சேலத்தில் செல்லும் வழியில் காரை நிறுத்தி பொதுமக்களிடம் குறைகளைக் கேட்ட முதல்வர் பழனிசாமி

By வி.சீனிவாசன்

சேலத்தில் நேற்று இரவு முதல்வர் பழனிசாமி வழியில் நின்றிருந்த பொதுமக்களிடம் காரை நிறுத்தி, குறைகளைக் கேட்டறிந்து, அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

காவிரி டெல்டா பாசனத்துக்கு நேற்று (ஜூன் 12) மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் பழனிசாமி தண்ணீர் திறந்து விட்டார். பின்னர், சொந்த ஊரான எடப்பாடிக்கு கார் மூலம் முதல்வர் பழனிசாமி சென்று, அங்கு நடந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மீண்டும் கார் மூலமாக முதல்வர் பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, கொங்கணாபுரம் அருகே உள்ள கன்னந்தேரி பகுதியில் முதல்வர் காரில் வந்து கொண்டிருந்தபோது, சாலையோரமாக பொதுமக்கள் திரண்டு நின்றிருந்தனர்.

பொதுமக்களைக் கண்டதும் முதல்வர் பழனிசாமி, உடனடியாக காரை நிறுத்திவிட்டு, பொதுமக்களிடம் பேசினார். தொழிலாளர்களுக்குக் கரோனா நிவாரண நிதி உதவி இதுவரை கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் முதல்வர் பழனிசாமியிடம் முறையிட்டனர்.

தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்திருந்தால், கண்டிப்பாக நிவாரண நிதியுதவி கிடைக்கும் என்றும் இது தொடர்பாக மனு அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் பொதுமக்களிடம் பதில் அளித்தார். தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து, பணம் கிடைக்காதவர்கள் இருந்தால், கோரிக்கை மனு அளிக்கவும், உரிய அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி உறுதி கூறியதை அடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர்.

முதல்வர் பழனிசாமி வழியில் காரை நிறுத்தி, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE