ஓசூர் அருகே 3 விவசாயிகளைத் தாக்கிக் கொன்ற ஆண் யானை: மயக்க ஊசி செலுத்திப் பிடித்த வனத்துறையினர்; அடர்ந்த காட்டில் விடுவிப்பு

By ஜோதி ரவிசுகுமார்

ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை ஆகிய வனச்சரகங்களில் 3 விவசாயிகளைத் தாக்கிக் கொன்ற ஒற்றை ஆண் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்.

இந்த ஆண்யானை பாதுகாப்புடன் லாரியில் கொண்டு செல்லப்பட்டு அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. ஓசூர் வனக்கோட்டத்தில் ஓசூர், சூளகிரி, கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஜவளகிரி, உரிகம் உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் அடங்கி உள்ளன. இந்த வனச்சரகங்களில் நூற்றுக்கணக்கான யானைகள் கூட்டங்கூட்டமாக வசித்து வருகின்றன. இந்த யானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஆண் யானை ஒன்று ஜவளகிரி வனச்சரகத்தில் சுற்றி வந்தது.

அச்சமயத்தில் கடந்த மாதம் 26-ம் தேதியன்று பாலதோட்டனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திம்மராயப்பா( 70) என்பவரை இந்த ஒற்றை ஆண் யானை தாக்கியது. அதில் படுகாயமைடைந்த அவர் உயிரிழந்தார். அதற்கடுத்த நாட்களில் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துக்கு இடம்பெயர்ந்த இந்த ஒற்றை ஆண் யானை, கடந்த 3-ம் தேதியன்று தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் உள்ள சின்னபூதக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சென்னப்பா (55) மற்றும் கடந்த 10-ம் தேதியன்று கோழிமேக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் (40) ஆகிய இருவரையும் தாக்கியதில் அவர்கள் உயிரிழந்தனர்.

கடந்த 15 நாட்களுக்குள் ஒரே ஒற்றை யானை தாக்கி 3 விவசாயிகள் உயிரிழந்துள்ள சம்பவம் வனப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அச்சமடைந்த வனத்தை ஒட்டியுள்ள கிராம மக்கள், இந்த ஒற்றை ஆண் யானையைப் பிடித்து அடர்ந்த காட்டுக்குள் விட வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவின் பேரில் யானையை பிடிக்க தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார், அஞ்செட்டி வனச்சரகர் ரவி உட்பட 60 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

தேன்கனிக்கோட்டை வனச்சரகம் திம்மசந்திரம் காப்புக்காட்டில் ஒற்றை ஆண் யானை இருப்பதை அறிந்த சிறப்புக் குழுவினர் நேற்று இரவு 9 மணியளவில் திம்மசந்திரம் காப்புக்காடு பகுதியில் முகாமிட்டு ஒற்றை ஆண் யானை நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர்.

சிறப்புக் குழுவினரின் தீவிர முயற்சியால் இன்று காலை 6 மணியளவில் திம்மசந்திரம் காப்புக்காடு அருகே சுற்றி வந்த ஒற்றை ஆண் யானைக்கு வனத்துறை மருத்துவக் குழுவினர் மூலமாக மயக்க ஊசி செலுத்தி, பிடிக்கப்பட்டது. பின்பு பொக்லைன் இயந்திரம் மற்றும் கிரேன் உதவியுடன் பிடிபட்ட ஆண் யானையை வனத்துறைக்குச் சொந்தமான லாரியில் ஏற்றிப் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.

இதுகுறித்துத் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார் கூறும்போது, ’’சுமார் 16 மணி நேர நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஒற்றை ஆண் யானை பிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஒற்றை ஆண் யானையைப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவித்தோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்