கரோனா ஊரடங்கு காரணமாக வங்கிக் கடனுக்கு 6 மாத காலத் தவணை விடுப்பு கொடுத்துள்ளது ரிசர்வ் வங்கி. அந்தக் காலகட்டத்துக்கு வட்டி வசூல் செய்யக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த உத்தரவின் எதிரொலியாக, வங்கி சாராத அமைப்புகள்கூட தவணை வசூல் செய்வதை நிறுத்தி வைத்துள்ளன. குறிப்பாக, கிராமங்களில் மாதச் சந்தா வசூல் செய்வோர், சீட்டு பிடிப்பவர்கள்கூட தவணை விஷயத்தில் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை.
ஆனால், ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி செயல்படாமல் மைக்ரோ ஃபைனான்ஸ் (நுண் கடன்) நிறுவனங்களில் பணிபுரியும் வசூல் ஏஜெண்டுகளும், களப் பணியாளர்களும் கிராமங்களுக்குச் சென்று, அனைவரும் தவணையைச் செலுத்தியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் பெண்கள் செய்வதறியாமல் தவிக்கிறார்கள்.
ஏற்கெனவே இதுபோன்ற சம்பவங்கள் சிவகங்கை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தின. இதைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், இவ்வாறு தவணை செலுத்தக் கட்டாயப்படுத்தும் நுண் கடன் நிறுவனங்கள் மீது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். அதன் பிறகு அங்கே, அந்த நிறுவனங்கள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் செயல்படத் தொடங்கின.
ஆனால், மற்ற மாவட்டங்களில் இந்தப் பிரச்சினை தொடரத்தான் செய்கிறது. குறிப்பாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி கிராமத்தில் பெண்களுக்கும், நுண் கடன் நிறுவனத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, விவகாரம் காவல் துறை வரை சென்றிருக்கிறது. இதற்கிடையே இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு தலையிடக் கோரி, முதல்வருக்குக் கடிதம் எழுதியிருக்கிறது அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகம்.
» புதிய முதலீடுகளை ஈர்க்க ‘ஒளிரும் தமிழ்நாடு மாநாடு’: நாளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
அந்த அமைப்பின் மதுரை மாவட்ட அமைப்பாளர் நிவேதா, முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “ஊரடங்கு காரணமாக கிராமப்புற உழைக்கும் மக்கள் வருமானமின்றித் தவிக்கிறார்கள். 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வேலை வாய்ப்பளிக்க வேண்டும் என்ற அரசின் வழிகாட்டுதலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
வெறும் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே வேலை தருகிறார்கள். இதனால் உணவுக்கே பணமில்லாத நிலையில் கிராமப்புறப் பெண்கள் தவிக்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்கள் உணவுக்காக வைத்திருக்கிற சிறு தொகையினையும் நுண் கடன் நிறுவனத்தினர் பறித்துச் செல்கிறார்கள். தமிழ்நாடு அரசின் கந்துவட்டி தடைச் சட்டத்தின்படி, கடனுக்கு மாதம் 1.5 சதவீதம் அல்லது வருடத்துக்கு 18 சதவிகிதத்துக்கு மேல் வட்டி வசூலிக்கக் கூடாது.
ஆனால், இந்த நிறுவனத்தினர் குறைந்தது 24 சதவீதம் முதல் வட்டி வசூல் செய்கிறார்கள். கூடவே, 30 ஆயிரம் கடனில் இன்சூரன்ஸுக்கு ரூ.2 ஆயிரம், பரிசீலனைக் கட்டணம் ரூ.500 என்று பிடித்தம் செய்துகொள்கிறார்கள். அதையும் சேர்த்தால் 40 சதவிகித வட்டி வருகிறது. எனவே, இப்படிக் கொள்ளை வட்டி வசூலிக்கும் நிறுவனங்கள் மீது கந்துவட்டி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிறுவனங்கள் செயல்படத் தடை விதிக்க வேண்டும்.
நியாயமான கடன் வசூலிக்கும் நிறுவனங்களை மட்டுமே செயல்பட அனுமதிக்க வேண்டும். இதுபோன்ற நிறுவனங்களிடம் சிக்கிய பெண்களை மீட்கும் வகையில் அவர்களது சிறு கடன்களை அரசே திரும்பச் செலுத்த வேண்டும்” என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago