திமுக மீது அவதூறு பரப்புவோரிடம் ஹாரடுவேராகவும் கண்ணியத்துடனும் பதில் சொல்ல வேண்டும் என்று இணையத்தில் செயல்பட்டு வரும் கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
சென்னையில் இன்று நடைபெற்ற திமுக இணைய நண்பர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியது:
"தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் காட்டிய வழியில் இந்த 92 வயதிலும் சற்றும் தளராமல் செயல்படுவதோடு மட்டுமல்லாமல் நம்மையும் அதிவேகத்தோடு பணியாற்ற வைக்கும் தலைவர் கருணாநிதி நமது கழகத்தையும் இணையவெளியில் தினம் தினம் காத்து நிற்கும் எனதருமை இணைய நண்பர்களே வணக்கம்.
"உங்கள் ஒவ்வொருவரின் உற்சாகம் எனக்கு ஊக்கமளிக்கிறது. நாற்பதுக்கு நாற்பதும் வெற்றிப் பெறுவோம் என்கிற நம்பிக்கையைப் பெற்றுத் தருகிறது.
தேர்தல் முடிவுக்கு பிறகு தேர்தலின் வெற்றி விழாவில் இணையத்தில் பணியாற்றுகின்ற எல்லோரும் பங்கேற்கின்ற வகையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, அதில் திமுக தலைவர் கருணாநிதியும் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள் என நான் உறுதியளிக்கின்றேன்.
இந்த நுற்றாண்டில் அறிவியலால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட மாபெரும் கொடைதான் இணையம் என்பதை யாரும் மறுத்திட முடியாது.
நீதிக் கட்சி தலைவர்கள் முதல் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கருணாநிதி வரை இயற்கை நமக்களித்த கொடையை எப்படி நாம் கண்டு கேட்டு உண்டுயிர்ந்து உற்றறிந்து பயன் பெற்றோமோ, இன்றளவும் அனுபவித்து வருகிறோமோ அதே போல் இந்த இணையதளத்தையும் நாம் முழுவதுமாக கைப்பற்றி கழகத்தின் மீது பரப்பப்படுகின்ற பொய் பிரச்சாரங்களை மழுங்கடித்திடும் பணியில் உங்களை நீங்கள் முழுவதுமாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
தலைவர் வழியில் நீங்களும் கூட்டணி கட்சியை சார்ந்த இணைய தோழர்களிடமும் கழகத்தைப் பற்றி உண்மையான அக்கறையோடு விவாதிப்பவர்களிடத்தில் சாஃப்ட்வேராகவும், கழகத்தின் மீது அவதூறு பரப்பிடும் மற்றவரிடத்தில் ஹாரடுவேராகவும் அதே நேரத்தில் கண்ணியத்துடன் பதில் சொல்கின்ற பணியை முழுமூச்சுடன் ஈடுபட வேண்டும்.
தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா, லண்டன், கனடா, ஜெர்மனி, ஜோர்டான் மற்றும் இன்னும் ஏராளமான நாடுகளில் இருந்தும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் இணையத்தில் பங்காற்றிக் கொண்டிருக்கும் தி.மு.க.வினரை நான் தினமும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.
கடமையை சரிவர ஆற்றிகொண்டிருக்கும் அதே நேரத்தில் கண்ணியத்தையும் கட்டுப்பாடுகளையும் மீறிவிடாமல் பார்த்துக்கொள்வதும் அவசியம் என்று உங்களுக்கெல்லாம் நியாபகப்படுத்திட விரும்புகிறேன்.
2010 ஆம் ஆண்டு நம்முடைய திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தலைவரின் பெருமுயற்சியால் கோவையில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டின் ஓர் அங்கமாக உலக தமிழ் இணைய மாநாடும் நடத்தப்பட்டது.
அம்மாநாட்டில் இணையத்தில் தமிழ் முன்னேற்றம், இணையத் தமிழ், மின்சாதனங்களில் தமிழ் மொழி உள்பட பல தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டது.
இணையதளம் சம்மந்தப்பட்ட பல தலைப்புகளில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பன்னாட்டு கணினி நிறுவனங்களின் தமிழ் பணிகள் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் பேசினார்கள்.
அந்த ஆய்வரங்கத்தின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியின்போது தலைவர் கருணாநிதி சிறப்புரை ஆற்றும்போது "தமிழுக்குச் செய்ய வேண்டிய பணிகளைத் தமிழறிஞர்கள் ஆணையிட்டுச் சொன்னால் தமிழக அரசு செய்யக் கடமைப்பட்டிருக்கிறது" என்று சொன்னார். அதுதான் தலைவரின் தமிழ் பற்று.
குடிநீரை விற்று காசு பார்ப்பவர்களுக்கு எங்கிருந்து இந்த தமிழ் பற்று பற்றியெல்லாம் தெரியப்போகிறது. அவர்கள் "வெறும் வெற்று" என்பதையும் மக்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
அந்த இணைய மாநாட்டின் தொடர்ச்சியாக தலைவர் கருணாநிதியின் அன்றைய தி.மு.கழக அரசு, Tab, Tam எழுத்துரு குழப்பங்களுக்குத் தீர்வாக, யூனிகோட் எழுத்துருவை அரசு அங்கீகாரம் பெற்ற ஒரே பயன்பாட்டுக் குறியீடாக அறிவித்தது.
சிறந்த தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கு ஆண்டு தோறும் விருது போன்ற அறிவிப்புகளை செய்து கணினித் தமிழ் வளர்ச்சியிலும் தன்னுடைய சாதனைச் சக்கரத்தை வெற்றிகரமாக ஓட்டிக் காட்டினார் தலைவர் கருணாநிதி.
ஆனால் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் ஜெயலலிதா ஆட்சியின் சாதனை என்ன தெரியுமா? "கோட்டைக்குச் சுற்றுலா செல்கிறார், கொடநாட்டில் ஆட்சி நடத்த செல்கிறார்" இதுதான் ஜெயலலிதாவின் சாதனை.
ஆக, தமிழின் தமிழகத்தின் எல்லா வளர்ச்சிகளுக்கும் எப்படி நம்முடைய திராவிட முன்னேற்ற கழக அரசு அகரமாக திகழ்கிறதோ அதே போல கம்ப்யூட்டரில் தமிழ் வளர்ந்ததற்க்கும் நம்முடைய தலைவரும் தி.மு.கழகமும் தான் காரணம் என்பதை அவதூறு பரப்புபவர்கள் மிக சாமர்த்தியமாக மறைத்து விடுவார்கள்.
அவற்றை தலைவரின் பாணியில் நீங்கள்தான் ஆதரங்களோடு பதிவு செய்திட வேண்டும். அது உங்களின் தலையாயக் கடமைகளுள் ஒன்று.
இது தேர்தல் நேரம், நமக்கு மிகவும் அவசியமான தேர்தல் இது. நம் இந்திய தேசத்தின் வருங்கால பிரதமரை நிர்ணயிக்கப்போகும் தலைவரின் கரங்களுக்கு உங்கள் விரல்களின் மூலம் வலு சேர்க்க வேண்டியது, திராவிட காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.
எலிப்பொறி பயன்படுத்தி எலிகளை பிடிக்கும் லாவகத்தை கண்டுபிடித்தது மனித இனம். எப்படி தன்னை தொந்தரவுகளிலிருந்து தற்காத்து கொண்டிருக்கிறதோ அதே போல் கணிப்பொறி பயன்படுத்தி தகுந்த பதிவுகள் இட்டு தமிழ்நாட்டில் ஜெயலலிதா செய்து கொண்டிருக்கும் சும்மா ஆட்சியை பற்றி மக்களிடத்தில் எடுத்துச் சொல்லிட வேண்டும்.
திமுக மற்றும் தோழமை கட்சிகளின் சின்னங்களுக்கும் வாக்குகளை கேட்டு நீங்கள் கணினி யுத்தம் நடத்துங்கள். நாங்கள் களயுத்தம் நடத்துகிறோம்" என்றார் மு.க.ஸ்டாலின்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
16 hours ago