வட மாவட்டங்களின் கல்வி வளர்ச்சியை உறுதி செய்ய சிறப்புத் திட்டம் தேவை: ராமதாஸ்

வட மாவட்டங்களின் கல்வி வளர்ச்சியை உறுதி செய்ய சிறப்புத் திட்டம் தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று வெளியிடப்பட்ட 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இதுவரை இல்லாத வகையில் 90.60 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

அதிலும் குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பயின்ற மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவி சுஷாந்தி 1200க்கு 1193 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்திருப்பது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும்.

சுஷாந்திக்கும், மாநில அளவில் அடுத்த இரு இடங்களைப் பிடித்த அலமேலு, நித்யா, துளசிராஜன் ஆகியோருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தைப் பார்க்கும்போது இருவிதமான தமிழகம் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். தேர்ச்சி விகிதத்தில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாவட்டங்களில் ஒன்று கூட வட தமிழகத்தைச் சேர்ந்ததில்லை; ஆனால், கடைசி 11 இடங்களில் உள்ள மாவட்டங்களில் திருவண்ணாமலை, அரியலூர், கடலூர், வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்கள் வடதமிழகத்தைச் சேர்ந்தவையாகும்.

இதிலிருந்தே இந்த மாவட்டங்கள் கல்வியில் மிகவும் பின்தங்கியிருப்பதை தெரிந்து கொள்ளலாம். சென்னை மாநகருடன் இணைந்த திருவள்ளூரும், காஞ்சிபுரமும் இப்பட்டியலில் முறையே 23 மற்றும் 24 ஆம் இடங்களைப் பிடித்துள்ளன. இம்மாவட்டங்களின் பல பள்ளிகள் சென்னைக்குள் இருப்பதால் அதிக தேர்ச்சியைப் பெற்றுள்ளன. இப்பள்ளிகளை தவிர்த்து பார்த்தால் இம்மாவட்டங்களின் தேர்ச்சி விகிதமும் மிகமிக மோசமான நிலையிலேயே இருக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

கல்வி, சுகாதாரம் ஆகியவற்றின் சிறப்பு என்னவென்றால், வளர்ச்சிக்கான மூலப்பொருளாகவும், அடையாளமாகவும் இருக்கக் கூடியவை என்பது தான். அதனால் தான் கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்; இவற்றுக்கான தேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கல்வியில் வடமாவட்டங்கள் மிகவும் பின்தங்கியிருப்பதன் மூலம் அம்மாவட்டங்களில் வளர்ச்சி இல்லை என்பதும், எதிர்காலத்தில் வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இல்லை என்பது தெளிவாகத் தெரியும். 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு தொடங்கப்பட்டதிலிருந்து இன்று வரையிலான 35 ஆண்டுகளின் தேர்ச்சி விகிதத்தை ஆய்வு செய்தால் ஒவ்வொரு ஆண்டும் வடமாவட்டங்கள் கடைசி இடங்களைத் தான் பிடித்திருக்கின்றன என்பது கண்கூடாகத் தெரியும்.

இந்த நிலையை மாற்றி வடமாவட்டங்களில் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது தான் வருத்தமளிக்கும் விஷயமாகும். மது விற்பனையில் முன்னணியில் இருக்கும் வட மாவட்டங்கள், கல்வியில் கடைசி இடங்களைப் பிடிப்பது ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்றாகும்.

ஆனால், இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்வதில் காட்டும் ஆர்வத்தை, தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதில் தமிழக ஆட்சியாளர்கள் காட்டவில்லை. அதேபோல், தேர்ச்சி விகிதத்திலும், அதிக மதிப்பெண்களைப் பெறுவதிலும் தனியார் பள்ளிகளைவிட அரசு பள்ளிகள் பின் தங்கியிருப்பதும் வருத்தம் அளிக்கிறது. அரசு பள்ளிகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவது தான் இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.

ஒவ்வொரு பாடத்திற்கும் ஓர் ஆசிரியர் இருக்க வேண்டிய நிலையில், ஒரே ஆசிரியர் பல பாடங்களை எடுக்க வேண்டியிருப்பதும், பல இடங்களில் ஒரு பள்ளிக்கு ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே இருப்பதும் அரசு பள்ளிகளின் அவலத்தை உணர்த்தும். இருக்கும் ஆசிரியர்களை கல்விப் பணியாற்ற விடாமல் மற்ற பணிகளுக்கு அரசு திருப்பிவிடுவதும் கல்வித் தரம் குறைவதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

தனியார் கல்லூரிகளை விட அரசு கல்லூரிகள் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் நிலையில், அரசு பள்ளிகளின் தரத்தையும் அதேபோல் உயர்த்துவதற்கு எது தடையாக உள்ளது? என தெரியவில்லை. அரசும், ஆசிரியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. எனவே, வட மாவட்டங்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்தவும் தமிழக அரசு உடனடியாக சிறப்புத் திட்டத்தைத் தயாரித்து செயல்படுத்த வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்