முகக்கவசம் தயாரிப்பு; வழிகாட்டுதல், விதிமுறைகள் என்னென்ன?- அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

முகக்கவசத்துக்கு விலை, விதிமுறைகள் வகுக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் என்னென்ன விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ரமணி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது.

இதன் அடிப்படையில், 3 அடுக்கு முகக்கவசம், என் -95 முகக்கவசம், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் முகக்கவசம், காட்டன் முகக்கவசம் மற்றும் வெட்டி வேரால் செய்யப்பட்ட மூலிகை முகக்கவசம் வரை பல முகக்கவசங்கள் விற்கப்படுகின்றன.

இதுமட்டுமல்லாமல் தங்களுடைய முகங்கள் போல் முகக்கவசத்தில் அச்சிட்டு அதைப் பயன்படுத்துவதும் வகையிலும் மக்களைக் கவரும் வகையிலும் பல விதமான முகக்கவசங்கள் அறிமுகமாகியுள்ளன.

ஆனால், எந்த முகக்கவசங்களை எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும், அதன் விலை, தரம் மற்றும் உற்பத்தி செய்யும் நிறுவனம், முகக்கவசம் காலவதியாகும் தேதி போன்ற எந்த விதிகளையும் மத்திய, மாநில அரசுகள் இதுவரை உருவாக்கவில்லை.

இதன் காரணமாக பல வண்ணங்களில் சாலைகளில் திறந்தவெளியில் முகக் கவசங்களை விற்கிறார்கள். இதை வாங்கும் மக்களுக்கு சுவாசப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. முகக்கவசம் தொடர்பான தெளிவான விதிமுறைகளை வகுத்து அரசு அறிவிக்கவில்லை என்றால் மடை திறந்த வெள்ளம் போல் முகக்கவசத்தை யார் வேண்டுமானலும் உற்பத்தி செய்து, அவர்கள் விருப்பப்பட்ட விலைக்கு எந்த ஒரு விற்பனை ரசீதும் இன்றி விற்கும் சூழலும் உருவாகும்.

எனவே எந்தெந்த முகக்கவசத்தை எந்தெந்த வயதினர் அணிய வேண்டும், உற்பத்தி, விலை, தரம், காலாவதி காலம் உள்ளிட்டவை குறிப்பிட்டு, முகக் கவசத்திற்கான விதிமுறைகளை வெளியிட வேண்டும்.

அதுவரை முகக்கவசம் அணியாமல் செல்பவரிடம் அபராதம் வசூலிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும். முகக்கவசத்தைப் பயன்படுத்துவது மற்றும் பயன்படுத்திய பின்னர் அதைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் அனைவருக்கும் காப்பீடு செய்ய வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்துப் பதிலளிக்க தமிழக அரசு சார்பில் அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து முகக்கவசங்கள் உற்பத்தி தொடர்பாக தயாரிப்பு நிறுவனங்களுக்கு என்ன விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன, முகக்கவசங்கள் பயன்படுத்துதல் மற்றும் அப்புறப்படுத்துதல் தொடர்பாக என்ன வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவாக பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முகக்கவசப் பயன்பாடு மற்றும் பயன்பாட்டுக்குப் பிறகான நடவடிக்கைகளில் மக்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்