என்னை அதிகம் வெளியில் செல்லவேண்டாம் என்று எச்சரித்தார் அன்பழகன்: ஸ்டாலின் உருக்கம்

By செய்திப்பிரிவு

என்னை பொதுவெளிக்கு அதிகம் செல்லவேண்டாம் என எச்சரித்தவர் அன்பழகன் ஆனாலும் எல்லா இடங்களுக்கும் அவரே போய் நலத் திட்ட உதவிகளை வழங்கினார். பாழாய்ப்போன கரோனா என் அன்பழகனையும் தொற்றிவிட்டது என ஸ்டாலின் உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

திமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், மறைவையொட்டி, இரங்கல் தெரிவித்து, தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில் காணொலி ஒன்றையும் வெளியிட்டார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“நாட்டுக்காகப் போராடி உயிரிழந்த ராணுவ வீரனின் தியாகத்திற்கு இணையானது, கரோனா தடுப்புப் பணிக்காகப் போராடி உயிரிழந்த என் சகோதரர் ஜெ.அன்பழகனின் தியாகம். அவரது தியாக வாழ்வைப் போற்றுவோம். திராவிட இயக்கம் மறவாது ஜெ.அன்பழகனின் திருமுகத்தை”.

திமுக தலைவர் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அக்காணொலியில் ஸ்டாலின் பேசியுள்ளதாவது:

“என் இதயத்தில் இடிபோல் இறங்கிய அந்தச் செய்தி, இன்று காலையில் வந்தது. எப்போதும் நான் “அன்பு... அன்பு” என்று அழைக்கும் என்னுடைய ஆருயிர்ச் சகோதரன் அன்பழகனை இழந்து நிற்கின்றேன்.

என்னுடைய இளமைக்காலம் முதலே, என்னோடு தோளோடு தோள் நின்ற தோழன், ஜெ.அன்பழகன். தியாகராயர் நகரில் வாழ்ந்த தீரன். தலைவர் கலைஞருக்குத் தளபதியாய் இருந்த பழக்கடை ஜெயராமனின் மகன்.

எமெர்ஜென்சியில் நாங்கள் கைதானபோது, பழக்கடை ஜெயராமன் அவர்களும் கைதானார். சென்னையில் திமுக போர்ப்படைத் தளபதி என்று பழக்கடை ஜெயராமனைச் சொல்வார்கள். அப்பாவைப் போலவே அன்பழகனும் திமுகவுக்கு சென்னையில் கிடைத்த போர்ப்படைத் தளபதியாகவே திகழ்ந்தவர்.

செயல்வீரனாக மட்டுமல்ல; சட்டப்பேரவையிலும் சிங்கமென கர்ஜிப்பார். அந்தக் காட்சி இப்போதும் என் கண்களில் நிழலாடுகிறது. எதிர்க்கட்சி வரிசையில் இருந்து அன்பு எழுந்தாலே ஆளுங்கட்சியினர் அனைவருமே பயத்தால் நடுங்குவார்கள். அவருக்குப் பதில் சொல்லப் பயப்படுவார்கள். தான் நினைப்பதை யாருக்கும் பயப்படாமல் துணிச்சலுடன் எடுத்துரைப்பவர்.

முந்தைய ஆட்சியில் அவர் கைது செய்யப்பட்டு ஊர் ஊராக அலைக்கழிக்கப்பட்டபோதுகூட அவரது மன உறுதியைக் குலைக்க முடியவில்லை. தன் உடல்நிலையைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் உற்சாகத்துடன் தொய்வே இல்லாமல் பணியாற்றியவர் அன்பழகன்.

தலைமைக் கழகத்தால் மாபெரும் பொதுக்கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டால், அதனைத் தலைநகர் சென்னையில் கம்பீரமாக நடத்திக் காட்டுபவர்தான் என் அன்பழகன். அவர் போடும் மேடைகள் எல்லாம் காண்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அந்த மேடைகளும் அன்பழகனைப் போலவே கம்பீரமாக இருக்கும்.

இந்த கரோனா தொற்றுக் காலத்திலும் சளைக்காமல் பணியாற்றினார். என்னை, ''அதிகமாக வெளியில் போகாதீர்கள்" என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால், அவரது உடல்நிலை பற்றி எனக்குத் தெரியும். அதனால் அவரையும் நான் “அதிகம் அலையாமல் உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணிகளைக் கவனியுங்கள்” என்று அன்புவிடம் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தேன்.

ஆனாலும் எல்லா இடங்களுக்கும் அவரே போய் நலத் திட்ட உதவிகளை வழங்கினார். பாழாய்ப்போன கரோனா என் அன்பழகனையும் தொற்றிவிட்டது. நாட்டுக்காகப் போராடி உயிரிழந்த ராணுவ வீரர்களின் தியாகத்துக்கு இணையானது, கரோனா தடுப்புப் பணிக்காகப் போராடி உயிரிழந்த என் சகோதரன் அன்பழகனின் தியாகம்.

ஒருநாளைக்கு எத்தனை தடவை என் அன்புவிடம் பேசுவேன். இனி அன்புவிடம் எப்படிப் பேசுவேன்? அன்பழகன் மட்டுமல்ல, அவருடைய மொத்தக் குடும்பமும் கழகக் குடும்பம்தான். அவர்கள் அனைவருக்கும் நான் எப்படி ஆறுதல் சொல்வேன்?

உடன்பிறப்புகள் அனைவருக்கும் எப்படித் தேறுதல் சொல்வேன்? எங்கே காண்பேன் என் அன்பை? எனக்கு நானே எப்படித் தேறுதல் சொல்லிக்கொள்வேன்? கட்சியின் தீரமிக்க உடன்பிறப்பு ஜெ.அன்பழகன் அவர்களின் தியாக வாழ்வைப் போற்றுவோம். திராவிட இயக்கம் மறவாது உன் திருமுகத்தை”.

இவ்வாறு ஸ்டாலின் தனது காணொலியில் பதிவு செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்