இந்திய மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்கள் புறக்கணிப்பு: அகில இந்தியத் தலைவர்கள், முதல்வர்களுக்கு கி.வீரமணி கடிதம்

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் தொகுப்பில் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆவன செய்ய வேண்டி இந்தியா முழுவதும் உள்ள பாஜக அல்லாத முதல்வர்கள், அகில இந்தியக் கட்சித் தலைவர்களுக்கு தி.க. தலைவர் வீரமணி கடிதம் எழுதியுள்ளார்.

மாநில முதல்வர்கள்-முக்கிய அகில இந்திய கட்சித் தலைவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதம்:

“ஒவ்வொரு ஆண்டும், மருத்துவ முதுநிலைப் படிப்புகளில் (PG-எம்.டி, எம்.எஸ் மற்றும் எம்.டி.எஸ்) 50% இடங்களையும், மருத்துவ இளநிலைப் படிப்புகளில் (UG - எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ்) 15% இடங்களையும் அகில இந்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் அளிக்கின்றன.

இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள சுகாதார சேவைகள் இயக்குநரகம் (DGHS) மற்றும் மருத்துவக் கலந்தாய்வு மையம் (MCC) மேற்கொள்கிறது. இந்தக் கல்வியாண்டில், நீட்- மாநிலங்கள் முறையே PG மருத்துவ மேற்படிப்புக்கு 7,981 இடங்களையும், பல் மருத்துவ மேற்படிப்பில் 274 இடங்களையும் அகில இந்திய தொகுப்பிற்கு ஒப்படைத்துள்ளன.

இந்த கல்வி ஆண்டில் (2020-2021) மாநிலங்கள் அளித்த எட்டாயிரத்திற்கும் கூடுதலான அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு சதவீதம் வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்.

2013 ஆம் ஆண்டில் இருந்து தருவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அகில இந்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் அளித்த இடங்கள் (பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு), 72,500 இடங்களாகும். இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு தரப்பட்ட இட ஒதுக்கீடு சதவீதம் ‘பூஜ்ஜியமே.’

இத்தகைய சமூக அநீதியைச் சுட்டிக் காட்டி, கடந்த சில ஆண்டுகளாக, திராவிடர் கழகம் மற்றும் அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற சமூக அமைப்புகள், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் கடிதம் எழுதியும், குரல் எழுப்பியும் எந்த பதிலும், தீர்வும் கிடைக்கவில்லை.

இந்த அநீதியை எடுத்துரைத்து திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி 2020 மே 9 ஆம் தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டார், மேலும் இந்த சமூக அநீதிக்கு எதிராகப் போராட அனைவருக்கும் ஒரு தெளிவான அழைப்பும் விடுத்தார். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் - திமுக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாமக என அனைத்துக் கட்சிகளும் சமூக நீதியைக் கோரி அறிக்கைகளை வெளியிட்டனர்.

மேலும், இந்த அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவை (திமுக, மதிமுக, காங்கிரஸ், சிபிஐ, ஐபிஎம், சிபிஎம், பாமக) தற்போது உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்துள்ளன. திராவிடர் கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

சென்னையில் மே 30 ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மருத்துவக் கல்வியில் அகில இந்தியத் தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த விவகாரத்தில் மக்களின் ஆதரவை உணர்ந்த தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
சமூக நீதி விஷயத்தில் தமிழகம் எப்போதும் முன்னணியில் உள்ளது. தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் சமூக நீதிக்காகப் போராடினார், இதன் விளைவாக 1951 ஆம் ஆண்டில் முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் ஏற்பட்டது. இது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்திய நாடு முழுமைக்கும் 15 (4)வது பிரிவின் கீழ் கல்வியில் இட ஒதுக்கீடுக்கு வழி வகுத்தது.

தந்தை பெரியாருக்குப் பிறகு, அவரது கொள்கையைப் பின்பற்றி, கி.வீரமணி தலைமையில் திராவிடர் கழகம், மண்டல் குழுப் பரிந்துரைகளை அமல்படுத்திடக் கோரி வடநாடு உட்பட 42 மாநாடுகள், 16 போராட்டங்களை நடத்தி, சிறைத்தண்டனை உள்ளிட்ட தியாகங்களைச் செய்துள்ளது. 1979 ஆம் ஆண் டில் எம்.ஜி.ஆர். அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கு ரூ.9000 பொருளாதார வரையறை தடுத்து நிறுத்தப்பட்டது.

தமிழ் நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதில், திராவிடர் கழகம் போராட்டத்தை நடத்தியதோடு நின்றுவிடாமல், அரசமைப் புச் சட்டம் 31-சி பிரிவின் அடிப்படையில் ஒரு வரைவு மசோதாவை தமிழ்நாடு அரசுக்கு அளித்து, அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையிலும், பின்னர் அரசமைப்புச் சட்டத்தின் 9 ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட, நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ள முழு மூச்சாய் செயலாற்றியது.

இவ்வாறு, தந்தை பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றுவதற்காக, திராவிடர் கழகம், சமூக இயக்கமாக, நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு சமூக நீதியை வழங்குவதைப் பாதுகாப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும் அதன் பங்கை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

சமூக நீதி குறித்த விழிப்புணர்வைத் தொடர்ந்து தமிழ் மக்களிடையே உருவாக்குவதிலும், அனைத்து அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பதிலும், தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகம் அவரது மறைவுக்குப் பின்னரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் தொடர்ந்து பங்காற்றி வருவதால், தமிழகத்தில் சமூக நீதி காப்பாற்றப்பட்டு வருகிறது.

இப்போது மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் ஓபிசி இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட இந்தப் பிரச்சினையில், திராவிடர் கழகம் நாடு முழுவதும் இந்த விஷயத்தை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் ஒரு முயற்சியாக, இந்தியா முழுவதும் உள்ள பாஜக தவிர்த்த அரசுகளின் பதினோரு முதல்வர்களுக்கும், அதேபோன்று, வட மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் என பதிமூன்று தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த தலைவர்களில் சிலர் எங்கள் முயற்சிகளை ஒப்புக் கொண்டு பாராட்டியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். திராவிடர் கழகம் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் சங்கம், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளது.

நாடெங்கிலும் உள்ள அனைத்து சமூக நீதி அமைப்புகளையும், ஆர்வலர்களையும் ஒருங்கிணைப்பதன் மூலம், சமூக நீதிக்கான போரில் நாம் வெற்றி பெறுவது உறுதி, அதை நோக்கி, நாம் ஒற்றுமையாக முன்னேறுவோம்.

கடிதம் அனுப்பப்பட்ட முதல்வர்கள்

வீ. நாராயணசாமி (புதுச்சேரி) கே.சந்திரசேகர ராவ் (தெலங்கானா), ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி (ஆந்திரா), பினராயி விஜயன் (கேரளம்), அசோக் கேலாட் (ராஜஸ்தான்), உத்தவ் தாக்கரே (மகாராஷ்டிரா), மம்தா பானர்ஜி (மேற்கு வங்கம்), நிதிஷ் குமார் (பிஹார்), நவீன் பட்நாயக் (ஒடிசா), கேப்டன் அம்ரிந்தர் சிங் (பஞ்சாப்), பூபேந்தர் பாகல் (சத்தீஸ்கர்)

தலைவர்கள்

சோனியா காந்தி (காங்கிரஸ்), சரத் பவார் (தேசிய காங்கிரஸ்), ராம் விலாஸ் பஸ்வான் (எல்.ஜே.பி.), மாயாவதி (பி.எஸ்.பி.), என். சந்திரபாபு நாயுடு (தெலுகு தேசம்), எச்.டி. தேவகவுடா (மதச்சார்பற்ற ஜனதா தளம்), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதி), தேஜஸ்வி யாதவ் (ஆர்.ஜே.டி.) உபேந்திர குஷ்வாகா (ஆர்.எல்.எஸ்.பி.), அனுபிரியா படேல் (அப்னா தள்), சித்தராமையா (காங்கிரஸ்), பி.கே.ஹரிபிரசாத், எம்.பி, ராஜீந்தர் யாதவ் (தேசிய பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் சங்கம்)”.

இவ்வாறு திராவிடர் கழகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்