கரோனாவால் இறந்தோரின் உடலை புதுச்சேரி அரசு அனுமதியுடன் அவரவர் மத அடிப்படையில் தகனம் செய்யும் முஸ்லிம்கள்

By செ.ஞானபிரகாஷ்

கரோனா தொற்றால் இறப்பவர்களின் உடலை புதுச்சேரி அரசு அனுமதியுடன் அவரவர் மத அடிப்படையில் அரசுடன் இணைந்து தகனம் செய்யும் பணியில் முஸ்லிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

புதுச்சேரிக்கு வந்த சென்னையைச் சேர்ந்த ஒருவர் இறந்தவுடன் பரிசோதித்தபோது அவர் கரோனாவால் இறந்தது உறுதியானது. இதையடுத்து அவரது உடலை சவக்குழியில் வீசிச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் இருவரும், சுகாதாரத்துறை ஊழியர் ஒருவரும் என மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கரோனா தொற்றால் இறப்போரின் உடலை அவரவர் மத அடிப்படையில் அரசுடன் இணைந்து இறுதிக் காரியங்களைச் செய்ய 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பைச் சேர்ந்த முஸ்லிம்கள் முன்வந்தனர். அவர்களுக்கு அரசு அனுமதிக் கடிதமும் தந்தது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் குமளம் கிராமத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் புதுச்சேரி மருத்துவமனையில் இறந்தார். அவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் கரோனாவால் இறப்பவர்களின் உடலை 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' தன்னார்வலர்களிடம் இறுதிக் காரியம் செய்ய புதுச்சேரி அரசு அனுமதித்தது.

'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பின் புதுச்சேரி பகுதி தலைவர் அஹமது அலி தலைமையில் செயல்பட்ட இந்த தன்னார்வக் குழுவினருக்கு கரோனா பாதுகாப்புக் கவச உடை புதுச்சேரி அரசு அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி தரப்பட்டது. அமைப்பின் செயலாளர் ரபீக் மன்சூர், அமீன் பாஷா, ஆதில், ஜின்னா, முஹம்மது கவுஸ் ஆகியோர் ஒத்துழைப்போடு இந்து முறைப்படி முதியவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பின் புதுச்சேரி தலைவர் அஹமது அலியிடம் கேட்டதற்கு, "பத்து ஆண்டுகளாக உதவி வருகிறோம். ஆதரவற்றோர் சடலங்களுக்கு இறுதிக் காரியங்களைச் செய்து வருகிறோம். சொந்தமாக ஆம்புலன்ஸ் வாங்கி ஓராண்டாகிறது. சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்றுள்ளவரின் இறுதிக் காரியத்தில் நடந்த நிகழ்வுகளைப் பார்த்து சுகாதாரத்துறையை அணுகி நாங்கள் இறுதிக் காரியம் செய்து தர தயாராக இருப்பதாக தெரிவித்தோம்.

பல மாநிலங்களில் உதவுவதை ஆதாரமாக தந்தோம். அதையடுத்து அரசு அனுமதிக் கடிதம் தந்தது. மொத்தம் 20 பேர் சுழற்சி முறையில் இப்பணியில் ஈடுபடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தோம். கரோனா பாதுகாப்பு உடை அணிந்து முதியவரின் சடலத்தைப் பெற்று வந்தோம். இந்து முறைப்படி உறவினர்கள் இறுதிக் காரியம் செய்தவுடன் சடலத்தை வாங்கி கருவடிக்குப்பம் மின்மயானத்தில் தகனம் செய்தோம்.

இறுதிக் காரியப் பணிகளில் ஈடுபட்டோருக்கு மாற்றாக அடுத்துள்ளோரை இப்பணிக்குத் தயாராக வைத்துள்ளோம். அரசு அழைத்தவுடன் எப்போதும் செல்லத் தயாராக இருப்போம்.

ஆதரவற்றோர், ஏழைகள் இறந்தால் உடன் ஆம்புலன்ஸில் சென்று இலவச சேவை செய்து வருகிறோம். கரோனா காலத்திலும் பலருக்கு உதவியுள்ளோம். இலவச சேவை செய்வதால் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பலரிடமிருந்து எங்களுக்கு மிரட்டலும், எதிர்ப்பும் தான் அதிக அளவில் வருகிறது. அதையும் தாண்டிதான் பணிபுரிய வேண்டியுள்ளது.

சில சமயம் நீங்கள் அரசு மருத்துவமனையிலோ, ஜிப்மரிலோ முஸ்லிம்களை மட்டும் ஏற்றிச் செல்லுங்கள் என தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தெரிவிப்பார்கள். நாங்கள் அதை மறுப்போம். சேவை என்று எங்களை அழைத்தால் அனைத்து மதத்தினருக்கும் உதவ நாங்கள் தயாராக இருப்போம் என்று கூறுவதால் அதிக பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறோம். ஆனால் எங்கள் சேவை தொடரும்", என்றார் உறுதியாக.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்