செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு தகுதியுள்ள பேராசிரியர் தாமோதரனை தேர்வு செய்யாதது ஏன் என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, கி.வீரமணி இன்று (ஜூன் 8) வெளியிட்ட அறிக்கை:
"மைசூருவில் இயங்கி வந்த மத்திய இந்திய மொழிகள் நிறுவனத்தில், தமிழ் ஆய்வுக்குரிய மொழியாகவும், பிற மொழியாளர்களுக்குக் கற்பிக்கும் மொழியாகவும் வழங்கப்பட்டு வந்தது.
சிறந்த தமிழ் ஆய்வாளருக்கு ஆண்டுதோறும் விருது வழங்க அறக்கட்டளை!
தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கருணாநிதி, மத்திய அரசில் திமுகவும் இடம்பெற்ற வாய்ப்பையும் நல்லவண்ணம் பயன்படுத்தி, தமிழுக்கு செம்மொழி தகுதியைப் பெற்றுத் தந்ததோடு, மைசூருவில் இயங்கி வந்த அந்த மத்திய நிறுவனத்தின் அலுவலகம் சென்னைக்கு மாறுதலாகும்படியும் செய்ததோடு, தனது சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை சிறந்த தமிழ் ஆய்வாளருக்கு ஆண்டுதோறும் விருது வழங்க அறக்கட்டளை அமைக்கவும் அந்த நிறுவனத்திற்கு உதவினார்.
அதனால் செம்மொழி என்ற தகுதியைப் பெற்றது. செம்மொழி தமிழ் நிறுவனத்தில் இயக்குநர், துணைத் தலைவர், பதிவாளர், நிதி அதிகாரி என்ற பொறுப்புகளில் உயர்மட்ட அதிகாரிகளும், கல்விக் குழு, நிதிக்குழு, ஆட்சிக் குழு போன்ற அமைப்புகளும் உள்ளன.
கடந்த 13 ஆண்டுகளாக நிரந்தரமாக யாரும் நியமிக்கப்படவில்லை
மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் கடந்த 13 ஆண்டுகளாக நிரந்தரமாக யாரும் நியமிக்கப்படவில்லை. ஐஐடி என்ற இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் அதிகாரிகளே பொறுப்பு இயக்குநர் பதவியை வகித்து வந்தனர். பலமுறை இதனைச் சுட்டிக்காட்டி, அறிக்கை விடுத்து, ஆர்ப்பாட்டங்களும் செய்துள்ளோம். இப்பொழுது தேசிய தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர் பழனிவேல் என்பவர் பொறுப்பில் உள்ளார்!
2014 இல் இயக்குநர் பதவிக்காக செம்மொழி நிறுவனத்தின் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. மு.பாலசுப்பிரமணியன் தேர்வுக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இயக்குநராக நியமனம் செய்யப்படவில்லை. தொடர் கோரிக்கைகள் கல்வியாளர்களால் வைக்கப்பட்ட காரணத்தால், மீண்டும் அப்பதவிக்கு விளம்பரம் செய்யப்பட்டது.
காவிக் கட்சியின் ஆதரவாளராகவும், அனுதாபியாகவும் இருப்பதால்...
இவ்வாண்டு ஜூன் மாதம் செம்மொழி மத்திய இயக்குநராக சந்திரசேகரன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக செய்தி வந்துள்ளது. இப்பதவிக்குரிய ஆய்வு மற்றும் சிறப்புத் தகுதிகள், அனுபவம் பற்றி கவலைப்படாமல், இப்பதவிக்கு இவரைத் தேர்வு செய்துள்ளதாகவும், இவர் கல்லூரி ஒன்றில் துணைப் பேராசிரியராகவும் காவிக் கட்சியின் ஆதரவாளராகவும், அனுதாபியாகவும் இருப்பதால் இப்பரிசு என்றும் கல்வியாளர்கள் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன.
இவருடன் நேர்காணலுக்கு இயக்குநர் பதவிக்குச் சென்றவர்கள் பற்றிய செய்திகளும் வெளிவரவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட மூவர்...
சந்திரசேகரனுடன் நேர்காணலுக்குச் சென்றவர்களில் குறிப்பிடத்தக்க தமிழ்ப் பேராசிரியர்களான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் மையத்தின் பேராசிரியர் தாமோதரன் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் செல்வகுமார் ஆகியோர் ஆவர்.
மூவரில் தாமோதரன் ஒருவரே பேராசிரியர் பணியில் இருப்பவர் ஆவார். இவருக்கு இத்தகைய சிறப்புத் தகுதி இருந்தும், இவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இப்பதவிக்குரிய மற்ற தகுதிகள் இருந்தும், இவர் தேர்வாகாததற்கு முழு காரணம், இவர் பெரியார் பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார் என்பதாக இருக்குமோ என்றும் கல்வியாளர்கள் வட்டாரத்தில் பேசப்படுகின்றது.
துணைப் பேராசிரியராக மட்டும் பணிபுரியும் சந்திரசேகர் என்பவர் எப்படி இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது ஆய்வாளர்கள் - பேராசிரியர்கள் வட்டாரத்தில் புரியாத பெரும் புதிராக இருக்கிறது.
காவிக் கட்சியின் கண்ணோட்டமோ என்றும் பேசப்படுகிறது. காரணம், இவர் பேராசிரியரோ, துணைத் தலைவரோ இல்லை. அதோடு அனுபவமும் மிகவும் குறைவே! இது முற்றிலும் விதிகளைப் புறந்தள்ளிய அப்பட்டமான சார்புநிலை நியமனமாகவே நடந்துள்ளது என்று பல பேராசிரியர்களும், கல்வியாளர்களும் குமுறுகின்றனர்.
தமிழக உயர்கல்விப் பாதுகாப்பு இயக்கம் கண்டனம்!
இதனை தமிழக உயர்கல்விப் பாதுகாப்பு இயக்கம் கண்டித்துள்ளது. தமிழ்நாடு அரசும், முதல்வரும் இதில் தலையிட்டு, இதுகுறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என்று கோருவதுடன், இப்பணி நியமனம் குறித்து விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று, மாநில அமைப்பாளர் பேராசிரியர் இரா.முரளி, மாவட்ட அமைப்பாளர் பேராசிரியர் அ.சீனுவாசன் ஆகியோர் அறிக்கை விடுத்துள்ளனர்.
முழுத் தகுதி உள்ள பேராசிரியர் தாமோதரன், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் படித்தவர். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். 4 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இவ்வளவு தகுதிகள், அனுபவம் உள்ள ஒருவரை விட்டுவிட்டு, சாதாரண ஒரு உதவிப் பேராசிரியரை விதிகளையெல்லாம் புறந்தள்ளி, தேர்வு செய்தது எவ்வகையில் நியாயமாகும்? வெளிப்படைத்தன்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியது!
நீதிமன்றங்களுக்குச் சென்றால், இந்த நியமனம் நிலைக்குமா என்பது ஒருபுறமிருந்தாலும், கருணாநிதி உருவாக்கிய செம்மொழி தமிழ் நிறுவனத்தில் இப்படி ஒரு அவலமா என்பது வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியதாக உள்ளது! இதற்கு உரிய பரிகாரம் தேவை!
இப்பிரச்சினை மேலும் பூதாகரமாக வெடித்து மக்கள் கிளர்ச்சி, மாணவர்கள் கிளர்ச்சிகளுக்குச் சென்றுவிடாது, தமிழக அரசு தலையிட்டு, நியாயம் வழங்கட்டும்"
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago