகில இந்திய அளவில், 27 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. “இந்த இட ஒதுக்கீடு செல்லும்” என்று மண்டல் கமிஷன் வழக்கில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாட்டில், 69 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு - குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று - அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையிலும் இணைக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளைப் பின்பற்றியே, மருத்துவக் கல்வி இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று இந்திய மருத்துவக் கல்விக் கழகத்தின் விதிமுறைகள் (Regulations) தெளிவாகக் கூறுகிறது.
இந்த அடிப்படையில் - ஏற்கெனவே இருக்கின்ற இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இடங்களை வழங்கிட வேண்டும் என்பதுதான் திமுகவின் கோரிக்கை.
ஆனால், சமூக நீதியைத் தரம் தாழ்த்திடும் விதத்தில் – கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களை வஞ்சிக்கும் பொருட்டு, ‘நீட்’ தேர்வை அவசரகதியில் திணித்தது மட்டுமின்றி, கடந்த மூன்றாண்டுகளாக மாநிலங்கள் மத்தியத் தொகுப்பிற்கு அளிக்கும் 50 சதவீத முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களிலும், 15 சதவீத இளநிலைப் படிப்பிற்கான (எம்.பி.பி.எஸ்) இடங்களிலும், சமூக நீதியை மத்திய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
குறிப்பாக மத்தியத் தொகுப்பிற்கு மாநிலங்கள் அளித்துள்ள 9,550 முதுநிலை மருத்துவக் கல்விக்கான இடங்களில் 371 இடங்கள் மட்டுமே பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு கிடைத்திருக்கிறது. இது அப்பட்டமான சமூக அநீதி மட்டுமல்ல; அரசியல் சட்டம் அங்கீகாரம் செய்து - உச்ச நீதிமன்றமே உறுதி செய்த சமூக நீதிக் கொள்கைக்கு முற்றிலும் புறம்பானது.
ஆகவே, நட்டா குறிப்பிட்டுள்ளவாறு, “பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் பிரதமரும், பாஜகவும் உறுதியாக இருப்பது” உண்மையெனில், இப்போதுகூட காலம் கடந்து விடவில்லை; நடந்து முடிந்துள்ள முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கையை ரத்து செய்து விட்டு - பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள - அரசியல் சட்ட ரீதியான சமூக நீதியை நிலைநாட்டிட- மாநிலங்கள் மத்தியத் தொகுப்பிற்கு அளிக்கும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் மற்றும் இளநிலைப் (எம்.பி.பி.எஸ்) படிப்பிற்கான இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாகச் செயல்படுத்திட மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு ஆணையிடுமாறு பிரதமர் நரேந்திர மோடியை பாஜக தேசியத் தலைவர் நட்டா வலியுறுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்; மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானும் அதற்கு உரிய அழுத்தம் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், இனி எப்போதும் எதிர்காலத்திலும் குறையேதுமின்றிப் பயனளித்திடும் வண்ணம், அனைத்து இட ஒதுக்கீடுகளையும், இந்திய அரசியல் சட்டத்தின் ஒன்பதாம் அட்டவணையில் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், நட்டாவையும், மத்திய பாஜக அரசையும், நம்பிக்கையுடன் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago