ஊரடங்கினை அரசு அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் இந்நோய் பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது. என கரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளில் தமிழ்நாடு அரசின் செயல்பாடு குறித்து தமிழக முதல்வர் நீண்ட கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி எழுதியுள்ள கடிதம்:
“என் இனிய தமிழ் சொந்தங்களுக்கு அன்பான வணக்கங்கள். குறித்த நேரத்தில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படவுள்ள இந்த நல்ல தருணத்தில், இக்கடிதம் வாயிலாக உங்களோடு பேசுவதை நான் எனது கடமையாக கருதுகிறேன்.
பழந்தமிழ்க்குடியாகி நாம், பல தலைமுறைகளாக பல்வேறு சவால்களை எதிர் கொண்டு வெற்றி கண்டிருக்கிறோம்.
இயற்கை பேரிடர்களை எல்லாம் எதிர் கொண்டு வென்றுகாட்டியிருக்கிறோம். அதேபோல், இன்று உலகம் முழுவதும் பரவி, மனித குலத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்க்கு எதிராக நாம் போராடி வருகிறோம். இதிலும் நம் முன்னோர்களைப் போல் நாம் வெற்றி காண்போம் என்பதில் எந்த ஐயமும் கிடையாது.
கடந்த இரண்டு மாதங்களாக ஒரு காட்டாற்று வெள்ளத்தைக் கடப்பது போல, மிகவும் இக்கட்டான காலச் சூழ்நிலையை உங்களின் ஒத்துழைப்பு மற்றும் பேராதரவுடன் நாம் கடந்து வந்துள்ளோம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, நாம் அனைவரும் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் கற்பனை செய்ய இயலாதவை. ஒரு திருமணத்திற்கோ, நெருங்கியவர்களின் இறுதி சடங்குகளிலோ கூட கலந்து கொள்ள முடியாத துயரங்களை எல்லாம் கரோனா வைரஸ் நமக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
உண்மையில், இந்த கரோனா வைரஸ் நம் இயல்பு வாழ்க்கையை பாதித்ததோடு மட்டும் அல்லாமல், நம் பொருளாதாரத்தையும் பாதித்து விட்டது. நாம் அனைவரும், மனதிலும், எண்ணத்திலும், துணிவு கொண்ட பழம்பெரும் தமிழர்களின் சந்ததியினர். “இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்” என்ற தெய்வப் புலவர் வாக்கிற்கிணங்க, கடந்த காலங்களில் நாம் இதுபோன்ற பல்வேறு இடர்களை எதிர்கொண்டும், குறுக்கீடுகளை தவிடுபொடியாக்கியும் முன்னேறி இருக்கின்றோம்.
வறட்சியாக இருந்தாலும் சரி, சுனாமி போன்ற ஆழிப்பேரலைகள் ஆனாலும் சரி, தானே, வர்தா, ஓகி, கஜா போன்ற கோர புயல்கள் ஆனாலும் சரி, இவற்றையெல்லாம் சகோதர, சகோதரிகளாகிய உங்களின் பெரும் ஒத்துழைப்பாலும், நமது பேராற்றலாலும், துரிதமான, திடமான நடவடிக்கைகளாலும், அரசு அவற்றை எதிர்கொண்டு, பட்ட துன்பங்களை எல்லாம், வெயில் நேரத்து பனிபோல போக்கி, ஒரு வளமான எதிர்காலத்தினை உருவாக்கி, தமிழ்நாட்டினை வளர்ச்சிப் பாதையில் பீடு நடை போட செய்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
சீனாவில் கரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டது பற்றி அறிந்தவுடன், ஜனவரி 2020 முதல் முனைப்புடன் செயல்பட்டு துரிதமான நடவடிக்கைகளை நான் முடுக்கிவிட்டேன். தமிழ்நாட்டில் 7.3.2020 அன்று நோய் தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்ட உடன் களத்தில் துரிதமாக பல்முனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சமூக பரவல் என்ற நிலைக்கு ஒரு போதும் தமிழ்நாடு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காக தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. “விலகி இருங்கள், விழித்திருங்கள், வீட்டிலேயே இருங்கள்” எனும் எனது கனிவான வேண்டுகோளை ஏற்று தமிழ்நாட்டு மக்கள் உரிய ஒத்துழைப்பை வழங்கி வருவதை நான் அறிவேன்.
சகோதர, சகோதரிகளே! இந்த ஊரடங்கினால் பல்வேறு கட்டுப்பாடுகளையும், சிரமங்களையும் நீங்கள் சந்தித்து இருப்பீர்கள். சுறுசுறுப்பான நீங்கள், வீட்டிலேயே முடங்கியிருப்பது அத்தனை எளிதான காரியமல்ல என்பதை நான் அறிவேன். இருப்பினும், இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத உலகத்திற்கே புதியதான இந்த தொற்றினை எதிர்கொள்ள பொருளாதார வளமிக்க, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளே திணறிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், அசாதாரண முன்னெச்சரிக்கையும், கட்டுப்பாடும் நமக்கு தேவைப்பட்டது. தனி மனித உறுதியும், ஒழுக்கமுமே, கொரோனா தொற்றில் இருந்து நம்மை தற்காக்கும் என்பதனை நாம் உணர்ந்து செயல்பட்டு வருகிறோம்.
அரசு, மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, எது சரியான பாதையோ, அதை தேர்ந்தெடுத்து, ஊரடங்கினை அமல்படுத்தியது. ஒரு கை மட்டும் ஓசை எழுப்ப முடியாது என்பதை அறிந்த அறிவார்ந்த நீங்கள், இந்த ஊரடங்கிற்கு முழுமையாக ஆதரவு அளித்து வருகிறீர்கள். ஒரு வேளை சுய ஒழுங்கின்றி, விதிகளை மதிக்காமல் அனைவரும் இருந்திருந்தால், நாம் இதைவிட மோசமான விளைவுகளை சந்தித்து இருப்போம்.
நமது கூட்டு முயற்சியினால், நோய் தொற்றிலிருந்து குணமடைந்து, இல்லம் திரும்புவோரின் சதவிகிதம் இன்று இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம். அதுமட்டுமல்ல உயிர் இழப்போரின் சதவிகிதமும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழ்நாட்டில்தான் மிகக் குறைவு. இதற்காக இன்று மருத்துவ வல்லுநர்கள், பொது சுகாதார வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், நடுநிலையாளர்கள், எல்லாம் தொடர்ந்து தமிழ்நாட்டை பாராட்டி வருகிறார்கள்.
உலகிற்கே புதுமையான இந்த வைரஸ் தொற்றினை வெற்றிக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே, அதாவது, இந்த தொற்று நோய் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்பிருந்தே இந்தியாவிற்கே முன்னோடியாக உங்களது அரசு திட்டமிட்டு, பல்முனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொடக்கத்திலேயே நோயின் தன்மையை அறிந்துக் கொள்ளவும், நோய் தொற்றினை தடுக்கவும், பரிசோதனைகளை அதிகப்படுத்துவதுதான் ஒரே வழி எனக் கண்டறிந்து, மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் அதிக அளவில் அரசு பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். 4.6.2020 வரை தமிழ்நாட்டில் சுமார் 5.50 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த பரிசோதனைகள் மூலமே 86 விழுக்காடு கரோனா தொற்றுக் கொண்டவர்கள் எவ்விதமான அறிகுறிகளும் இல்லாதவர்கள் என்பதை அறிந்துக் கொள்ள முடிந்தது. இதனை புரிந்துக் கொண்டதாலேயே, தொற்றுப் பரவலை எதிர்த்துப் போராட பல்வேறு நடவடிக்கைகளுடன் துரிதமாக செயலில் இறங்க நம்மால் முடிந்தது. நோய் தொற்றின் தகவல்களை பகிர்ந்துக் கொள்ள வலைதளம் ஒன்று புதியதாக உருவாக்கப்பட்டது.
வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்களை கண்காணிக்க, நமது விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் மாநில எல்லைகளில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் சோதனை சாவடிகளில் பணியமர்த்தப்பட்டனர். விமான நிலையங்களிலும், இரயில் நிலையங்களிலும் 2.20 லட்சத்திற்கும் அதிகமானோர் பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர், எல்லைப் பகுதிகள் முழுவதுமாக மூடப்பட்டன. இதனால் தொற்றின் ஆபத்து பெருமளவு குறைக்கப்பட்டது.
அதே நேரத்தில், சமயோசிதமாக விவசாய பணிகளுக்கும், சரக்கு போக்குவரத்திற்கும் அனுமதி அளித்து, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் சிரமங்கள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமும் தடுக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு, இந்த நோய் தொற்றினை பேரிடராக அறிவித்து 4.6.2020 வரை 4 ஆயிரத்து 333 கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையும், உள்ளாட்சி அமைப்புகளும், மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவ வசதிகளை உருவாக்குவதற்கும், பொது இடங்கள் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் கிருமிநாசினியை தெளிப்பதற்கும், தேவையான பொருட்களை கொள்முதல் செய்வதற்கும், வெளிமாநில தொழிலாளர்கள், முதியோர், கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோருக்கு தினமும் உணவு அளிப்பதற்கும், நிவாரணங்கள் வழங்குவதற்கும், போதிய அளவு நிதி வழங்கப்பட்டது.
தமிழக அரசு, கரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய் தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும். போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளுக்கென, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், பள்ளி மாணாக்கர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் ஆகியோரிடமிருந்து 3.6.2020 வரை 378 கோடியே 96 லட்சத்து 7 ஆயிரத்து 354 ரூபாய் வரப்பெற்றுள்ளது. இதனை மனமுவந்து அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், சிறுகச், சிறுக சேமித்த தங்கள் பணத்தை அளித்த பொதுமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
மருத்துவ, பொது சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஓய்வுப் பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில் நுட்பப் பணியாளர்கள் ஆகியோர் ஒப்பந்தம் முறையில் பணி புரிய அனுமதிக்கப்பட்டனர். சுமார் 2,500 செவிலியர்கள் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். இன்று வரை புதியதாக 530 மருத்துவர்கள், சுமார் 2,323 செவிலியர்கள், மருத்துவர் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, பணியில் சேர்க்கப்பட்டனர். மேலும் 1,500 ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர்களும், 2,715 பல்நோக்கு சுகாதார பணியாளர்களும், 334 சுகாதார ஆய்வாளர்களும் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர்.
இந் நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 123 அரசு மருத்துவமனைகளும், 169 தனியார் மருத்துவமனைகளும் ஆக மொத்தம் 292 கோவிட் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு மருத்துவசேவை மக்களுக்கு எளிதில் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை உங்களின் அரசு மேற்கொண்டது.
4.6.2020-ஆம் தேதி வரை 14 லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனை உபகரணங்களும், 2 கோடியே 83 லட்சத்திற்கும் அதிகமான மூன்று அடுக்கு முகக் கவசங்களும், 37 லட்சத்திற்கும் அதிகமான சூ95 முகக் கவசங்களும், 25 லட்சத்திற்கும் அதிகமான முழு உடல் கவச உடைகளும், கொள்முதல் செய்யப்பட்டு, களப் பணியாளர்களுக்கு போதுமான அளவிற்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் போதுமான அளவு கையிருப்பும் உள்ளது.மொத்தம் 3,384 வென்டிலேட்டர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளன.
மத்திய அரசின் அனுமதியைப் பெற்று, தமிழ்நாடு முழுவதும் பரிசோதனை நிலையங்களை பரவலாக நிறுவி, நாட்டிலேயே அதிகபட்சமாக 72 மையங்களின் மூலம் தினமும் சராசரியாக 13 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.மேலும், 4.6.2020 முதல் தனியார் மருத்துவ மனைகளில் முதல்வரின் மருத்துவ காப்பிட்டுத் திட்டத்தின்கீழ் கரோனா சிகிச்சை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏழைகள், சிறு தொழில் செய்வோர், சிறு வணிகம் செய்வோர் போன்றோரது பொருளாதார நிலை இந்த ஊரடங்கினால் பாதிப்படைந்துள்ளது என்பதை நான் அறிவேன். இப்பாதிப்புகளை களைய நம் மக்களுக்கு நிவாரணம் அளிப்பது ஒன்றே தீர்வாகும் என்பதை உணர்ந்துதான், தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகள் மூலம் உணவு பொருட்களை விலையின்றி வழங்குதல், ரொக்க நிவாரணம் வழங்குதல் போன்ற பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை மிகுந்த அக்கறையுடன் அரசு செயல்படுத்திவருகிறது. தமிழ்நாட்டில் அனைத்து 2.01 கோடி அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக 1000 ரூபாய் ரொக்கமாக ஏப்ரல் 2ஆம் தேதி முதலே வழங்கப்பட்டது.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், உங்களின் அரசு, மக்களின் உணவு பாதுகாப்பை சிரமேற்கொண்டு, உறுதி செய்திருக்கிறது. முன்பு எப்போதும் இல்லாத வகையில், மூன்று மாதங்களாக அதாவது, ஏப்ரல், மே, ஜுன் மாதங்களுக்கு அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு போன்ற ரேசன் பொருட்களை விலையில்லாமல் வழங்கிய ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
அந்த வகையில், ஏப்ரல், மே மாதங்களில் 2.01 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஜுன் மாதத்திற்கு ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல், வழக்கமாக வழங்கப்படும் அரிசியுடன், மூன்று மாதங்களுக்கு கூடுதல் அரிசி விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (ஊடிவேயinஅநவே ஷ்டிநேள) வாழும் மக்களுக்கு, ரேசன் பொருட்கள் அவர்களுடைய இல்லங்களுக்கே கொண்டு சென்று வழங்கப்பட்டது.
12.13 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள், 2.9 லட்சம் உடல் உழைப்பு தொழிலாளர்கள், 83,500 ஓட்டுநர் தொழிலாளர்கள், 14,667 முடித்திருத்துவோர், 22,486 சலவைத் தொழிலாளர்கள், 9,938 பனை தொழிலாளர்கள், 3.96 லட்சம் தையல் தொழிலாளர்கள், 52,464 கைவினைப் பொருள் தொழிலாளர்கள், 1.03 லட்சம் கைத்தறி மற்றும் பட்டு நெசவாளர்கள், 5,936 காலணி மற்றும் தோல் பொருள் பதனிடும் தொழிலாளர்கள், 1,295 ஓவியர்கள், 15,340 பொற் கொல்லர்கள், 66,021 வீட்டுப் பணியாளர்கள், 3.21 லட்சம் பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், 65,715 விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் 15,019 சமையல் தொழிலாளர்கள், 30,059 மண்பாண்டத் தொழிலாளர்கள் என 17 அமைப்பு சாரா தொழிலாளர்கள், 59,100 பட்டாசுத் தொழிலாளர்கள், 4.85 லட்சம் மீனவர்கள், 37,385 நாட்டுபுறக் கலைஞர்கள், 46,979 சிறு வியாபாரிகள், 33,627 பூசாரிகள், 14,622 உலமாக்கள், 12,670 நரிக்குறவர்கள், 3,826 புதிரை வண்ணார்கள், 21,679 திரைப்பட தொழிலாளர்கள், 9,042 காதி தொழிலாளர்கள், 45,000 மலைவாழ் மக்கள், 6553 மூன்றாம் பாலினத்தவர்கள், 30,780 தூய்மை பணியாளர்கள், 33687 சீர்மரபினர் என 14 நல வாரிய தொழிலாளர்கள் மற்றும் 21,770 தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் ரொக்க நிவாரணமாக கூடுதலாக 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல், பதிவு செய்யப்படாத கைத்தறி நெசவாளர்கள், முடித்திருத்துவோருக்கும், அவர்களின் கோரிக்கையை ஏற்று 2000 ரூபாய் ரொக்க நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. ஆக மொத்தம் சுமார் 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றது. 13.59 லட்சம் கட்டுமான தொழிலாளர் குடும்பங்களுக்கும், 86,925 ஓட்டுநர் தொழிலாளர் குடும்பங்களுக்கும் இரண்டு மாதத்திற்கு கூடுதல் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டது.
அதேபோல், சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் இலவசமாக தமிழ்நாடு அரசு வழங்கியது. இது தவிர, முகாம்களில் தங்கியிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவசமாக ரேசன் பொருட்களை முதலில் வழங்கிய அரசு, தமிழ்நாடு அரசுதான். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு ஊரடங்கு காலத்தில் எந்தவித கட்டுபாடுகளும் விதிக்கப்படவில்லை.
மேலும், விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கும், அரசு சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைப்பதற்கும், அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களிலிருந்தும் முற்றிலுமாக விலக்கு அளிக்கப்பட்டது. குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது.
பயிர்க் கடன், வீட்டுக் கடன், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட கடன்கள் ஆகியவற்றை செலுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்தவேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி செலுத்த அதே போல கால அவகாசம் வழங்கப்பட்டது.
25.3.2020 முதல் 5.7.2020 தேதி வரை, மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த தாழ்வழுத்த நுகர்வோர்கள், தங்களது மின்இணைப்பிற்கான மின் கட்டணத்தை 6.7.2020 தேதி வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின் இணைப்பு கட்டணம் இன்றி செலுத்தலாம்.
மேலும், தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள தாழ்வழுத்த நுகர்வோர்கள் மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி 25.3.2020 முதவ் 14.6.2020 தேதி வரை இருப்பின், அவர்கள் 15.6.2020 தேதி வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம் என்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு காலத்தில் வெளி மாநில தொழிலாளர்கள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் ஆகியோரின் பசிப் பிணி போக்க அட்சய பாத்திரமாக அம்மா உணவகங்கள், சிறப்பு முகாம்கள், சமூக உணவுக் கூடங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். இவற்றில் தினமும் சுமார் 8 லட்சம் மக்களுக்கு சூடான, சுவையான, சுகாதாரமான உணவு விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உலகை அச்சுறுத்தும் கொரோனா நோய் தொற்றிலிருந்து பொதுமக்களை காப்பதற்காக மாண்புமிகு அம்மாவின் அரசோடு தோளோடு தோள் நின்று பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், உள்ளாட்சித்துறை, வருவாய் துறை, காவல் துறை, தீயணைப்புத்துறை, உணவு வழங்கல் துறை, சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசுத் துறையினர் அனைவரையும் நாம் மனதாரப் பாராட்ட வேண்டும்.
களப் பணியாளர்களுக்கு உங்களது அரசு உரிய உபகரணங்களையும், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்காக கபசுரக் குடிநீர், ஜிங்க் மற்றும் மல்டி வைட்டமின் மாத்திரைகளும் சரியான நேரத்தில் வழங்கியது. மேலும், களப் பணியாளர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால், அரசே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தது.
சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு களப் பணிகளில் தன்னலம் பாராது அயராது உழைக்கின்ற தூய்மைப் பணியாளர்களின் உழைப்பை அங்கீகரிக்கவும்,ஊக்கப்படுத்தவும், சுமார் 33 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு மதிப்பூதியமாக 2,500 ரூபாய் வழங்கிடவும் நான் உத்தரவிட்டேன்.
தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ், ஊரகத் தொழில்களை மேம்படுத்தவும், வருமானத்தை பெருக்கவும் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறும் வகையில், கரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தேசிய மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள ஊரடங்கு காலத்திலேயே அனுமதித்து ஆணையிட்டது உங்கள் அரசு. இதனால் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு ஊரடங்கு காலத்திலும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டிருக்கிறது. மேலும், சுமார் 27 லட்சம் பணியாளர்களுக்கு இரண்டு நாள் ஊதியம், அதாவது 123 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது.
மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் தொழில் துறைக்கு மேலும் ஊக்கம் அளிக்க தகுந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. முழு நம்பிக்கை கொண்டு, தொழிலாளர்கள் வாழ்வில் ஒளியேற்ற, பல்வேறு அணுகுமுறைகளை மிகுந்த அக்கறையோடு தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை கொரோனா பாதிப்பிலிருந்து மீட்டெடுத்து, மறுகட்டமைப்பு செய்த புகழ்பெற்ற வல்லுநரும், நமது முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னருமானபேராசிரியர் ரங்கராஜன் தலைமையில் ஒரு வல்லுநர் குழுவையும் அரசு அமைத்துள்ளது.
தமிழ்நாட்டில் பெருமளவிலுள்ள தொழில்களுக்கு, குறிப்பாக குறு, சிறு மற்றும், நடுத்தர நிறுவனங்களுக்கு ஊரடங்கினால் ஏற்பட்ட பாதிப்புகளை களைய கீழ்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:-
· தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடன் தவணைகளை திருப்பிச் செலுத்த மூன்று மாத கால அவகாசமும்,· சிப்காட் மூலம் கடன் வழங்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கும், அதேபோன்று கால அவகாசமும், அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக “கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம்” ((CORUS) என்ற திட்டத்தினை 31.3.2020 அன்று அறிவித்தேன். இத்திட்டத்தின் கீழ் ஒரு நிறுவனத்திற்கு 25 லட்சம் ரூபாய் வரை தமிழ்நாடு அரசின் 6% வட்டி மானியத்துடன் கடன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 1.6.2020 தேதி வரை 855 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் 112 கோடி ரூபாய் கடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோவிட்19 மருந்து உற்பத்தி மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் 50 நிறுவனங்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ரோமானிய மற்றும் கிரேக்க நாடுகளுடன் கடல் வணிகம் செய்த வரலாற்று பெருமையை கொண்ட நாடு, நமது தமிழ்நாடு.
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா போன்ற நாடுகளில் தங்கள் நிறுவனங்களை தொடங்கவும், ஏற்கனவே அந்நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நாடுகளிலிருந்து இடமாற்றம் செய்யும் எண்ணம் கொண்டிருப்பதை, நமக்கு சாதகமாக பயன்படுத்தி, தமிழ்நாட்டை ஒரு முக்கிய உற்பத்தி மையமாக உருவாக்க, சிறப்பு முதலீட்டுப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு, முதலீடுகளை ஈர்க்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள 17 நிறுவனங்களுடன் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மே மாதம் 26ஆம் தேதியன்று கையெழுத்தானது. இதன் மூலம் நம் இளைஞர்கள் 47 ஆயிரம் பேர் வேலை பெற உள்ளனர்.
வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்பும் நம் மக்களை, அழைத்துவர மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் தலைமையில் குழுக்களும், இப்பணிகளுக்கென தனியே வலைதளமும் அமைக்கப்பட்டது. அதன் மூலம் அவர்கள் சிரமம் ஏதுமின்றி தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்படுகின்றனர்.
தமிழக அரசு உங்களுடைய அரசு, மக்களுடைய அரசு. மக்கள் எதனை எண்ணுகின்றார்களோ, அதனை நிறைவேற்றுகின்ற அரசு. எனவேதான், நெருக்கடியான இந்த காலக் கட்டத்திலும், மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை எவ்விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில், அவற்றை தங்கு, தடையின்றி பூர்த்தி செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக நாம் எதிர் கொண்டு வரும் சவால்களிலிருந்து முழுமையாக மீளும் வல்லமையும், நம்பிக்கையும் தமிழர்கள் ஆகிய நம் அனைவருக்கும் உள்ளது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
தமிழ்நாட்டு மக்களை மீட்கும் இந்த நடவடிக்கையில் சரியான வழிமுறைகளை எந்தவிதமான அச்சமின்றி நேர்மையுடனும், உண்மையுடனும், உங்களின் மக்கள் நல அரசு எடுத்து வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், உள்ளாட்சித்துறை, வருவாய் துறை, காவல் துறை, தீயணைப்புத்துறை, உணவு வழங்கல் துறை மற்றும் இதர அரசுத்துறை ஊழியர்கள் அனைவரும் அரசிற்கு பக்க பலமாக இருந்து இரவை பகலாக்கி, விழிகளை விளக்காக்கி, கண்துஞ்சாது, பசிநோக்காது, தன்னலம் பாராமல், அயராது களப்பணி ஆற்றி வருகின்றனர்.
அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுதல்களையும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாக இவ்வேளையில் உரித்தாக்குகின்றேன். தமிழ்நாட்டு மக்கள் முழு ஆரோக்கியத்துடனும், நலமும் மகிழ்ச்சியும் நிறைந்து வாழ்வதற்காக அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக உங்களின் அரசு, துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது மக்களுக்கான அரசாக, மக்களுடன் என்றென்றும் இணைந்திருக்கும் என்பது உறுதி.
ஊரடங்கினை அரசு அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் இந்நோய் பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது.வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும், பொது மக்கள் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவ வேண்டும். மேலும், பொது மக்கள் கூடுமானவரை தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைப் பிடித்தும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளையும், உணவு பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாராத்தையும் காக்க வேண்டும். இந்நிலையில், இதுவரை நாம் பெற்றுள்ள அனுபவத்தைக் கொண்டு, முன் எச்சரிக்கையுடன் ஒவ்வொருவரும், தம் கடமையை உணர்ந்து, மேற்சொன்னவற்றையும், அரசு அறிவிக்கும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றி, இந்த தொற்று நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு அரசுத் துறைக்கும் வகுக்கப்பட்டுள்ள நிலையான வழிமுறைகளை ((SOP) கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு அரசும், மக்களும் இணைந்து செயல்பட்டால், தமிழ்நாடு கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு, அனைத்து துறைகளிலும் வெற்றி நடை போடும் என்பதனை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
முக கவசம் கட்டாயம் அணிவோம் சமூக இடைவெளியை அனைவரும் கடைப்பிடிப்போம். தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்ப்போம். கரோனாவை வெல்வோம்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago