கரோனா விவகாரத்தில் அரசுகளின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என்று திருச்சி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 35 பேருக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் மற்றும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகிய நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி கலையரங்க வளாகத்தில் இன்று (ஜூன் 9) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு முன்னிலையில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.20 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை சு.திருநாவுக்கரசர் வழங்கினார்.
அதன் பிறகு திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், அவர்களிடம் ஆலோசிக்காமல் சர்வாதிகாரப் போக்கில் 2 ஆண்டுகளுக்கு எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்திருப்பது கண்டனத்துக்குரியது.
கரோனா நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசு ரூ.1,000 மட்டுமே வழங்கியுள்ளது. இந்த நிதியை ரூ.7,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
கரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக வெளிவரும் தகவல்களைக் காட்டிலும் 2 மடங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாகவே தெரிகிறது. பாதிக்கப்பட்ட பலருக்கும் பரிசோதனை செய்யப்படவில்லை. அரசு மருத்துவமனைகளில் படுக்கை இல்லாததால்தான் 25 சதவீதப் படுக்கைகளை அளிக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அரசு இந்த எண்ணிக்கையை 50 சதவீதமாகக் கேட்டுப் பெற வேண்டும். குறிப்பாக, ஒன்றுக்கும் அதிகமான மருத்துவமனைகளை வைத்துள்ள நிறுவனங்களிடமிருந்து, ஒரு மருத்துவமனையை முழுமையாக கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்த அரசு பெற வேண்டும்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்தாலும், சிகிச்சைக்கான செலவை அரசே முழுமையாக ஏற்க வேண்டும்.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலை நாட்களை 200 ஆக உயர்த்த வேண்டும். நாட்டில் உள்ள 60 கோடி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், கரோனா நிவாரண நிதியாக மத்திய அரசு குடும்பத்துக்கு ரூ.5,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை நிவாரண நிதி வழங்க வேண்டும். புலம் பெயர்ந்து சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும். நிவாரண நிதி வழங்கும் திட்டத்துக்கு முன்னுரிமை அளித்து விரைவாக நிறைவேற்ற வேண்டும்.
பெரு நிறுவனங்களின் பல ஆயிரம் கோடி கடன்களை ரத்து செய்ததுபோல், ஊரடங்கால் மூடிக்கிடந்த மற்றும் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கடன், வட்டி, அபராத வட்டி ஆகியவற்றைத் தள்ளுபடி செய்ய வேண்டும். அப்போதுதான் அந்தத் தொழில்கள் மீண்டும் செயல்பட முடியும்.
வேலையின்றி, மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை, மின் கட்டண உயர்வு ஆகியவை அநியாயம். ஏழை, எளிய மக்களின் வீட்டு உபயோக மின் கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். ஊரடங்கால் சிரமப்படும் மக்களுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக அரசுகள் மேலும் சிரமத்தையே அளிக்கின்றன.
தமிழ்நாட்டில் கரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை. அதற்கான நிதி ஒதுக்கீடும் போதுமானதாக இல்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும் பொறுப்பு உண்டு. தொலைக்காட்சியில் பிரதமர் பேசினால் மட்டும் போதாது. கரோனா பரவலைத் தடுக்க அரசு கூறும் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் இடமில்லை என்பதால்தான் தனியார் மருத்துவமனைகளில் 25 சதவீதப் படுக்கைகளைக் கேட்டுள்ளனர். இதைச் சொல்வதற்காக என் மீது வழக்குப் பதிவு செய்தால் செய்யட்டும்".
இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago